அமைப்பு நிர்ணயச் சட்டம் – 2017

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அமைப்பு நிர்ணயச் சட்டம் – 2017

சட்ட விதிகள்

 1. பெயர்

அமைப்பின் பெயர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆகும்.

 1. பதிவு மற்றும் தலைமை அலுவலகம்

அமைப்பின் பதிவு மற்றும் தலைமை அலுவலகம் தற்போது எண் :30 அரண்மனைக்காரன் தெரு, மண்ணடி, சென்னை – 1 என்ற முகவரியில் இயங்கும். தேவைக்கேற்ப தலைமை அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்ளவும் பல்வேறு அலுவலகங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் இவ்வமைப்பிற்கு அதிகாரமுள்ளது.

 1. மாவட்டப் பதிவாளர் பொறுப்பு

சங்களின் பதிவாளர் மற்றும் வட சென்னை மாவட்டப் பதிவாளர், வட சென்னை மாவட்டப் பதிவாளர் அலுவலகம் – சென்னை 1.

 1. அமைப்பின் துவக்க நாள்

டிசம்பர் -1, 2003.

 1. அமைப்பின் அலுவல் நேரம்

காலை 10:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை

 1. கொடி

இவ்வமைப்பின் கொடி மூன்று வண்ணம் கொண்டதாகும். மேலே பச்சை, நடுவில் வெள்ளை, கீழே கருப்பு என சம அளவில் இருக்கும்.

 1. அமைப்பின் கொள்கைகள்

7(1) முஸ்லிம்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும், எதனையும் வணங்கக் கூடாது.

7(2) திருக்குர்ஆனும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான வழிகாட்டுதலும் ஆகிய இரண்டு மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாகும்.

விளக்கம் : திருக்குர்ஆனுக்கு முரண்படாமலும், சரியான அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அமைந்துள்ள நபி வழிகள் மட்டுமே ஆதாரப்பூர்வமானவை.

7(3) திருக்குர்ஆனையும் ஆதாரப்பூர்வமான நபி வழியையும் தவிர வேறு எதுவும் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாகாது. இவ்விரண்டைத் தவிர வேறு எதனையும், எவரது கூற்றையும் மார்க்க ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

7(4) எந்தக் கருத்தாவது அல்லது எந்தச் செயலாவது திருக்குர்ஆனுக்கோ, ஆதாரப்பூர்வமான நபி வழிக்கோ முரணாக இருந்தால் அது எவரது கருத்தாக இருந்தாலும் எவரது செயலாக இருந்தாலும் அவை நிராகரிக்கப்படவும் எதிர்க்கப்படவும் வேண்டியதாகும்.

 1. அமைப்பின் முதன்மை நோக்கம்

மறுமை எனும் நியாயத் தீர்ப்பு நாளில் தாமும் மற்றவர்களும் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக அனைத்து உறுப்பினர்களும், தமது வணக்கங்களையும், அறப்பணிகளையும் அமைத்துக் கொள்வதே இவ்வமைப்பின் முதன்மை நோக்கமாகும்.

 1. அமைப்பின் செயல் திட்டங்கள்

9(1) ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக ஜனநாயக வழியிலும், சட்டப்பூர்வமான வழியிலும் பாடுபடுதல்.

9(2) அறவழிப் போராட்டத்தின் மூலம் உரிமை மீட்கப் போராடுதல்.

9(3) தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் முழு மூச்சுடன் எதிர்த்தல்.

9(4) இளைஞர்கள் வன்முறை வழி செல்லாமல் தடுக்க அறவழிப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி வழிமுறைகளைக் கற்றுக் கொடுத்து அவர்களைச் சிறந்த நெறியாளர்களாக உருவாக்கப் பாடுபடுதல்

9(5) மதவெறி, வன்முறைக் கலாச்சாரங்களை ஒழிப்பதற்குப் பாடுபடுவது.

9(6) முஸ்லிம் அல்லாத மக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் மத்தியில் உள்ள இடைவெளியை நீக்கும் வகையில் அவர்களுடன் கலந்துறவாடுதல், உண்மை இஸ்லாத்தின் போதனைகளை அவர்களிடம் கொண்டு செல்லுதல்.

9(7) மதத்தின் பெயரால் பாமர மக்கள் ஏமாற்றப்படுவதையும், சுரண்டப்படுவதையும், மூடநம்பிக்கைகளையும் பிரச்சாரத்தின் மூலம் தடுக்கவும், மக்கள் விழிப்படையவும் பாடுபடுதல்.

9(8) பெண்களுக்கு இஸ்லாம் உரிய உரிமைகளை வழங்கியிருந்தும் நடைமுறையில் அவர்களின் பல உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளை அவர்களுக்கு மீட்டுக் கொடுக்க அயராது உழைத்தல்.

9(9) முஸ்லிம் சமுதாயத்தில் நிலவும் இஸ்லாத்திற்கு விரோதமான கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் நற்போதனை மூலம் திருத்தப் பாடுபடுதல்.

9(10) அனாதைகள், முதியோர், கைவிடப்பட்டோர் ஆகியோரின் நலன் காக்கப் பாடுபடுதல்.

9(11) இஸ்லாமிய மற்றும் உலக கல்விக்காக கல்விக் கூடங்கள் நிறுவுதல்.

9(12) மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் துறைகளில் கல்வி வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முஸ்லிம்கள் அவர்களின் விகிதாச்சாரத்திற்கேற்ப தனி இட ஒதுக்கீடு பெறுவதற்காகப் பாடுபடுதல்.

9(13) விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்தல் முறையை மாற்றப் பாடுபடுதல். அவ்வாறு மாற்றப்படும் வரை உள்ளாட்சி அமைப்புகளிலும் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் முஸ்லிம்களின் மக்கள் தொகை அடிப்படையில் தனித் தொகுதி முறையை முஸ்லிம்களுக்குப் பெற்று தரப் பாடுபடுதல்.

9(14) தீண்டாமை, வரதட்சணை, வட்டி உள்ளிட்ட சமூகக் கொடுமைகளுக்கு எதிராகவும், சினிமா, ஆபாசம், அழகிப் போட்டி, காதலர் தினம் உள்ளிட்ட ஒழுக்கக் கேடுகளுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்தல், மனித வாழ்வை சீரழிக்கும் மது, போதைப் பொருள், புகையிலைப் பொருட்கள், சூதாட்டம், லாட்டரி போன்றவற்றை ஒழிக்கப் பாடுபடுதல்.

9(15) அடக்குமுறைகளுக்கும், வரம்பு மீறல்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும், சட்ட மீறல்களுக்கும் எதிராகப் போராடுதல். பாதிக்கப்பட்டவர்களுக்கும், அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கும் தேவையான அனைத்து வகையான உதவிகளையும் செய்தல்.

9(16) இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் அச்சுறுத்தலோ, பாதிப்புகளோ ஏற்பட்டால் அவற்றை ஜனநாயக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் வலிமையாக எதிர்ப்பது.

9(17) அனைத்து மத, இன மக்களும், அனைத்து மொழி பேசும் மக்களும் சகோதரத்துவ உணர்வுடன் வாழ நல்லிணக்கத்தை ஏற்படுத்தி தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது.

