ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு செய்தால் மட்டும் போதுமா?

ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு செய்தால் மட்டும் போதுமா?

கடந்த மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை இந்தியா முழுக்க ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

மிகவும் அவசிய தேவை தவிர வேறு எதற்கும் வெளியில் செல்லக் கூடாது என்பது சற்று கடுமையாகவே கடைபிடிக்கப்பட்டது.

கடும் சிரமத்திற்கு மத்தியில் அரசிற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கி ஊரடங்கை கடைபிடித்து வந்த போதிலும் இந்தியா முழுவதும் நோயின் தாக்கம் அதிகரித்துள்ளன.

மார்ச் 25 அன்று வரை இந்தியாவில் மொத்தம் 13 மரணங்களுடன் 629 கொரோனா நோயாளிகள் இருந்தனர்.

https://www.thehindu.com/news/national/india-coronavirus-lockdown-day-1-updates-march-25-2020/article31159466.ece

இந்நிலையில் தான் லாக் டவுன் அறிவிப்பின் மூலம் சிறுகுறு தொழிற்சாலைகள், பெரிய சிறிய வணிகத்தளங்கள், மால்ஸ், திரையரங்கங்கள், போக்குவரத்து, நடைபாதை வியாபாரம் என அத்தனையும் இழுத்து மூடப்பட்டது.

அப்படியிருந்தும் இன்றைய தேதியில் இந்தியா முழுக்க 324 மரணங்கள், மற்றும் 9352 பேர் நோயாளிகள் என்கிற அசுர பாய்ச்சலை கொரோனா நோய் நிகழ்த்தியுள்ளது.
(13 – 324)
(629 – 9352)
https://www.thehindu.com/news/national/india-coronavirus-lockdown-april-13-2020-live-updates/article31327218.ece

ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால் நோயின் தாக்கம் ஓரளவே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நோய் பரவலுக்கு முற்றிலும் அணைபோட முடியவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.

இதற்கு மத்திய மாநில அரசுகளின் திட்டமிடப்படாத செயல்பாடுகளே காரணமாகும் என்பதை மறுக்கவியலாது.

முடுக்கிவிடப்படாத பரிசோதனை

ஊரடங்கு என்பது வெற்று சடங்கிற்காக செய்யப்படும் ஒன்றல்ல. மாறாக அவை விலை மதிக்க முடியாத நாட்களாகும்.

மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, பொருளீட்டும் வழிமுறைகளை விட்டு விலகி வீட்டுக்குள் முடங்கி கிடப்பதற்கு காரணமே நோயிலிருந்து விலகி நிற்கவேண்டும் என்பதே.

அந்த வகையில் மக்களை நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்க பரிசோதனைகள் முக்கியமானதாகும்.

பரிசோதனையை தான் உலக நாடுகள் யாவும் வலியுறுத்துகின்றன.

கொரோனா அறிகுறியால் பீடிக்கப்பட்டவர்கள் யார்? யார்?

நோயின் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் யார்? யார்?

என்பதையெல்லாம் முறையான பரிசோதனையின் மூலம் கண்டறிந்து அவர்களை பிற மக்களை விட்டும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதே ஊரடங்கின் முக்கிய நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.

இப்படியான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மூலமே சமூகத்திற்குள் மென்மேலும் நோய் பரவாமலிருப்பதை கட்டுப்படுத்த முடியும்.

ஆனால் மத்திய – மாநில அரசுகள் இதை சரியாக செய்தனவா?

இந்தியா முழுக்க இதுவரை எத்தனை பரிசோதனைகள் செய்யப்பட்டது?

இந்திய அளவில் ஏப்ரல் 12 வரை (2,06,212) 2 லட்சத்து ஆறாயிரத்து 212 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தை சேர்ந்த ராமன் கங்ககேத்கர் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/india-52267751

130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் வெறும் 2 லட்சம் என்ற அளவில் மட்டுமே பரிசோதிக்கப்பட்டுள்ளது.

சளி பரிசோதனையை சொல்கிறார்களா? அல்லது பாடி டெம்ப்ரேச்சர் பரிசோதனையையும் சேர்த்து இந்த எண்ணிக்கையா? என்ற சந்தேகமும் உண்டு.

பரிசோதனையின் முக்கியத்துவத்தை உணர்ந்த மருத்துவர்கள் அதை வலியுறுத்தும் அளவுக்கேற்ப அரசின் செயல்பாடு இல்லை.

எப்படி பார்த்தாலும் வளர்ந்த நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவின் பரிசோதனையின் எண்ணிக்கை மிகவும் குறைவானதே.

பரிசோதனைகளில் இந்தியாவின் நிலையையும் பிறநாடுகளின் நிலையையும் ஏப்ரல் 6 பிசினஸ் டுடே வெளியிட்டுள்ள புள்ளிவிபரம்.

https://www.businesstoday.in/current/economy-politics/coronavirus-is-india-testing-enough-people-for-coronavirus/story/400235.html

தமிழகத்தில் பரிசோதனையின் நிலவரத்தை சொல்ல வேண்டியதில்லை.

