மாநில செயற்குழு – 07.08.2021 – திருச்சி

கடந்த 07/08/21 சனிக்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயற்குழு திருச்சியில் உள்ள வி.எஸ்.எம் மஹாலில் நடைபெற்றது. சரியாக காலை பத்து மணிக்கு துவங்கிய இந்த மாநிலச் செயற்குழு நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியின் துவக்கமாக மாநிலப் பேச்சாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ், தியாகமும் கொள்கை உறுதியும் குறித்து உரையாற்றினார். கொள்கையை அடிப்படையாகக் கொண்டு தியாகம் செய்து செய்யப்படும் காரியங்கள்தான் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதை பல்வேறு வரலாற்று சம்பவ ஆதாரங்களுடன் எடுத்து வைத்தார்.

முன்பிருந்த எத்தனையோ சாம்ராஜ்யங்கள் அழிந்து போவதற்கு காரணம் அவர்கள் தங்களுடைய கொள்கையில் சமரசம் செய்து கொண்டதுதான். கொள்கையில் ஏற்பட்ட சரிவு காரணமாக சாம்ராஜ்யங்கள் விழுந்ததைப் போல கொள்கை உறுதி காரணமாக சில சாம்ராஜ்யங்கள் நிலைத்து நிற்கின்றன. அதற்கு உதாரணம் நம்முடைய இஸ்லாமிய கொள்கை.
அது போலத்தான் நாமும் கொள்கை உறுதியோடு இருக்க வேண்டும். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளக்கூடாது, தடம்புரண்டு விடக்கூடாது என்று அவர் தனது உரையில் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய மாநில மேலாண்மைக் குழுத் தலைவர் எம்.எஸ்.சுலைமான், புதிய நிர்வாகம் மற்றும் மாநிலப் பொதுக்குழு குறித்து பேசினார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகத்தின் பதவிக்காலம் ஆகஸ்ட் 5- ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடத்துவதற்காக மேலாண்மைக் குழு ஆகஸ்ட் 1- ஆம் தேதி பொதுக்குழுவை நடத்த அறிவிப்பு வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்கள் தோறும் உறுப்பினர்கள் சரிபார்ப்பு மற்றும் பொதுக்குழு நடத்துவதற்கு மண்டபமும் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில் கொரோனா பேரிடரின் இரண்டாவது அலை ஏற்பட்டது.

கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும் இரண்டாவது அலை மிக மோசமாக தாக்கியதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மாநிலப் பொதுக்குழு சாத்திய மில்லாமல் போனதையும் அவர் எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்தே மாவட்டங்கள் தோறும் மாவட்டப் பொதுக்குழு நடத்தி அதில் பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டு அதையே செயல்படுத்தலாம் என மேலாண்மை குழு முடிவு செய்ததாகவும் கூறினார்.

அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்குழு கூட்டி கேட்கப்பட்ட கருத்துக்களை மேலாண்மை குழுவுக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

பெரும்பாலான மாவட்டங்கள் அனுப்பிய கருத்துக்கள் கொரோனா பரவல் சூழல் மாறி சகஜ நிலை ஏற்பட்ட பின் மாநில பொதுக்குழுவை நடத்தலாம் என்று கருத்து தெரிவித்திருந்தனர் என மேலாண்மை குழு தலைவர் எம். எஸ். சுலைமான் தெரிவித்தார்.
இம் முடிவுக்கு செயற்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர்.

தொடர்ந்து மாநிலப் பொருளாளர் மயிலை அப்துர் ரஹீம் உரையாற்றினார். இந்த கொரோனா பேரிடர் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நிலை குறித்து அவர் எடுத்துரைத்தார். இந்த கடினமான நேரத்தில் மாவட்டம் மற்றும் கிளைகள் பொருளாதாரத்தை கையாள வேண்டிய முறைகள் குறித்தும் அவர் தெளிவுபட விளக்கினார்.

அதனைத் தொடர்ந்து மாநிலப் பொதுச் செயலாளர் இ.முகம்மது உரையாற்றினார். கொரோனா பேரிடர் காலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் மேற்கொண்ட பணிகளை அவர் நினைவுபடுத்தினார். தங்கள் வீட்டில் உள்ளவர்கள் இறந்து போன நிலையில் கூட அவர்களின் உடலைத் தொடுவதற்கு அவர்களின் பிள்ளைகள் கூட அஞ்சிய நிலையில் எந்த அச்சமுமின்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் உடலைத் தூக்கி அடக்கம் செய்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

அரசு கட்டமைப்பு பணிகளுக்கு ஒப்பான பணிகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். கொரோனா பேரிடர் காலத்தில் தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் சகோதரர்கள் களமிறங்கி பணி செய்ததை நினைவு கூர்ந்து அதற்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி கொரோனா பேரிடர் காலத்திலும் பிற உயிர்களைக் காக்கும் வகையில் இரத்ததானம் செய்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து மாநில துணைப் பொதுச்செயலாளர் அப்துல் கரீம் உரையாற்றினார். கொரோனா பேரிடர் மற்றும் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வழியில் பயன்படுத்திக் கொள்வதற்காக ஒன்றரை மாத காலத்திற்கான செயல் திட்டத்தை அவர் அறிவித்தார்.