9(18) மனித நேயத்தை எடுத்துக் காட்டும் வகையில் அனைத்து மக்களுக்கும் இரத்ததானம் செய்தல், அது பற்றி ஆர்வமூட்டும் பிரச்சாரம் செய்தல்.

9(19) மத வேறுபாடின்றி அனைவருக்கும் பயன்படும் வகையில் மருத்துவ சேவைகள், மருத்துவ முகாம்கள், இரத்ததான முகாம்கள் நடத்துதல், முதியோர் இல்லங்கள், அநாதை இல்லங்கள் அமைத்து நிர்வகித்தல். இவை அனைத்தையும் முற்றிலும் இலவசமாகச் செய்தல். அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ்கள் வாங்கி பராமரிப்பது, இயலாதவர்களுக்கு இலவசமாக இயக்குதல்.

9(20) பேரிடர்கள் ஏற்படும்போது மனித நேயத்துடன் களமிறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதல்.

9(21) ஜகாத் நிதியை முஸ்லிம்களிடம் திரட்டி அதற்குத் தகுதியானவர்களுக்கு வழங்குதல். அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கும் பயன்படுத்துதல்.

9(22) ஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மத்தைத் திரட்டி பெருநாள் தினத்தில் எந்த ஏழையும் பட்டினி கிடக்காத வகையில் ஏழைகளுக்கு கண்ணியமான முறையில் விநியோகம் செய்தல்.

9(23) மக்கள் அறிவைப் பெருக்கிக் கொள்வதற்காக நூலகங்கள், பயிலரங்கங்கள் அமைத்தல்.

9(24) திருக்குர்ஆன் மற்றும் நபிவழி அடிப்படையில் வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்வதற்கும் செயல்படுவதற்கும் ஏற்ற வகையில் அலுவலகங்களை அமைத்தல்.

9(25) இஸ்லாத்தில் ஆர்வமூட்டப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட அனைத்து அறப்பணிகளையும் நடைமுறைப்படுத்தப் பாடுபடுதல்.

9(26) பத்திரிக்கைகள், மலர்கள், நூல்கள், பிரசுரங்கள், சுவரொட்டிகள், ஒளி-ஒலி நாடாக்கள், குறுந்தட்டுகள் வெளியிடுதல், தெருமுனைப் பிரச்சாரங்கள், பிரச்சாரக் கூட்டங்கள், கருத்தரங்குகள், விவாதங்கள், மாநாடுகள் நடத்துதல், தொலைக்காட்சி, வானொலியில் நிகழ்ச்சிகளை வழங்குதல்.

9(27) நோக்கங்கள் நிறைவேற நவீன விஞ்ஞானத்தையும், விஞ்ஞான தகவல் தொடர்பு சாதனங்களையும் கம்ப்யூட்டர், இண்டர்நெட் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்துதல்.

9(28) மேற்கண்ட பணிகளைச் செய்வதற்காக சொத்துக்கள் வாங்கிப் பராமரித்தல்.

9(29) நிதிக்காக உண்டியல், சந்தா, நன்கொடை மூலம் பொருள் திரட்டுதல்.

9(30) நோக்கங்கள் நிறைவேறவும், திட்டங்களைச் செயல்படுத்தவும் சிறப்புக் குழுக்களையும் அமைப்புகளையும் ஏற்பாடு செய்தல்.

9(31) மனித சக்தி, பொருளாதாரம் மற்றும் சூழ்நிலைக்கேற்ப அமைப்பின் செயல்திட்டங்கள் நிறைவேற இவ்வமைப்பு பாடுபடும்.

 1. அரசியல் நிலைப்பாடு

10(1) உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகிய எந்தத் தேர்தலிலும் இவ்வமைப்பு போட்டியிடாது. இவ்வமைப்பின் உறுப்பினர்களும் போட்டியிடக் கூடாது. அமைப்பின் பெயரையோ, கொடியையோ, அடையாளத்தையோ பயன்படுத்தக் கூடாது.

10(2) உள்ளாட்சி, சட்டமன்றம், பாராளுமன்றம் ஆகிய தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதாரவாக பிரச்சாரம் செய்வதோ, ஆதரித்து கருத்து சொல்வதோ கூடாது.

10(3) அசாதாரண சூழலில் உள்ளூர் மக்கள் ஒருமித்து சமுதாய நலன் கருதி எடுக்கும் உள்ளாட்சி தேர்தல் நிலைப்பாட்டை தலைமை ஒப்புதலுடன் உள்ளூர் நிர்வாகிகள் மட்டும் பிரச்சாரம் செய்யலாம்.

 1. உயர்நிலைக் குழு

11(1) மேலாண்மைக்குழு, நிர்வாகக் குழு, தணிக்கைக் குழு ஆகிய மூன்றும் இணைந்தது உயர்நிலைக்குழு என்று அழைக்கப்படும்.

11(2) குறைந்தது வருடத்திற்கு  இருமுறை இக்குழு கூட்டப்பட வேண்டும்.

11(3) உயர்நிலைக்குழுக் கூட்டத்தை மாநிலத் தலைவர் கூட்டுவார்.

11(4) உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் அனைத்து மட்ட பொதுக்குழுவிலும், செயற்குழுவிலும் கலந்து கொள்ளும் அதிகாரம் உண்டு.

 1. மேலாண்மைக்குழு

12(1) மேலாண்மைக்குழு உறுப்பினர்களை அதற்குரிய விதிகளின்படி உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்து பொதுக்குழுவில் பரிந்துரை செய்து ஒப்புதல் பெறுவர்.

12(2) மாநிலப் பொதுக்குழு கூட்டத்தை மேலாண்மைக்குழுதான் கூட்டும். இது தவிர அவசர பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரமும் மேலாண்மைக் குழுவிற்கே உண்டு. பொதுக்குழு அழைப்பு மேலாண்மைக்குழுத் தலைவர் பெயரில் அனுப்பப்பட வேண்டும்.

12(3) பொதுக்குழு உறுப்பினர் பட்டியலை முழு முகவரியுடன் பொதுக்குழு கூடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு மேலாண்மைக் குழுவிடம் மாநில நிர்வாகம் ஒப்படைக்க வேண்டும்.

12(4)குர்ஆன் மற்றும் நபி வழியை அறிந்து ஆய்வு செய்யும் தகுதி உள்ளவர்கள், முன்னாள் மாநில நிர்வாகிகளில் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே மேலாண்மைக் குழு உறுப்பினர் பதவிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும்.

12(5) மேலாண்மைக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

12(6) மேலாண்மைக்குழுவின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாகும்.

12(7) நிர்வாகத்தில் தலையிட மேலாண்மைக்குழுவுக்கு இவ்வமைப்பின் சட்ட விதிகளில் வழங்கப்பட்ட அதிகாரம் தவிர வேறு அதிகாரம் இல்லை. தக்க ஆலோசனை மட்டும் கூறலாம்.

