இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்த தினமணி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்த தினமணி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

கொரோனா என்ற கொடிய வைரஸை ஒழிப்பதற்கு உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தியாவில் மட்டும் இதை மத அரசியலாக்கும் கொடிய நிலை உருவாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 30-ஆம் தேதியே கொரோனா வைரஸின் தாக்கம், சீனாவில் இருந்து கேரளாவிற்குத் திரும்பிய மாணவியின் மூலமே பரவ துவங்கியது.

அப்போதே அதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்காத மத்திய அரசு, அதற்குப் பின்னால் இரண்டு மாதங்கள் கழித்து நடைபெற்ற தப்லீக் ஜமாஅத் மாநாட்டின் மீது பழியைப் போட்டுத் தப்பி நினைக்கின்றார்கள்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மதச்சாயம் பூசாதீர்கள் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்த வருகின்றனர்.

இதனையெல்லாம் கண்டுகொள்ளாமல் இதனை மதப் பிரச்சினையாக்க வேண்டும், இஸ்லாமியர்களை மீது மீண்டும் மீண்டும் அவதூறுகளை அள்ளி விச வேண்டும் என சில ஊடங்கள் தங்களின் ஊடக தர்மத்தை மறந்து செயல்படுவதைக் காண முடிகின்றது.

04/04/2020 சனிக்கிழமை, தினமணி இதழில் வெளியாகியுள்ள தலையங்கம் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் நெஞ்சத்திலும் ஈட்டியை பாய்ச்சியுள்ளது.

‘மன்னிக்கக் கூடாத குற்றம்’ என்ற தலைப்பில் தலையங்கம் எழுதி விஷத்தைக் கக்கியுள்ளது தினமணி.

ஒரு அறிவார்ந்த ஊடகத்தின் சார்பில் வெளியாகும் தலையங்கம் இவ்வளவு அறிவற்ற தனமாகவும் மதவெறி கொண்ட எழுத்துமாகவே அமைந்துள்ளது? வேடிக்கையாக உள்ளது.

டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாஅத் மாநாடு, அரசாங்கத்தின் அனுமதி பெறாமல் ஊரடங்கு உத்தரவை மீறி நடைபெற்றது போன்ற ஒரு போலி தோற்றத்தை உருவாக்குகிறது தினமணி.

ஆனால் அரசாங்கத்தின் அனுமதியோடுதான் தப்லீக் ஜமாஅத் மாநாடு நடைபெற்றது என்பதனை மறைப்பது ஏன்?

கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஜனவரி மாதமே இந்தியாவிற்குள் உணரப்பட்ட நிலையில் நாட்டிற்குள் வரக்கூடிய வெளிநாட்டு பயணிகளை முழுமையாக சோதனை செய்து நாட்டிற்குள் அனுமதித்திருக்க வேண்டும் .

அல்லது வைரஸ் பரவலைக் காரணம் காட்டி அவர்களை திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யாமல் அந்த மாநாட்டிற்கு வந்த பல நாட்டினருக்கு அனுமதி கொடுத்து விட்டு அதனால் கொரோனா பரவி விட்டது என்றால் இது யார் மீது தவறு என்று உணர வேண்டாமா ?

டெல்லி தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டினர் அனைவரும் விசா பெற்று விமானத்தில் வராமல், நேரடியாக வானத்திலிருந்து டெல்லி நிஜாமுதீன் மைதானத்தில் குதித்ததைப் போல தினமணி நாளிதழ் எழுதியிருப்பது மிகக் கொடுமையான மோசடியாகும்.

டெல்லியில் சிகிச்சை பெற்று வரும் இஸ்லாமியர்கள் நிர்வாணமாக ஓடுவதாகவும், செவிலியர்களிடம் பாலியல் ரீதியாக சேட்டை செய்வதாகவும், சிகரெட் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் ஒரு செய்தியை ஊடகங்கள் வெளியிட்டன.

இஸ்லாமியர்கள் இறந்து போனாலும் தங்களுடைய உடல் நிர்வாணமாக இருக்கக் கூடாது என்று நினைக்கக் கூடியவர்கள்.

இப்படியாக தப்லீக் ஜமாஅத் மீது அவதூறு சொல்ல அளவே இல்லாமல் போய்விட்டது.

மத்திய பிரதேசத்தில் மருத்துவர்களை கல்வீசி விரட்டியவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல! என்பது தெளிவாகத் தெரிந்திருந்தும் கூட அதையும் முஸ்லிம்கள் மீது சுமத்தி அதில் மகிழ்ச்சி அடைகின்றனர்.

இந்தியாவில் பேரிடர் நிகழும் போதெல்லாம் அதற்கு தோள் கொடுத்த இஸ்லாமியர்களின் மனதை குத்திக் கிழித்து ரணமாக்கும் செயலை ஊடகங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

தினமணி உள்ளிட்ட ஊடக சகோதரர்கள் ஒன்றே ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் விதைக்கும் வெறுப்புணர்வு பிரச்சாரம் உங்களுக்கு எவ்வித நன்மையையும் கொடுக்கப் போவதில்லை! மத அரசியலை வழிநடத்தக் கூடிய அரசியல்வாதிகளுக்கு அது லாபக்கணக்காக மாறிவிடும்.

ஆனால் இதுபோன்ற செய்திகள் இந்தியாவின் மதச்சார்பற்ற சகிப்புத் தன்மை மற்றும் சகோதரத்துவத்தின் அஸ்திவாரத்தை வேறோடு அழித்து விடும் என்பதை தயவு செய்து உணருங்கள்.

எனவே இஸ்லாமியர்களையும் இந்து மக்களையும் பிரிக்கும் இதுபோன்ற அவதூறு பொய் செய்திகளை தயவுசெய்து ஊடக நண்பர்கள் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

மதச்சார்பற்ற இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை காப்பாற்றும் நடவடிக்கைகளில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஈடுபட வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

‘மன்னிக்கக் கூடாத குற்றம்’ என்ற பெயரில் சகோதரத்துவத்தை சிதைத்து விஷ விதையை விதைத்து அதன் மூலம் இஸ்லாமியர்களின் மீது வெறுப்புணர்வு நெருப்பை உமிழும் தினமணியின் இந்த கொடூரச் செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மிக வன்மையாக கண்டிக்கின்றது.

இப்படிக்கு
இ.முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்