ஊரடங்கு நேரத்தில் உள்ளத்தை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டு முக்கிய செயல் திட்டத்தை அவர் வெளியிட்டார். தனிநபர் தாவா மற்றும் மனனம் செய்வோம் ஆகிய இரண்டு செயல் திட்டங்களை அறிவித்து அது குறித்து மிக தெளிவாக அவர் விளக்கினார்.

மக்கள் அதிகம் கூட முடியாத இந்த காலத்தில் தனிநபர் தாவாக்கள் மிகுந்த பலனை தரும். கடினமான கால கட்டங்களில் கூட இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு தனிநபர் சந்திப்புகளே பயனளித்தது என்றும், அதுபோல தவ்ஹீதின் வளர்ச்சிக்கும் தனிநபர் தாவாவே மிகுந்த பலன் அளித்தது என்றும், ஊரடங்கு நேரத்தில் வீடுகளுக்குள் அடைந்திருக்கும் மக்கள் அதைப் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொண்டு அதிகமான அமல்களில் ஈடுபடவேண்டும். அதுபோல சூரா மற்றும் துஆக்களை மனனம் செய்ய வேண்டும் என்றும் இதை மக்களிடம் பிரச்சாரமாக மேற்கொண்டு கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து உரையாற்றிய மாநிலச் செயலாளர் இ.பாரூக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய வார இதழான நடுநிலைச் சமுதாயம் குறித்து சில செய்திகளை எடுத்துரைத்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை உரக்க ஒலிப்பதற்கு ஊடகம் மிகவும் அவசியம் என்பதை கருத்தில் கொண்டே நடுநிலை சமுதாயம் வார இதழ் துவக்கப்பட்டுள்ளாதாக அவர் தெரிவித்தார்.

அனைத்து சமுதாய மக்களின் உரிமைக்குரலாக வெளியாகிக் கொண்டிருக்கும் நடுநிலை சமுதாயம் இதழின் அறிமுகம் குறித்தும், ஏஜென்சி விவரங்கள், சந்தாக்கள் குறித்தும் தெளிவுபட விளக்கினார். அனைத்து மக்களின் கைகளிலும் நநடுநிலை சமுதாயத்தை கொண்டு சேர்க்க வேண்டியது நமது பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய மாநிலச் செயலாளர் காஞ்சி இப்ராஹிம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் வெளியாகியுள்ள புதிய நூல்கள் குறித்து தெரிவித்தார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் இதுவரை 56 நூல்கள் வெளியிடப்பட்டு உள்ளதாகவும் தற்போது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய புத்தகங்கள் குறித்தும் அவர் தெளிவாக எடுத்துரைத்தார்.

தொடர்ந்து உரையாற்றிய மாநிலச் செயலாளர் முஜிபுர் ரகுமான், சிறுவர் இல்லங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். சிறுவர் இல்லங்கள் குறித்து மாநில மற்றும் கிளை நிர்வாகத்திற்கு தேவையான சில முக்கிய அறிவிப்புகள் மற்றும் கிளை நிர்வாகிகள் பின்பற்ற வேண்டிய செயல்முறைகள் குறித்து அவர் தனது உரையில் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய மாநிலத் துணைத் தலைவர் பா.அப்துல் ரஹ்மான் கிளை மாவட்ட மாநில சங்கிலி தொடர் குறித்து மிகத் தெளிவாக எடுத்துரைத்தார். நமது ஜமாஅத்தின் நிர்வாகம் இவ்வளவு சிறப்பாக இருப்பதற்கு காரணம் கிளைகளின் சரியான கட்டமைப்புகள்தான் என்று அவர் தெரிவித்தார்.

மாவட்ட நிர்வாகிகள் சார்பில் கிளைகளின் சுற்றுப்பயணம் கிளைகளை பலப்படுத்துதல் கிளைகளின் தாவா பணிகளை முடுக்கி விடுதல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். கிளைகளுக்கு சுற்றுப் பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் தாவா பணிகள் மற்றும் கட்டமைப்புகளை மேலும் பலப்படுத்த முடியும் என்று கூறினார்.