13.மாநில நிர்வாகக் குழு

13(1) இவ்வமைப்பின் தலைமை நிர்வாகம் அதன் மாநில நிர்வாகக் குழுவாகும். அது ஒரு தலைவர், ஒரு பொதுச் செயலாளர், ஒரு பொருளாளர். ஒரு துணைத் தலைவர், ஒரு துணைப் பொதுச் செயலாளர் மற்றும் இருபதுக்கு மிகாமல் செயலாளர்கள் அடங்கியதாகும்.

13(2) இது மாநிலப் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும்.

13(3) மாநில நிர்வாகக் குழுவின் பதவிக் காலம் அதிகபட்சம் மூன்று ஆண்டுகளாகும்.

13(4) தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய மூன்று பொறுப்புகளில் எவற்றையாயினும் தொடர்ந்து இரண்டு பதவிக் காலத்திற்கு மேல் எவரும் வகிக்கக் கூடாது.

13(5) தொடர்ந்து மூன்று பதவிக் காலத்திற்கு மேல் யாரும் மாநில நிர்வாகத்தில் அங்கம் வகிக்கக் கூடாது.

13(6) ஒரு பதவிக்காலம் இடைவெளி விட்டு மீண்டும் பதவிக்கு வர தடையில்லை.

13(7) ஓராண்டிற்குக் குறைவாக பதவி விகித்தவர் ஒரு பதவிக்காலத்தை அடைந்தவராகக் கருதப்படமாட்டார்.

13(8) நிர்வாகக் குழு கூட்டம் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டப்படும். இதற்கான அறிவிப்பு ஏழுநாள் முன்னதாக அனுப்பப்படும். மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இதன் கோரமாகும். அவசர நிர்வாகக் குழுவிற்கு ஒரு நாள் முன்னதாகத் தெரிவிக்க வேண்டும். சுற்றறிக்கை மூலமாகவும் நிர்வாகக் குழு தீர்மானங்களை நிறைவேற்றலாம்.

13(9) தலைவர் : இவரே இவ்வமைப்பின் முதன்மை நிர்வாகியாவார். இவ்வமைப்பின் அன்றாட அலுவலகப் பணிகளையும், நிர்வாகத்தையும் இவர் கண்காணிப்பார்.

13(10) பொதுச் செயலாளர் : இவ்வமைப்பின் அன்றாட அலுவல்களையும், நிர்வாகத்தையும் தலைவருடன் இணைந்தோ அல்லது அவரது அனுமதியுடனோ கவனிப்பார். தலைமை நிர்வாகக் குழு எடுக்கும் முடிவுகளைச் செயல்படுத்துவார். தலைவர் ஒப்புதலுடன் நிர்வாகக் குழு கூட்டத்தைக் கூட்டுவார். அமைப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளின் மீது தலைவர் ஒப்புதலுடன் எதிர் நடவடிக்கை மேற்கொள்ளவும் வழக்கு தொடரவும் பொதுச் செயலாளருக்கு அதிகாரம் உள்ளது.

13(11) பொருளாளர் : இவ்வமைப்பின் பொருளாதாரம் சம்பந்தமான அனைத்துவரவு, செலவுகளை இவர் கவனிப்பார். வங்கிக் கணக்குகளை தலைவருடனும், பொதுச் செயலாளருடனும் இணைந்து இயக்குவார். தலைவர், பொதுச் செயலாளர் அனுமதியின்றி இவர் தன்னிச்சையாக செலவிடும் அதிகாரம் இல்லை.

13(12) துணைத் தலைவர் : தலைவருக்கு உதவியாக இருப்பார். தலைவர் இல்லாதபோது அவரது பொறுப்புகளை நிறைவேற்றுவார். தலைவர் அளிக்கும் பணிகளையும் ஆற்ற வேண்டிய கடமை இவருக்கு உண்டு.

13(13) துணைப் பொதுச் செயலாளர் : பொதுச் செயலாளர் இல்லாதபோது அவரது பணிகளைக் கவனிப்பார். பொதுச் செயலாளர் அளிக்கும் பணிகளையும் ஆற்ற வேண்டிய கடமை இவருக்கு உண்டு.

13(14) மாநிலச் செயலாளர்கள் : தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகக் குழு இடும் பணிகளைச் செய்ய வேண்டும்.

 1. அமைப்பின் அலுவலக முறை

அமைப்பின் அலுவல்கள் மாநில நிர்வாகக் குழுவால் மேற்கொள்ளப்படும்.

 1. அமைப்பின் அலுவல் அதிகாரி

அமைப்பின் அன்றாட அலுவல்களையும், நிர்வாகத்தையும் மாநிலத் தலைவரே கவனிப்பார்.

 1. அமைப்பின் வழக்குகள்

அமைப்பிற்காக வழக்குத் தொடரவோ அமைப்பின் மீது தொடரப்படவோ வேண்டுமெனில் அமைப்பின் பொதுச் செயலாளர் பெயரிலேயே செய்யப்பட வேண்டும்.

 1. மாநிலத் தணிக்கைக் குழு

17(1) அமைப்பின் கணக்குகளை தணிக்கை செய்வதற்காக மாநில நிர்வாகக் குழு ஆலோசனையுடன் ஐந்து நபர்களுக்கு மிகாமல் மேலாண்மைக்குழு தேர்வு செய்து பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும்.

17(2) தங்களில் ஒருவரை இக்குழு தலைவராக தேர்வு செய்ய வேண்டும்.

17(3) மூன்று மாதத்திற்கு ஒருமுறை இக்குழு கூட வேண்டும்.

17(4) கணக்குகளைப் பராமரித்தல் தொடர்பாக தணிக்கைக் குழுவின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நிர்வாகத்திற்கு கடமையாகும்.

17(5) மூன்று மாதத்திற்கு ஒருமுறை காலாண்டு வரவு செலவு கணக்குகளை தணிக்கைக் குழுவிற்கு நிர்வாகக் குழு வழங்க வேண்டும்.

17(6) கணக்குகளை தணிக்கை செய்யும்போது கணக்குப் புத்தகம், மினிட் புத்தகம், ரசீது புத்தகம், வங்கிக் கணக்கு உள்ளிட்ட தேவையான அனைத்தையும் பார்வையிடும் அதிகாரம் தணிக்கைக் குழுவுக்கு உள்ளது.

 1. மாநில அணிச் செயலாளர்கள்

18(1) தேவையான அணிகளை உருவாக்க மாநில நிர்வாகக் குழுவிற்கு அதிகாரம் உள்ளது.

18(2) ஒவ்வொரு அணிக்கும் ஒரு மாநில அணிச் செயலாளர் நியமிக்கப்படுவார்.

18(3) இவர்கள் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆகமாட்டார்கள்.

 1. மாநிலப் பேச்சாளர்

உயர்நிலைக் குழு உறுப்பினர்களே மாநிலப் பேச்சாளர்களாவார்கள்.

 1. மாநிலச் செயற்குழு

20(1) மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், மாநிலத் தணிக்கைக் குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாநில அணிச் செயலாளர்கள், நடப்பு நிர்வாகத்திற்கு முந்தைய பதவிக் காலத்தில் நிர்வாகத்தில் இருந்த முன்னாள் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணிச்செயலாளர்கள், மண்டல நிர்வாகிகள், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் ஆவார்கள். (மண்டலத்தின் தலைவர்களே மண்டலங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் ஆவர்).

