மாநிலச் செயற்குழு – ஜனவரி 25 2022 – திருச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு கடந்த ஜனவரி -25ஆம் தேதி திருச்சியில் நடைபெற்றது. இதில் அடுத்த கட்ட செயல்திட்டத்திற்கான அறிவிப்பும் அதற்கான வழிகாட்டல்களையும் மாநில நிர்வாகிகள் வழங்கினார்கள்.

செயற்குழு

கடந்த டிசம்பர் மாதம் கோவையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக்குழு நடைபெற்று அதில் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாநில தலைமையின் அடுத்த கட்ட செயல்திட்டமான பித் அத் ஒழிப்பு மாநாட்டை நடத்துவதற்கான அறிவிப்பை மாநில தலைவர் எம்.எஸ்.சுலைமான் அவர்கள் அறிவித்தார்கள். இந்த அறிவிப்பிற்கு பிறகு, ஆயிரக்கணக்கான பொதுக்குழு உறுப்பினர்களும்! மாநாட்டிற்கான தேதியை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில் ஜமாஅத்தின்  செயற்குழுவிற்கான அறிவிப்பு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.

கடந்த ஜன-25 ஆம் தேதி திருச்சி, காஜா நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்.s. மஹாலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தின் மாநிலச் செயற்குழு நடைபெற்றது. காலை 9:00 மணிக்கு ஆரம்பித்த இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தின் மாநில தலைவர் எம்.எஸ்.சுலைமான் தலைமை தாங்கி நிகழ்சியை துவக்கி வைத்தார். இதில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முதல் உரையாக மாநில பேச்சாளர் சபீர் அலி M.I.Sc. அவர்களின் உரை உற்சாகமூட்டியது. இந்த உரை செயற்குழு உறுப்பினர்களுக்கு பயனக்கலைப்பை புறந்தள்ளி புத்துணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.

அதனையடுத்து பேசிய மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்திற்கான சில நிர்வாக ரீதியிலான சில ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினார்கள். குறிப்பாக அடுத்த தலைமுறையை ஏகத்துவக்கொள்கையில் உறுதி படைத்தவர்களாக உருவாக்கும் பயிற்சிக் களமான மக்தப் மதரஸாக்களை புதிய பரிமாணத்தோடு தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்துவதற்கான பல திட்டங்களை எடுத்துரைத்தார்கள்.

மேலான்மைக்குழு தலைவராக ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அதன் உறுப்பினர்களாக அப்துந்நாசர்,சபீர் அலி, மற்றும் இ.முஹம்மது ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டனர். அதனைத்தொடர்ந்து ஜமாத்தின் பொருளாதாரம் குறித்த விபரங்களை ஆய்வு செய்யும் மாநில தணிக்கை குழு தலைவராக ஏற்கனவே மயிலை அப்துர் ரஹீம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில் அதன் உறுப்பினர்களாக கோவை.ரஹ்மத்துல்லாஹ், நெல்லை யூசுப் அலி ஆகியோர் நியமிக்கப்பட்டு செயற்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது.

அனாச்சாரங்களை களையெடுக்கும் பித் அத் ஒழிப்பு மாநாடு

தமிழகத்தில் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம்களிடத்திலும் நிலவும் மூடநம்பிக்கைகளையும், இஸ்லாத்தின் பெயரால் பின்பற்றப்படும் இஸ்ல்லாத்திற்கு முரணான காரியங்களையும் எதிர்த்து வீரியமாக பிரச்சாரம் செய்து ஓரிறைக்கொள்கையை உயிர்ப்போடு எடுத்துச் சொல்வதை உயிர் மூச்சாகக் கொண்டிருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எனும் இந்த பேரியக்கம் இணைவைப்பிற்கு எதிராக நடத்திய பிரம்மாண்டமான மாநாட்டைப்போல், இறைவனின் இறுதித்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையில்லாமல் தன்னிச்சையாக முஸ்லிம்களால் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் பல அனாச்சாரங்களை களையெடுக்கும் அடுத்த கட்டப் பணியை கையிலெடுத்து அதற்காக ஒரு மாநாட்டை அறிவித்த மாநில தலைவர் எம்.எஸ்.சுலைமான் அவர்கள், செயற்குழுவின் முக்கிய நிகழ்வாக தமிழக முஸ்லிம்களிடம் நிலவும் அனாச்சாரங்களையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும், இறைத்தூதரின் போதனைகளையும் நினைவூட்டி, மாநாட்டை மையப்படுத்தி நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகளையும் அதற்கான உக்திகளையும் விளக்கி, இறுதியாக மாநாட்டிற்கான தேதியை அறிவித்தார்கள்.

இன்ஷா அல்லாஹ்.. எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த மாநாட்டிற்கான லோகோவை மாநில மேலான்மைக்குழு தலைவர் ஷம்சுல் லுஹா ரஹ்மானி அவர்களும் மாநில தணிக்கை குழு தலைவர் அப்துர் ரஹீம் அவர்களும் இணைந்து செயற்குழு மேடையில் அறிமுகம் செய்தார்கள்.

மாநாட்டிற்கான தேதி அறிவிப்பும் அதற்கான லோகோவும் வெளியிட்ட கணமே அதற்கான களப்பணிக்கு தயாரகிவிட்டோம் என்ற ஏகத்துவச் சொந்தங்களின் ஆரவாரக்குரல்களை ஒட்டு மொத்த சமூக வலைதளங்களையும் ஆக்கிரமித்திருந்த பித்அத் ஒழிப்பு மாநாட்டின் லோகோக்கள் உணர்த்தின.

திசையெங்கும் ஒலித்த தீர்மாணங்கள்

இந்திய ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சிப்பொறுப்பை ஏற்று மோடி பிரதமரான நாள் முதல் தொடர்ச்சியாக இயற்றப்படும் மக்கள் விரோத சட்டங்களையும், முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் அடக்கு முறைகளையும், அரசியல் சாசனத்திற்கு ஊறு விளைவிக்கும் செயல்பாடுகளையும் எதிர்த்து செயற்குழு தீர்மாணங்களை மாநில செயலாளர் ஐ.அன்சாரி அவர்கள் வாசித்தார்கள்.

இனிதே நிறைவுற்ற மாநிலச் செயற்குழு –

காலை துவங்கிய செயற்குழு நிகழ்வு தீப்பொறியை கிளப்பிய தீர்மானங்களோடு இறுதிக்கட்டத்தை நெருங்கி மாநிலச் செயலாளர் எம்.ஏ. சேட் முஹம்மது அவர்களின் நன்றியுரையோடு இனிதே நிறைவுற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here