ஒரு கட்டிடத்தின் உறுதிக்கு அஸ்திவாரம் எவ்வாறு காரணமாக இருக்கிறதோ அதுபோலத்தான் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் பலத்திற்கு கிளை நிர்வாகங்கள் அஸ்திவாரமாக இருக்கின்றது என்று அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி சிறப்புரையாற்றினார். இறையச்சத்தை ஊட்டக் கூடிய வகையிலும், தாவா பணிகளில் மிகச்சிறந்த திருப்தியை ஏற்படுத்தும் வகையிலும் மாநிலத் தலைவரின் உரை அமைந்திருந்தது.

இந்த ஜமாஅத்தில் பயணிக்கும் நமக்கு எத்தனையோ கட்டங்களில் சோதனை வந்தாலும் கொள்கை உறுதி மற்றும் இறைவனின் உதவி காரணமாக நாம் தொடர்ந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

சமுதாயத்திற்காக நம்மை நாம் அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட வேண்டும். தனிநபர்களின் திருப்திக்காக நாம் கொள்கையை விட்டோ, இந்த ஜமாஅத்தை விட்டோ எந்த நிலையிலும் போய் விடக்கூடாது என்று தெரிவித்தார். அர்ப்பணிப்பு உணர்வுடன் நாம் பணியாற்றும் போது அல்லாஹ்வின் உதவி நமக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும்.

எவ்வளவு பெரிய படை வந்தாலும் இறைவன் உதவிக்கு முன்னால் அது ஒன்றுமில்லாமல் போகும் என்கிற ரீதியில் அமைந்துள்ள இஸ்லாமிய வரலாற்று சம்பவங்களை அவர் கோடிட்டுக் காட்டினார்.

மாநிலத் தலைவரின் இந்த உரை நிர்வாகிகளுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. அது மட்டுமின்றி நிர்வாகிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும், இறையச்சத்தை அதிகரிக்கும் வகையிலும் அவரது உரை சிறப்பாக அமைந்திருந்தது.

தொடர்ந்து மாநிலச் செயலாளர் அன்சாரி தீர்மானங்களை வாசித்தார். சமுதாயத்தின் நிகழ்கால நிகழ்வுகளை பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து மாநிலச் செயலாளர் ஆவடி இப்ராஹிம் நன்றியுரையாற்றினார். இந்த கடினமான காலகட்டத்திலும் செயற்குழுவை எளிமையாக்கி கொடுத்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவித்து மாநில செயற்குழு இனிதே நிறைவடைந்தது. எல்லா புகழும் இறைவனுக்கே.

07.08.2021 அன்று திருச்சி வி.எஸ்.எம். மஹாலில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் சம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் தலைமையில் நடைபெற்ற செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் 1

05.08.2018 அன்று ஈரோட்டில் கூடிய பொதுக்குழுவில் ஷம்சுலுஹா ரஹ்மானி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தின் மாநில நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.

கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலை பரவலினால் அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக ஆண்டு பொதுக்குழுவும் அதை அடுத்து நிர்வாக பொதுக்குழுவும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

அரசின் கட்டுப்பாடுகளுக்கு இணங்க பொதுக்குழு காலம் தள்ளி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் பொதுக்குழு குறித்து மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.

மாவட்டங்கள் தங்களுடைய கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி கருத்து கேட்டு அதை மாநில மேலாண்மைக்குழுவிற்கு அனுப்பி வைத்தனர்.
அதில் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனாவுடைய பரவல் குறைந்து சகஜ நிலை திரும்பும் போது மாநில பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டி புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கலாம் என்ற கருத்தை முன் வைத்திருந்தனர்.

இது குறித்த முடிவை 7.8.2021 அன்று திருச்சி ஸ்.s. முஹம்மது இப்ராஹிம் மேரேஜ் ஹாலில் நடைபெற்ற செயற்குழுவில் பொதுக்குழு குறித்து மாவட்டங்கள் அனுப்பிய கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

கொரோனா பரவல் குறைந்து பொதுக்குழு கூட்டுவதற்கான சகஜ நிலை திரும்பிய பின் மாநிலப் பொதுக்குழு குறித்து முடிவு செய்யலாம் என்கிற முடிவை இச்செயற்குழு அங்கீகரிப்பது என முடிவு செய்யப்பட்டது.

தீர்மானம் 2

இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டு கோரிக்கையை நீண்ட காலமாகவே தமிழக அரசு நிறைவேற்றாமல் இருந்து வருகிறது.
முன்னாள் முதல்வர். மு.கருணாநிதி அவர்கள் ஆட்சி காலத்தில் இஸ்லாமியர்களுக்கு 3.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இது போதுமானதாக இல்லை. உயர்த்தி தர வேண்டும் என இஸ்லாமிய சமுதாயம் கோரி வருகிறது.

கல்வியிலும், பொருளா தாரத்திலும் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் முஸ்லிம்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த இது போதாது என்பதை நீதிபதி சச்சார் கமிஷன் அவர்களின் அறிக்கை உறுதி செய்கிறது.