20(2) விதி 20(1)ல் கூறப்பட்டவர்களில் செயற்குழுவில் கலந்து கொள்ளக்கூடாத வகையில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்கள் செயற்குழுவில் கலந்து கொள்ள இயலாது.

20(3) விதி 20(1)ல் கூறப்பட்ட செயற்குழு உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் 25 சதவீதத்திற்கு மிகாமல் உறுப்பினர்களை நியமனம் செய்யும் அதிகாரம் உயர்நிலைக்குழுவிற்கு உண்டு.

20(4) மாநிலச் செயற்குழு குறைந்தது 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டும்.

20(5) தலைவர் ஒப்புதலுடன் மாநிலச் செயற்குழு கூட்டங்களை பொதுச் செயலாளர் கூட்டுவார்.

 1. மாநிலப் பொதுக்குழு

21(1) மாநிலச் செயற்குழு உறுப்பினர்களும், மாவட்டப் பேச்சாளர்களும், கிளை நிர்வாகிகளும், நடப்பு நிர்வாகத்திற்கு முந்தைய பதவிக்காலத்தில் நிர்வாகத்தில் இருந்த முன்னாள் மாவட்ட நிர்வாகிகளும் பொதுக்குழு உறுப்பினராவர். மற்றும் மாநில நிர்வாகத்தால் தகுதியின் அடிப்படையில் பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டவர்களும் மாநிலப் பொதுக்குழு உறுப்பினராவர்.

21(2) குறைந்தது ஆண்டுக்கு ஒருமுறை மாநிலப் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும்.

21(3) ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தை மேலாண்மைக்குழுத் தலைவர் கூட்டுவார்.

21(4) ஆண்டுப் பொதுக்குழு கூட்டம் ஒவ்வொரு நிதியாண்டு முடிந்த 6 மாதங்களுக்குள் கூட்டப்பட்டு பின்வரும் பொருட்கள் குறித்து விவாதிக்கும்.

Ø       ஆண்டு அறிக்கையின் மீது விவாதித்தல்.

Ø       சென்ற நிதியாண்டின் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் மீது விவாதித்து அங்கீகரித்தல்

Ø       வரும் நிதியாண்டிற்கான வரவு செலவுகள் குறித்து விவாதித்தல்

Ø       சிறப்புத் தீர்மானம் இருப்பின் நிறைவேற்றல்

Ø       இதர தீர்மானங்கள் நிறைவேற்றல்

Ø       ஒவ்வொரு பொதுக்குழு கூட்டத்திலும் மேலாண்மைக் குழுவின் தலைவர் அறிக்கை வாசிப்பார். பின்னர் தணிக்கை குழு சார்பாக தணிக்கை குழுத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர் தணிக்கைக் குழுவின் அறிக்கையை வாசிப்பார். இதன் பின்னரே பொதுக்குழு நிகழ்ச்சிகள் தொடங்க வேண்டும்.

21(5) பொதுக்குழு கூட்டத்திற்கு மேலாண்மைக்குழுத் தலைவரே தலைமை தாங்குவார்.

 1. சிறப்புப் பொதுக்குழு கூட்டம்

22(1) அவசியம் எனக் கருதும்போது சிறப்புப் பொதுக்குழுவை மேலாண்மைக்குழுத் தலைவர் கூட்டுவார்.

22(2) மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்களில் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்டக்கோரி மனு செய்தால், அம்மனு கிடைக்கப் பெற்ற முப்பது நாட்களுக்குள் மேலாண்மைக் குழுத் தலைவர் சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்.

22(3) குறைந்தபட்ச எண்ணிக்கை சாதாரணமாக பொதுக்குழுவிற்கான கோரம் எனப்படும். குறைந்தபட்ச எண்ணிக்கை மொத்த பொதுக்குழு உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்காகும். பொதுக்குழு கூட்ட நேர ஆரம்பத்தின் போது குறைந்த பட்ச எண்ணிக்கைக்கு குறைவான உறுப்பினர்கள் இருந்தால் கூட்டம் ஒரு மணி நேரம் தள்ளி வைக்கப்படும். அவ்வாறு தள்ளி வைத்து நடத்தப்படும் கூட்டத்திற்கு குறைந்தபட்ச எண்ணிக்கை அவசியமில்லை.

 1. பொதுக்குழு கூட்ட அறிவிப்பு

23(1) பொதுக்குழு கூட்டம் நடப்பதற்கு பதினைந்து நாட்களுக்கு முன் எல்லா பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அறிவிப்பு செய்யப்படும். அசாதாரணமான சூழ்நிலையில் அவசரமாகக் கூட்டப்படும் பொதுக்குழுவுக்கு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அறிமுகமான ஏதேனும் ஒரு பத்திரிக்கையில் பொதுக்குழுவுக்கு பொது அழைப்பு விடுப்பது போதுமானதாகும்.

23(2) பொதுக்குழு கூட்டப்படும் நாள், நேரம், இடம் கூட்டப்படும் நோக்கம் அல்லது விவாதிக்கப்பட இருக்கும் பொருள் ஆகியவற்றுடன் கூட்டுபவரின் பெயர் மற்றும் பொறுப்பு அமைப்பின் எந்த சட்டவிதிகளின்படி கூட்டப்படுகிறது என்ற விபரமும் அறிவிப்பில் குறிப்பிடப்பட வேண்டும்.

 1. சிறப்புத் தீர்மானம்

24(1) அமைப்பின் சட்ட விதிகளைத் திருத்த, மாற்ற, சேர்க்க, நீக்க ஆகியவற்றுக்காக சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

24(2) கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களின் நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் சிறப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.

24(3) சிறப்புத் தீர்மானங்கள் அமைப்பின் சட்டவிதிகளாகக் கருதப்படும்.

 1. சிறப்பு அழைப்பாளர்கள்

மாநிலப் பொதுக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படுபவர்கள் 50க்கும் மிகாமல் இருக்க வேண்டும்.

 1. மாவட்ட நிர்வாகம்

26(1) ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர், மூன்று துணைச் செயலாளர்கள் ஆகிய ஏழு பேர் கொண்டது மாவட்ட நிர்வாகக் குழுவாகும்.

26(2) ஒரு மாவட்டத்திற்கு உட்பட்ட கிளைகள் மற்றும் பணிகளைக் கருத்தில் கொண்டு அந்த மாவட்டத்திற்கு துணைச் செயலாளர்களின் எண்ணிக்கையை மாநிலத் தலைமை அதிகப்படுத்தலாம்.

26(3) இக்குழு மாவட்டப் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும்.

26(4) இதன் பதவிக் காலம் அதிகபட்சம் மூன்று ஆண்டுகளாகும். தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய பொறுப்புகளில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து 2 முறை பதவி வகித்தவர் மேற்கூறிய பொறுப்பிற்கு மீண்டும் தேர்வு செய்யப் படமாட்டார். ஒரு பதவி கால இடைவெளிக்கு பின் தேர்வுசெய்ய தடையில்லை.

26(5) மாநிலத் தலைமைக்கு கீழ் அதன் அடுத்த அதிகாரமட்டமாக மாவட்ட நிர்வாகக் குழு செயல்படும்.

