நீர் அருந்த வந்த சிறுவனை காட்டுமிராண்டி தனமாக தாக்கியதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

உத்திர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள தஸ்னா தேவி கோயிலில் ஒரு முஸ்லிம் சிறுவன் கடுமையாக தாக்கப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அந்த முஸ்லிம் சிறுவனிடம் பெயர் கேட்டு எதற்காக இங்கே வந்தாய் என்று விசாரிக்கப்படும் போது நான் நீரருந்த வந்தேன் என்ற வார்த்தைகளுக்கு பிறகு அவர் கடுமையாக தாக்கப்படுகிறார். ஒருவர் தண்ணீர் அருந்த வந்ததற்காகவும், முஸ்லிம் என்பதற்காகவும் இப்படி கடுமையாக தாக்கப்படுவது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

மனிதாபிமானமும், மனித நேயமும் உள்ளவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக இப்படி தாக்கியதை கடுமையாக எதிர்க்கிறார்கள்.

சிறுவன் என்று பாராமல் கடுமையாக தாக்குவதும், அவனுடைய பிறப்புறுப்பிலேயே காலால் எட்டி, எட்டி மிதிப்பதும் கடுமையான கண்டனத்திற்குரியது. அந்த வீடியோவை காணும் நெஞ்சங்களை உறைய வைக்கக் கூடியதாக அந்த காட்சிகள் இருக்கின்றது.

தாக்கியவர் ஒரு சங்பரிவார சிந்தனை உள்ளவர் என்பது அவருடைய சமூக வலைதள பக்கங்கள் தெளிவாக எடுத்துரைக்கிறது. இதற்கு முன் இந்தியாவில் நடந்த பல வன்முறைச் சம்பவங்களை அவர் தன்னுடைய சமூக வலைதளங்கள் மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

அவர் ஓர் இஸ்லாமிய எதிர்ப்பு சிந்தனை உள்ளவர் என்பது அவருடைய பதிப்புகளில் காணமுடிகின்றது.

#MuslimAreTerrorists
#JaiHinduRashtra
அவர் பதிந்த ஹேஷ் டேக்குகளை பார்க்கின்ற போது தெளிவாக வெட்ட வெளிச்சமாக ஆகின்றது.

இது போன்ற மத துவேச சிந்தனை உள்ளவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்க கூடியதாகவும் உலக அரங்கில் இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மை உயர்வதற்கும் வழிவகுக்கும்.

மதத்தின் பெயரால் மீண்டும் இது போன்ற வன்முறை தாக்குதல்கள் நடைபெறாமல் இருப்பதற்கு ஆளக்கூடிய அரசுகள் தேவையான வழிவகைகளை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
இ.முஹம்மது,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.