ஆகவே தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 3.5% இடஒதுக்கீட்டை 7% ஆக அதிகரித்து வழங்குமாறு இம்மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 3

புதுச்சேரி மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு 6.1 சதவீத விழுக்காடு இடஒதுக்கீட்டு கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றும்படி புதுச்சேரி அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கின்றது.

தீர்மானம் 4

இந்திய நாட்டை உருவாக்கியதிலும், நாடு சுதந்திரம் பெறுவதற்கும் இஸ்லாமியர்கள் ஆற்றிய பங்கு மகத்தானது.  அத்தகைய இஸ்லாமியர்களை நாட்டை விட்டு அந்நியப்படுத்தும் தீய நோக்கில் ஒன்றிய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவந்தது.

இதை இந்தியர்கள் யாருமே ஏற்கவில்லை. ஆனாலும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

குடியுரிமையை நிரூபிக்க தேவையான ஆவணங்களாக கேட்கப்பட்டுள்ள பிறப்புச் சான்றிதழ் அனைவராலும் சமர்பிக்க சாத்தியமில்லை எனத் தெரிந்தும் இதுபோன்ற நிபந்தனையை வைத்து, அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பாக மத ரீதியில் முஸ்லிம்களை மட்டும் புறக்கணித்து குடியுரிமை வழங்கப்படும் இந்த கருப்புச் சட்டத்தை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்த முயன்றால், இச்சட்டத்திற்கு எதிரான தேசம் தழுவிய பலகட்ட போராட்டங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னின்று நடத்தும் என்பதை இச்செயற்குழு தெரிவிக்கின்றது.

தீர்மானம் 5

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குழைக்கும் புதிய வேளாண் திருத்த சட்டத்தை கடந்த ஆண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்ததை ரத்து செய்யக்கோரி டெல்லியில் பல மாதங்களாக விவசாயிகள், தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதில் பல உயிரையும் இழந்துள்ளனர். விவசாய நிலங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்க்கவும், அத்தியாவசிய உணவு தானியங்களின் விலைவாசி உயர்வு அதிகரிக்கவும் வழிவகுத்து மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தச் சட்டத்தை ரத்து செய்ய விவசாய பெருமக்கள் உயிரைப் பணையம் வைத்து போராடும் இந்த போராட்டத்திற்கு சிறிதும் மதிப்பளிக்காமல் ஒன்றிய அரசு மௌனம் காப்பது ஜனநாயகத்திற்கு உகந்த செயல் அல்ல.

மக்களின் நலன் காக்கவே சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். மக்களை அச்சுறுத்தும், அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இது போன்ற சட்டங்களை இயற்றி மக்களை அடக்கி ஆள நினைப்பது சர்வாதிகாரத்தின் உச்சம். ஆகவே விவசாயிகளின் போராட்டத்திற்கு மதிப்பளித்து புதிய வேளாண் சட்டத்தை திரும்பப்பெறவேண்டுமென்று ஒன்றிய அரசை இந்த செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 6

பெகாசஸ் எனும் உளவு பார்க்கும் செயலி மூலம் இந்தியாவில் பத்திரிகை யாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக செயற் பாட்டாளர்கள் என 300க்கும் மேற்பட்டோரின் தனிப்பட்ட செயல்பாடுகள் கண்காணிக்கப் படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னால் தெரிய வந்துள்ளது. இஸ்ரேலின் உளவு பார்க்கும் செயலியாகிய பெகாசஸ் இந்தியா அரசின் அனுமதியில்லாமல் இந்த செயலியை உளவு பார்க்க ஏவியிருப்பது சாத்தியமற்றது என்பதை அனைவரும் அறிவர். தனிமனித சுதந்திரத்தை பாதுகாக்கும் அரசே அதை பறிக்கும் வகையில் செயல்படுவது ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் செயல். ஒன்றிய பா.ஜ.க. அரசின் அனுமதியோடுதான் இந்த நாசவேலை நடந்துள்ளது என்ற வலுவான சந்தேகம் எழும்புகிறது. இந்த சர்வாதிகார செயலை இந்த செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு, இதற்கு முழு பொறுப்பேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் பதவி விலகவேண்டும் என இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 7

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் கோரப்பிடியில் உலகமே சிக்கித்தவிக்கிறது, இதில் இந்தியாவிலும் கோடிக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதநேயத்தோடு, உணவளித்தல் மற்றும் மருத்துவ உதவிகள் செய்ததோடு, தங்களது உயிரையும் பணையம் வைத்து தமிழகம் முழுவதும் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணிகளையும் சிறப்பாக செய்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட, கிளை நிர்வாகிகள் தாயீக்கள் உறுப்பினர்கள் அனைவருக்கும் மாநில தலைமை இந்த செயற்குழு வாயிலாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.