26(6) தத்தமது மாவட்டங்களுக்கு உட்பட்ட கிளைகள் மற்றும் அணிகளின் நடவடிக்கைகளை இக்குழு நேரடியாகக் கண்காணிக்கும்.

26(7) தலைவர் : இவர் மாவட்ட நிர்வாகத்தின் தலைமை நிர்வாகியாவார். மாவட்ட அமைப்பின் அன்றாட அலுவலகப் பணிகளையும், நிர்வாகத்தையும் கண்காணிப்பார். மாநில நிர்வாகக் குழுவின் உத்தரவுகளைச் செயல்படுத்துவார். மாவட்ட நிர்வாகக் குழு எடுக்கும் முடிவுகளைச் செயல்படுத்துவார். மாவட்ட நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தை கூட்டுவார். மாவட்ட அளவில் அமைப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளின் மீது மாநிலப் பொதுச் செயலாளர் ஒப்புதலுடன் வழிகாட்டுதலின் படியும் எதிர் நடவடிக்கை மேற்கொள்ளவும் வழக்குத் தொடரவும் இவருக்கு அதிகாரம் உண்டு.

26(8) செயலாளர் : மாவட்ட அமைப்பின் அலுவல்களையும் நிர்வாகத்தையும் தலைவரின் ஆலோசனைப்படி அவரது அனுமதியுடன் கவனிப்பார்.

26(9) பொருளாளர் : மாவட்ட பொருளாதார விஷயங்களுக்கும் அதன் கணக்குகளுக்கும் இவரே பொறுப்பாவார். மாவட்டத் தலைவர் மற்றும் மாவட்டச் செயலாளருடன் இணைந்து வங்கிக் கணக்குகளை இயக்குவார். தலைவர், செயலாளர் அனுமதியில்லாமல் பொருளாதாரத்தை செலவிட அதிகாரம் இல்லை.

26(10) துணைத் தலைவர் : இவர் தலைவருக்கு உதவியாகச் செயல்படுவார். தலைவர் இல்லாத போது அவரது பொறுப்புகளைக் கவனிப்பார்.

26(11) துணைச் செயலாளர்கள் : இவர்கள் செயலாளருக்கு உதவியாக இருப்பார்கள். தலைவரால் பணிக்கப்படும் பணிகளை துணைச் செயலாளர்கள் நிறைவேற்றுவர். செயலாளர் இல்லாத போது துணைச் செயலாளர்களில் ஒருவரை செயலாளர் பொறுப்புக்கு தலைவர் பரிந்துரைத்து தலைமையின் ஒப்புதல் பெறுவார்.

26(12) மாவட்ட அணிச் செயலாளர்கள் : மாவட்ட அணிச் செயலாளர்களை அணிக்கு ஒருவர் வீதம் மாநில நிர்வாகம் நியமனம் செய்யும்.

26(13) மாவட்டப் பேச்சாளர்கள் : மாவட்ட நிர்வாகத்தால் பரிந்துரை செய்யப்படுபவர்களிலிருந்து மாநில நிர்வாகம் மாவட்டப் பேச்சாளர்களை நியமிக்கும்.

26(14) மாவட்டப் பேச்சாளர்களின் நியமனக் காலம் இரண்டாண்டுகளாகும். மீண்டும் நியமிக்கப்பட தடையில்லை.

 1. மாவட்டச் செயற்குழு

27(1) மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள், நடப்பு நிர்வாகத்திற்கு முந்தைய பதவிக் காலத்தில் நிர்வாகத்தில் இருந்த மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணிச் செயலாளர்கள், மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்டப் பேச்சாளர்கள் மாவட்ட செயற்குழு உறுப்பினராவார்கள்.

27(2) விதி எண் 27 (1)ல் கூறப்பட்டவர்களில், செயற்குழுவில் கலந்து கொள்ளக்கூடாத வகையில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்கள் செயற்குழுவில் கலந்து கொள்ள இயலாது.

 1. மாவட்டப் பொதுக்குழு

28(1) மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், கிளை அணிச் செயலாளர்கள், கிளைப் பிரதிநிதிகள், மாநிலத் தலைமையால் அனுமதிக்கப்படும் சிறப்பு அழைப்பாளர்கள்.

28(2) மாவட்டப் பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைமையின் மேற்பார்வையில் நடத்தப்படும்.

28(3) மாநிலத்தின் பிரதிநிதி மாவட்டப் பொதுக்குழுவுக்கு தலைமை தாங்குவார்.

28(4) ஒவ்வொரு ஆண்டு பொதுக்குழுவிலும் மாவட்ட ஆண்டறிக்கை மற்றும் மாவட்ட வரவு செலவு அறிக்கை மாவட்ட நிர்வாகத்தால் சமர்ப்பிக்கப்படும்.

 1. கிளை நிர்வாகம்

29(1) ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர், ஒரு செயலாளர், ஒரு துணைச் செயலாளர், ஒரு பொருளாளர் ஆகிய ஐந்து  பேர் கொண்டது கிளை நிர்வாகக் குழுவாகும்.

29(2) கிளை நிர்வாகிகளின் பணிகள் மாவட்ட நிர்வாகிகள் போன்றதே

29(3) மாவட்டத் தலைமைக்கு கீழ் அதன் அடுத்த அதிகார மட்டமாக கிளை நிர்வாகக் குழு செயல்படும்.

29(4) இக்குழு கிளையின் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும்.

29(5) இதன் பதவிக்காலம் அதிகபட்சம் மூன்றாண்டுகள்.

29(6) கிளை நிர்வாகம் மாவட்ட ஒப்புதலுடன் அதிகப்பட்சம் நான்கு அணிச் செயலாளர்களை நியமித்துக் கொள்ளலாம்.

29(7) கிளை பிரதிநிதி : மாவட்டப் பொதுக்குழுவில் பங்கேற்க ஒவ்வொரு கிளையில் இருந்தும் விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் ஐந்துக்கும் மிகாமல் கிளைப் பிரதிநிதிகள் கிளைப் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்படுவர். (நிர்வாகிகள் நீங்கலாக) பத்துக்கும் குறைவான உறுப்பினர்கள் கொண்ட கிளைக்கு கிளைப் பிரதிநிதி தேர்வு செய்யப்படமாட்டார். கிளையின் ஒவ்வொரு முழுமை பெற்ற பத்து உறுப்பினர்களுக்கு ஒருவர் என்ற கணக்கில் கிளைப் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவர்.

 1. கிளைப் பொதுக்குழு

30(1) மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுடன் மாவட்ட நிர்வாகியின் தலைமையில் கிளைப் பொதுக்குழு நடத்தப்படும்.

30(2) கிளை உறுப்பினர்கள் அனைவரும் கிளைப் பொதுக்குழு உறுப்பினர்களாவர்.

30(3) ஒவ்வொரு ஆண்டுப் பொதுக்குழுவில் கிளையின் ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

 1. தேர்தல் அதிகாரி

31(1) மேலாண்மைக்குழு தங்களில் ஒருவரை மாநிலத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கும். தேர்தல் அதிகாரியாக உள்ளவர், அவர் நடத்தும் தேர்தலில் அவர் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது.