ஏழரை கோடிக்கும் அதிகமான மக்களில் பத்தாயிரம் நபர்களுக்கு பரிசோதனை செய்துள்ளார்கள்.

முப்பதே நிமிடங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் எனப்படும் பரிசோதனை கருவிகள் சுமார் நான்கு லட்சம் அளவில் வாங்க சீனாவிடம் இந்த ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது என்றார் தமிழக முதல்வர்.

சொல்லி பல நாட்கள் ஆகியும் ஒரு கருவி கூட தமிழகத்திற்கு வந்தபாடில்லை. தமிழகத்திற்கு வர வேண்டிய ரேபிட் டெஸ்ட் கிட்கள் எல்லாம் அமெரிக்காவிற்கு சென்றுவிட்டன என்கிறார்கள்.

இந்தியாவிடம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை அன்பான முறையில் வாங்கியதை போல டெஸ்ட் கருவிகளையும் வாங்கி விட்டார்களா?

என்ன நடக்கிறது என ஒன்றுமே புரியாமல் மக்கள் குழம்பிக் கொள்வது தான் மிச்சம்.

இது தான் பரிசோதனையில் தமிழக அரசின் நிலை.

இந்த வகையில் கடந்த 20 நாள்கள் ஊரடங்கு அரசின் அலட்சியத்தால் வீணடிக்கப்பட்டுள்ளது என்றே கருத வேண்டியுள்ளது.

ஏழை மக்களின் வாழ்வாதாரத்தின் நிலை?

நோய் பரவல் எதிர்பார்த்த அளவு குறையாத காரணத்தால் மேலும் இருவார காலம் ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்த அடிப்படையில் தமிழக முதல்வர் ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்து இன்று மாலை அறிவித்துள்ளார்.

பல தடுமாற்றத்திற்கும் தயக்கத்திற்கும் பிறகே முதல்வர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். அவரது தயக்கத்திற்கு காரணம் மக்களா? மத்திய அரசா? என்பது என்ற சந்தேகம் மக்களுக்கு உண்டு.

இந்திய பிரதமர் மே 3 வரை ஊரடங்கை நீட்டித்து இன்று அறிவிப்பு செய்துள்ளார்.

தமிழகத்திற்குள் வேகமாக பரவி வரும் நோய் பரவலை தடுக்கும் நோக்கில் பார்த்தால் அரசின் இந்த அறிவிப்பை குறை சொல்ல முடியாது.

ஆனால் அரசின் கடமை ஊரடங்கை அறிவிப்பதுடன் முடிந்து போவதில்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

ஏற்கனவே மூன்று வார கால ஊரடங்கினால் அன்றாட உணவிற்கு உழைத்து சம்பாதிக்கும் ஏழை மக்கள் பொருளீட்ட முடியாமல் பசிப்பட்டினியுடன் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இன்னும் இருவார கால ஊரடங்கு என்றால் அத்தகைய மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு என்ன செய்வார்கள்?

கடந்த மூன்று வார காலத்திற்கு தமிழக அரசு ஒரு ரேஷன் கார்டுக்கு ஆயிரம் ரூபாயும்

ரேஷன் அரிசி 10 கிலோ
சீனி 1 கிலோ
து. பருப்பு 1 கிலோ
எண்ணெய் 1 லிட்டர் என வழங்கியது.

(இவையும் மக்கள் கைகளில் முழுமையாக சென்று சேரவில்லை)

ஒரு குடும்பத்தில் 5 நபர்கள் என்றால் ஆயிரம் ரூபாயில் ஒரு நபருக்கு தலா 200 ரூபாய் என்றாகிறது.

ஒரு நபரின் 21 நாள்களுக்குண்டான அரசு தரும் செலவு வெறும் 200 ரூபாய்.

ஒரு நாளைக்கு வெறும் 10 ரூபாய்க்கும் குறைவான தொகை என்பதுதான் ஏழை மக்களின் துயர் துடைக்கும் நிதியா?

அரசு வழங்கும் பொருட்களில் அரிசி, எண்ணெய் போன்றவற்றின் தரத்தை பற்றி சொல்ல வேண்டியதில்லை.

பட்டினியில் செத்து மடியும் நிலையில் உள்ளோர்க்கு அரசு தரும் உணவுப் பொருள்களை உண்பதை தவிர்த்து வேறு வழியில்லை என்றாலும்

பால், முட்டை, பிஸ்கட், சமையலுக்கு தேவையான காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களுக்கு மக்கள் எங்கே செல்வார்கள்?