31(2) மாவட்டத்  தேர்தல் அதிகாரியாக மாநில நிர்வாகி அல்லது மாநில நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டவர் செயல்படுவார்.

31(3) மாவட்ட நிர்வாகக் குழுவால் நியமிக்கப்படும் மாவட்ட நிர்வாகி கிளைத் தேர்தல் அதிகாரியாவார்.

31(4) தேர்தல் அதிகாரியின் பணி அத்தேர்தலுடன் முடிவுபெறும்.

 1. உறுப்பினர்கள்

32(1) இவ்வமைப்பின் கொள்கைகளை ஏற்று நடந்து அதன் நோக்கங்களுக்காக பாடுபட விரும்பும் எவரும் இவ்வமைப்பின் உறுப்பினராகலாம்.

32(2) இவ்வமைப்பின் உறுப்பினர் வேறு எந்த அமைப்பிலோ, அரசியல் கட்சியிலோ உறுப்பினராக இருக்கக் கூடாது.

32(3) இவ்வமைப்பின் உறுப்பினராக விரும்புவோர் மாநில நிர்வாகம் நிர்ணயம் செய்யும் விண்ணப்பக் கட்டணத்துடன் மாநிலத் தலைமையிலிருந்து பெறப்படும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து மாவட்டத் தலைவர் மற்றும் கிளைத் தலைவர் பரிந்துரையுடன் தலைமைக்கு அனுப்ப வேண்டும்.

32(4) விண்ணப்பத்தை ஏற்கவோ காரணம் கூறாது மறுக்கவோ மாநில நிர்வாகக் குழுவிற்கு அதிகாரமுள்ளது.

32(5) மாநில நிர்வாகம் நேரடியாகவும் உறுப்பினர்களைச் சேர்க்கும். இவ்வாறு சேர்க்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டது தலைமைக் கிளை எனப்படும். இது மாநில நிர்வாகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும். இதற்கு தனி நிர்வாகம் இல்லை.

32(6) உறுப்பினர்கள் ஆண்டு சந்தாவாக ரூ.100 ஒவ்வொரு நிதியாண்டின் துவக்கத்திலும் செலுத்த வேண்டும்.

32(7) ஓர் ஆண்டு சந்தா செலுத்தாத உறுப்பினர்களுக்கு பொதுக்குழுவில் கலந்து கொள்ள மட்டுமே உரிமையுள்ளது. வேறு எந்த உரிமையும் கிடையாது. இரண்டு ஆண்டு சந்தாக்கள் செலுத்தாத உறுப்பினர்களின் பெயர்கள் உறுப்பினர் பதிவேட்டிலிருந்து எவ்வித முன்னறிவிப்புமின்றி நீக்கப்படும்.

32(8) உறுப்பினர்கள் அமைப்பின் கொள்கைகளை ஏற்று நடக்க வேண்டும். அமைப்பின் நோக்கங்கள் நிறைவேற பாடுபட வேண்டும்.

32(9) கிளைப் பொதுக்குழு கூட்டங்களில் நேரில் கலந்து கொள்ளவும், தீர்மானங்கள் கொண்டு வரவும், தீர்மானங்களின் மீது வாக்களிக்கவும், அமைப்பின் பதவிகளுக்கும் பொறுப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படவும் பிறரைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்கவும் உறுப்பினர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.

 1. பதவி விலகல்

33(1) பதவி விலக விரும்பும் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மாநிலத் தலைவரிடம் மனு செய்ய வேண்டும். தலைவர் பதவி விலக விரும்பினால் பொதுச் செயலாளரிடம் மனு செய்ய வேண்டும். நிர்வாகக் குழு அதை ஏற்றுக் கொண்டால் சம்பந்தப்பட்ட பொறுப்பினை வேறு உறுப்பினரிடம் நிர்வாகக் குழு ஒப்படைக்க வேண்டும். அடுத்து வரும் பொதுக்குழுவில் இதற்கு ஒப்புதல் பெற வேண்டும்.

33(2) மேலாண்மைக் குழு உறுப்பினர்களும், தணிக்கைக் குழு உறுப்பினர்களும், மேலாண்மைக்குழுத் தலைவரிடம் விலகல் கடிதத்தை அளிக்க வேண்டும்.

33(3) பதவி விலக விரும்பும் மாவட்ட நிர்வாகிகள் மாநிலத் தலைமைக்கு மனு செய்ய வேண்டும்.

33(4) பதவி விலகும் கிளை நிர்வாகிகள் மாவட்டத் தலைவருக்கு மனு செய்ய வேண்டும்.

33(5) பதவி விலகும் உறுப்பினர் கிளைத் தலைவரிடம் மனு செய்ய வேண்டும்.

33(6) பதவி விலகும் மாவட்ட நிர்வாகிகள் அல்லாத ஏனைய மாவட்டப் பொறுப்பாளர்கள் மாவட்டத் தலைவரிடம் மனு செய்ய வேண்டும்.

33(7) மாநில நிர்வாகத்தால் நியமிக்கப்படும் பொறுப்பாளர்கள் பதவி விலகும்போது மாநில நிர்வாகத்திடம் மனு செய்ய வேண்டும்.

33(8) தாமாக பதவி விலகியவர் மீண்டும் எந்தப் பொறுப்பிற்கும் ஒரு வருடத்திற்கு தேர்வு செய்ய தகுதி அற்றவராவார். தகுந்த காரணங்களின் அடிப்படையில் சிலருக்கு இந்த விதியைத் தளர்த்த மாநில நிர்வாகத்திற்கு அதிகாரம் உண்டு.

 1. பதிவாளரிடம் ஆவணத் தாக்கல்

சங்கப் பதிவாளரிடம் தாக்கல் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் அறிக்கைகள் மற்றும் படிவங்களை மேலாண்மைக்குழுத் தலைவர் தாக்கல் செய்வார்.

 1. நிதி நிர்வாகம்

35(1)  அமைப்பின் நிதி, அமைப்பின் பெயரில் வங்கிகளில் நடப்புக் கணக்கு ஆரம்பித்து வைப்பீடு செய்யப்படும். வங்கிக் கணக்கினை தலைவர் பொதுச் செயலாளருடன் இணைந்து பொருளாளர் இயக்குவார்.

35(2) அமைப்பின் அன்றாடச் செலவுகள், மாநில நிர்வாகக் குழுவின் ஒப்புதல் பெற்ற செலவுகள், தலைவர் அல்லது பொதுச் செயலாளர் ஒப்புதல் பெற்ற ரூ.25,000/- க்கு மிகாத செலவுகள், மேற்கூறியவை அல்லாத வேறு செலவுகளை பொருளாளர் செய்யக் கூடாது. எனினும் மாநில நிர்வாகக் குழு அவ்வப்போது நிர்ணயிக்கும் உச்ச வரம்பிற்கு மிகாத இதர செலவுகளை நிர்வாகக் குழு அனுமதி பெற்று பொருளாளர் செய்யலாம்.

 1. சொத்து

36(1) அமைப்பின் சொத்துக்களை விற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அந்த சொத்தின் மதிப்பிற்குப் பகரமாக வேறு சொத்தை வாங்க வேண்டும். ஜமாஅத்தின் நல்ல நோக்கத்திற்காக சொத்தை விற்கும் நிலை ஏற்பட்டு, அதற்கு பகரமாக சொத்து வாங்கும் நிலை இல்லாத சூழலில் நிர்வாகக் குழுவின் அனுமதி பெற்று விற்கலாம்.

36(2) நிர்வாகக்குழு ஒப்புதல் அளிக்கும் உயர்நிலைக்குழு உறுப்பினர்களில் ஒருவரின் பெயரில் சொத்துக்கள் வாங்கப் பட வேண்டும்.

36(3) அமைப்பிற்குச் சொந்தமான சொத்துக்களின் ஆவணங்கள் அனைத்தும் மாநிலப் பொருளாளர் பொறுப்பில் இருக்கும்.

 

 1. கணக்குகள் மற்றும் தணிக்கை

37(1) அமைப்பின் நிதியாண்டு ஒவ்வொரு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி துவங்கி மார்ச் 31ல் முடிக்கப்படும்.

37(2) அமைப்பின் அனைத்து கணக்கு பதிவேடுகளையும் பொருளாளர் பராமரித்து வருவார்.

37(3) ஒவ்வொரு நிதியாண்டும் அனைத்துக் கிளைகளும் அதன் வரவு செலவு கணக்குகளை சரி செய்து அந்த நிதியாண்டு முடிந்து ஒரு மாதத்திற்குள் மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

37(4) ஒவ்வொரு நிதியாண்டும் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அதன் வரவு செலவு கணக்குகளை சரி செய்து அந்த நிதியாண்டு முடிந்து ஒரு மாதத்திற்குள் மாநில நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

37(5) அன்றாட செலவுகள் : அமைப்பின் அன்றாட செலவுகளுக்காக ரூபாய் 10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) க்கு மேற்படாமல் தலைவரும், பொருளாளரும் தம் கைவசம் வைத்துக் கொள்ளலாம்.

37(6) பணியாளர் நியமனம் : தேவைக்கேற்ப அமைப்பின் பணிகளை கவனிக்க பணியாளர்களை நியமனம் செய்து அவர்களின் ஊதியம் மற்றும் பணி நிபந்தனைகளை மாநிலத் தலைவர் நிர்ணயம் செய்வார்.

 1. சிறப்புக் குழுக்கள்

சிறப்புப் பணிக்காக சிறப்புக் குழுக்களை ஏற்படுத்த மாநில நிர்வாகத்திற்கு அதிகாரமுள்ளது. ஒரு உறுப்பினர் ஒரு பொறுப்பை மட்டுமே வகிக்க முடியும்.

 1. சிறப்புக் கிளைகள்

தலைமை நிர்வாகக் குழுவின் அங்கீகாரத்துடன் தமிழகத்திற்கு வெளியே உள்ள பகுதிகளில் செயல்படும் கிளைகள் தலைமை நிர்வாகக் குழுவுக்குக் கீழே அதன் மாவட்ட அல்லது கிளை அமைப்பாக கருதப்படும்.

 1. மண்டல நிர்வாகம்

40(1) மண்டல நிர்வாகத்தின் பதவிக்காலம் 2 ஆண்டுகள். அசாதாரண சூழலில் பதிவிக் காலத்தை நீட்டவோ, குறைக்கவோ மாநில நிர்வாகத்திற்கு அதிகாரம் உண்டு.

40(3) ஒரு தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர், ஒரு துணைத்தலைவர் மற்றும் மூன்று துணைச் செயலாளர்கள் என மொத்தம் ஏழு பேர் கொண்டது மண்டல நிர்வாகம்.

40(4) விதி எண் 26 (5) முதல் 26(11) வரையிலான மாவட்ட நிர்வாகத்திற்கான அனைத்து விதிகளும் மண்டலத்திற்கு பொருந்தும். மேற்கூறிய விதிகளில் உள்ள மாவட்டம் என்று பயன்படுத்தப்பட்டுள்ள இடங்களில் மண்டலம் என்று பொருத்திக் கொள்ள வேண்டும்.

41.மண்டல அணிச் செயலாளர்கள்

மண்டல   அணிச் செயலாளர்களை ஒரு அணிக்கு தலா ஒருவர் வீதம் மண்டல நிர்வாகம் நியமனம் செய்யும்.

42 மண்டலச் செயற்குழு

42(1) சராசரியாக 6 மாதங்களுக்கு ஒரு முறை மண்டலச் செயற்குழு கூட்டப்படும்.

42(2) மண்டல நிர்வாகக் குழுவின் ஒப்புதல் அடிப்படையில் மண்டலத் தலைவர் மண்டல செயற்குழுவை கூட்டுவார்.

42(3) மண்டலச் செயற்குழுவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட மண்டலச் செயற்குழு உறுப்பினர்கள்

 • மண்டல நிர்வாகிகள்
 • மண்டல அணிச்செயலாளர்கள்
 • மண்டலப் பேச்சாளர்கள்
 • கிளை நிர்வாகிகள்
 • கிளை அணிச் செயலாளர்கள்

42(4) சிறப்பு அழைப்பாளர்கள்: மண்டல நிர்வாகத்தால் பரிந்துரைத்து ஒப்புதல் பெறப்பட்டவர்களும், மாநில நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாவார்கள்.

 

 1. மண்டலப் பொதுக்குழு

43(1) சராசரியாக ஆண்டிற்கு ஒரு முறை மண்டலப் பொதுக்குழு கூட்டப்படும்.

43(2) மாநில நிர்வாகத்தின் அனுமதி பெற்று மண்டலத் தலைவர் இப்பொதுக்குழுவை கூட்டுவார்.

43(3) மண்டலப் பொதுக்குழு உறுப்பினர்கள்

 • மண்டல நிர்வாகிகள்
 • மண்டல அணிச்செயலாளர்கள்
 • மண்டலப் பேச்சாளர்கள்
 • முன்னால் மண்டல நிர்வாகிகள் ( நடப்புக்கு முந்தைய காலம் )
 • கிளை நிர்வாகிகள்
 • கிளை அணிச் செயலாளர்கள்
 • கிளை உறுப்பினர்கள் ( மண்டலங்களுக்கு தனிச் சலுகை )

43(4) ஒவ்வொரு ஆண்டு பொதுக்குழுவிலும் மண்டல ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கை மண்டல நிர்வாகத்தால் சமர்ப்பிக்கப்பட வேண்டும்

44(4) தேர்தல் பொதுக்குழு:  மாநில நிர்வாகி அல்லது மாநில நிர்வாகத்தால் நியமிக்கப்படும் பொறுப்பாளரைக் கொண்டு மண்டலப் பொதுக்குழுவின் மூலம் மண்டல நிர்வாகம் தேர்வு செய்யப்படும்.

 1. மண்டலங்களின் கிளை நிர்வாகம்

44(1) ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர், ஒரு செயலாளர், ஒரு துணைச் செயலாளர், ஒரு பொருளாளர் ஆகிய ஐந்து பேர் கொண்டது கிளை நிர்வாகக் குழுவாகும்.