இது நாள் வரை தம் சொந்த உழைப்பில் உழைத்து உண்டு வந்த மக்கள் அரசின் ஊரடங்கு சட்டத்தினால் எவ்வித பொருளாதாரமும் திரட்ட முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

அரசின் அறிவிப்பு இத்தகைய சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கிப் போட்டுவிட்டது.

வறுமையினால் பசியில் தவித்த தனது 5 குழந்தைகளை நதியில் வீசிய உ.பி சம்பவம் இந்நியாவில் எத்தகைய எளிய மக்கள் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=578775

குழந்தைகளின் பசி போக்க தனது கூந்தல் முடியை விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்ட சேலம் பெண்மணி போன்று எத்தனை நபர்கள் தமிழகத்தில் இருப்பார்கள்?

https://www.hindutamil.in/news/tamilnadu/534369-mother-sell-hair-for-children.html

ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் இத்தகைய அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு மத்திய மாநில அரசுகள் என்ன திட்டங்களை வகுத்துள்ளது?

இவற்றை எல்லாம் சொல்லாமல் வெறுமனே ஊரடங்கு நீட்டிப்பு, ரேஷன் கார்டுக்கு (ஒரு நபருக்கு அல்ல) ஆயிரம் ரூபாய் நிதி? போன்ற அறிவிப்புகள் மக்கள் வறுமையை போக்க ஒருபோதும் உதவாது.

மோடி அவர்களின் இன்றைய அறிவிப்பிலாவது ஏழை மக்களுக்கு இடமிருக்குமா என்று பெரிதும் எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மக்களுக்கு முத்தான ஏழு அறிவுரைகளை உதிர்த்து விட்டு தன் கடமை முடிந்து விட்டதென்ற ஆத்ம திருப்தியில் சென்று விட்டார்.

மோடி அவர்கள் சொன்ன அந்த 7 அறிவுரைகள் இவைகள் தாம்.

  1. உங்கள் குடும்பத்தில் மிகவும் எளிதாக நோய் தொற்றுக்கு ஆளாகக் கூடியவர்களை பார்த்துக் கொள்ளுங்கள்,
  2. ஊரடங்கு உத்தரவை மதித்து சமூக விலகலை கடைபிடியுங்கள்,
  3. உங்கள் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுங்கள்,
  4. ஆரோக்ய சேது செயலியை தரவிறக்கம் செய்யுங்கள்,
  5. ஏழை மக்களுக்கு உதவி செய்து அவர்களுக்கு அடிப்படைப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்,
  6. உங்களுடன் பணி செய்பவர்களை கருணையோடு நடத்துங்கள்.
    யாரையும் வேலையை விட்டுத் தூக்காதீர்கள்,
  7. கொரோனா யுத்தத்தில் முன்னணியில் நிற்கும் மருத்துவர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள், காவலர்கள் உள்ளிட்டவர்களை மதித்து நடந்து கொள்ளுங்கள்.

தினமும் பல் துலக்குவதையும் அன்றாடம் குளிப்பதையும் கூட மோடி அவர்கள் சேர்த்து அறிவித்திருக்கலாம்.

இவை தான் நாட்டின் பிரதமர் செய்யும் அறிவிப்புகளா?

வேலையை விட்டு நீக்காதீர்கள் என்று சொல்லும் மோடி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் உள்ள நிறுவனங்களுக்கு என்ன செய்வார்? என்பதை சொல்ல வேண்டாமா?

ஏழை மக்களுக்கு பிறர் உதவ வேண்டுமாம். இதனை சொல்ல ஒரு பிரதமரும் வேண்டுமா? பிரதமர் சொல்லித்தான் இத்தனை நாட்கள் மக்கள் உதவிக் கொண்டிருக்கிறார்களா?

ஒரு சாமானியனின் அறிவுரைகளாக இவற்றை கருத முடியுமே தவிர வலிமை பெற்ற இந்திய அரசின் பிரதமரின் அறிவிப்புகளாக இவற்றை கருத முடியாது.

வீட்டுக்குள்ளே இருப்பதால் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகிறீர்கள். அதற்கு நான் தலை வணங்குகிறேன் என்கிறார் மோடி.

மக்கள் சிரமப்படுகிறார்கள் என்பதை நன்கு உணர்ந்த அவர் நாட்டின் தலைவராக மக்களின் சிரமத்தை நீக்குவதே தனது தலையாய கடமை என்பதை புரிந்து உரிய அறிவிப்புகளை வழங்கியிருக்க வேண்டும்.

மோடி தலைவணங்குவதால் எந்த ஏழை வீட்டிலும் அடுப்பெரியாது.

மொத்தத்தில் கொரோனா வைரஸை தடுப்பதை விட சமூகத்தில் மதவெறுப்புணர்வை உண்டாக்குவதிலும் அதற்கு உரமூட்டுவதிலும் தான் மத்திய – மாநில அரசுகள் முழுமையாக வெற்றி பெற்றுள்ளது என கருத வேண்டியுள்ளது.