44(2) கிளை நிர்வாகிகளின் பணிகள் மண்டல நிர்வாகிகள் போன்றதே

44(3) மண்டலத் தலைமைக்கு கீழ் அதன் அடுத்த அதிகார மட்டமாக கிளை நிர்வாகக் குழு செயல்படும்.

44(4) இக்குழு கிளையின் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும்.

44(5) இதன் பதவிக்காலம் அதிகபட்சம் மூன்றாண்டுகள்.

 1. கிளை அணிச் செயலாளர்கள்

கிளை நிர்வாகம் மண்டல ஒப்புதலுடன் அதிகப்பட்சம் நான்கு அணிச் செயலாளர்களை நியமித்துக் கொள்ளலாம்.

 1. கிளைப் பொதுக்குழு

46(1) கிளைகள் குறைந்தது வருடத்திற்கு ஒரு முறை பொதுக்குழுவை கூட்ட வேண்டும். மண்டல நிர்வாகத்தின் மேற்பார்வையில் பொதுக்குழு கூட்டப்படும்.

46(2)  கிளை நிர்வாகிகள், கிளை அணிச் செயலாளர்கள் மற்றும் கிளை உறுப்பினர்கள் கிளைப் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆவார்கள்.

 1. சட்ட விதி மீறல் நடவடிக்கை

47(1) அமைப்பின் நலனிற்கோ, நோக்கத்திற்கோ, சட்ட விதிகளுக்கோ எதிராக எந்த உறுப்பினராவது செயல்பட்டால் அவரது நடவடிக்கை குறித்து அவர் உறுப்பினராக உள்ள கிளை அல்லது மாவட்ட நிர்வாகக் குழு தலைமை நிர்வாகக் குழுவிடம் அறிக்கை தாக்கல் செய்து அவரை நீக்கி நடவடிக்கை அல்லது இதர நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும்.

47(2) தலைமை நிர்வாகக் குழு அதனைப் பரிசீலித்து அப்பரிந்துரை சரியெனக் கண்டால் உறுப்பினரை அமைப்பிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கும் அல்லது இதர நடவடிக்கை எடுக்கும்.

47(3) அவ்வாறான உறுப்பினர்கள் மீது நேரடியான நடவடிக்கை மேற்கொள்ளவும் தலைமை நிர்வாகக் குழுவிற்கு அதிகாரம் உண்டு.

47(4) மாநில நிர்வாகிகள், தணிக்கைக் குழு உறுப்பினர்கள், மாநிலப் பேச்சாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உயர்நிலைக் குழுவிற்கு உண்டு.

 1. கோரம்

அனைத்துக் கூட்டங்களுக்கும் கோரம் அதன் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் (1/3) ஒரு பங்காகும்.

கோரம் இல்லாதபோது ஒரு மணிநேரம் தள்ளி வைத்து அதே கூட்டத்தை கூட்டலாம். இதற்கு கோரம் தேவையில்லை.

 1. விதி விலக்கு வழங்குதல்

அமைப்பின் விதிகளில் சிலவற்றிலிருந்து சிலருக்கு விலக்களிப்பது அவசியமென கருதும்போது அடுத்த பொதுக்குழு வரை விலக்களிக்கும் அதிகாரம் உயர்நிலைக் குழுவுக்கு உண்டு.

 1. வெளிநாட்டு விருதுகள்

இவ்வமைப்பு எந்த வெளிநாட்டு அரசிடமிருந்தோ, நிறுவனத்திடமிருந்தோ எந்தப் பொருளாதார உதவிகளோ, பரிசுகளோ, விருதுகளையோ பெறாது.

 1. அதிகாரம் வழங்குதல்

குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட அதிகாரத்தைப் பிறருக்கு வழங்குவதற்கும் உயர்நிலைக் குழுவிற்கு அதிகாரமுள்ளது.

 1. தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம்

அமைப்பின் சட்ட விதிகளில் குறிப்பிடப்படாத இதர விஷயங்களுக்கு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம்(1975) மற்றும் தமிழ்நாடு சங்கங்கள் பதிவு விதிகள் (1978) பொருந்தும்.

 1. ஒழுங்கு நடவடிக்கை

53 (1) மேலாண்மைக் குழு, தணிக்கைக் குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகி, மாநிலப் பேச்சாளர்கள் ஆகியோரை நீக்கும் அதிகாரம் உயர்நிலைக் குழுவிற்கு உள்ளது. எனினும் அடுத்து கூடும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும்.

53 (2) ஒரு உறுப்பினர் அடிப்படை கொள்கைக்கு முரணாக நடந்தால் அவர் உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார். ஒரு உறுப்பினர் அமைப்பிற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டாலோ, அடிப்படைக் கொள்கைக்கு எதிரான கொள்கையுடைய இயக்கங்களில் அங்கம் வகித்தாலோ அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்.

53 (3) மார்க்க அடிப்படையிலோ, நிர்வாக அடிப்படையிலோ தவறு செய்பவர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார். எனினும் சிறிய தவறுகளுக்காக உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படமாட்டார்.

53 (4) மது அருந்துதல், வட்டி வாங்கிச் சாப்பிடுதல், சூதாட்டத்தில் ஈடுபடுதல், தனி நபருக்கு பொருளாதார மோசடி செய்தல், ஒழுக்கக் கேடான செயல்கள், உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் உள்ளிட்ட தேர்தல்களில் போட்டியிடுதல், அதுபோன்ற பதவிகளை வகித்தல் போன்ற காரியங்களில் எந்த ஒரு உறுப்பினராவது ஈடுபட்டால் முதல் தடவை அவருக்கு அறிவுரை கூறப்படுவதுடன் ஓராண்டு காலம் எந்தப் பொறுப்புக்கும் தேர்ந்தெடுக்கப்படமாட்டார். தீர்மானங்களின் போது வாக்களிக்கவும் உரிமை இல்லை. பொறுப்பில் உள்ளவராக இருந்தால் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்.

53 (5) இரண்டாவது தடவையும் தவறு செய்வாரேயானால் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து ஓராண்டு நீக்கப்படுவார் என்று இறுதி எச்சரிக்கையோடு ஓராண்டு காலம் எந்தப் பொறுப்புக்கும் தேர்ந்தெடுக்கப்படவோ தீர்மானங்களின் போது வாக்களிக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்.

53 (6) மூன்றாவது தடவையும் மேற்கூறிய தவறு நடந்தால் அவர் அடிப்படை உறுப்பினரிலிருந்து முழுமையாக நீக்கப்படுவார்.

53 (7) விபச்சாரம் செய்ததாகவோ அல்லது அதற்கு இடம் அளிக்கும் வகையில் நடந்துக் கொண்டாலோ அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுவார். மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு அப்பொறுப்பிற்கும் தேர்வு செய்யப்படமாட்டார். தீர்மானங்களின் மீது வாக்களிக்கும் உரிமையும் இல்லை.  32 (9) விதியில் உள்ள உரிமை எதுவும் வழங்கப்படாது.

மேலே கண்ட அமைப்பு சட்ட விதிகள் உண்மை நகல் என சான்றிடப்படுகிறது