விஷ விதையை விதைக்கும் தினமலருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

விஷ விதையை விதைக்கும் தினமலருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

உலகமே கொரோனா வைரஸ் பீதியால் அச்சமடைந்து உறைந்து போய் இருக்கின்ற நிலையில், மக்களுக்கு மத்தியில் அவதூறு பிரச்சாரம் செய்யும் வேலையை தினமலர் நாளேடு மேற்கொண்டுள்ளது. கொரோனா வைரஸை இந்தியாவிற்குள் இஸ்லாமியர்கள் பரப்புவதாகவும், அதற்கு அல்காயிதா போன்ற இயக்கங்கள் உதவி செய்வதாகவும் ஒரு கொடூரமான விஷத்தை கக்கியுள்ளது தினமலர்.

‘லவ் ஜிஹாத்’- தை போல இது ‘கொரோனா ஜிகாத்’ என்று மோசமான வார்த்தைகளால் வர்ணித்துள்ளது தினமலர் நாளேடு. தாய்லாந்திலிருந்து மத பிரச்சாரத்திற்கு வந்திருந்தவர்கள் திட்டமிட்டு கொரோனா வைரஸைப் பரப்பி விட்டார்கள் என்று ஈவிரக்கம் இல்லாமல் பத்திரிக்கை தர்மத்தை மீறி செய்தியை வெளியிட்டுள்ளது தினமலர் நாளேடு.

‘லவ் ஜிஹாத்’ என்ற வாசகமே இஸ்லாமியர்களுக்கு எதிராக பரப்பப்படும் அவதூறு பிரச்சாரம் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அதைவிடக் கொடூரமாக ‘கொரோனா ஜிகாத்’ என்று மக்களிடத்திலே பீதியை உண்டாக்கும் வேலையையும் தற்போது தினமலர் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சார்பில் அறிவித்துள்ள நிலையில் ஒரு சமூக பொறுப்பில் இருக்கும் செய்தி நிறுவனம் இதுபோன்ற அவதூறு செய்தியை வெளியிட்டு ஒரு சமூகத்தின் மீது பழி சுமத்தி இருப்பதும், மக்கள் மத்தியில் துவேசத்தை உண்டாக்கி பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதும் மிகவும் கண்டிக்கத்தக்க விடயமாகும்.

ஈரோடு பள்ளிவாசலுக்கு வந்திருந்த தாய்லாந்தை சேர்ந்த 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களைப் பரிசோதித்த நிலையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று நிரூபிக்கப்பட்டு அது பல்வேறு ஊடகங்களில் செய்தியாக வெளியான நிலையிலும், இப்படி ஒரு மோசமான அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டு இஸ்லாமியர்களை குற்றவாளியாக்கும் வேலையைச் செய்துள்ளது தினமலர்.

பொதுவாக பத்திரிகைகளுக்கு இருக்கும் சமூக அக்கறையும், பொறுப்புணர்வும் துளியும் இல்லாமல் மக்கள் மத்தியில் துவேசத்தை விதைக்கும் வகையில் இந்த அவதூறு பிரச்சாரத்தை ஒரு பொது ஊடகத்தில் கொஞ்சமும் பொறுப்புணர்வு இன்றி சமூக அக்கறை இன்றி வெளியிட்டுள்ளது தினமலர் நாளிதழ். நாடே ஊரடங்கு உத்தரவு மூலம் முடங்கிக் கிடக்கும் போது மக்களுக்கு உண்மை நிலையை எடுத்துச் சொல்லி அவர்களைத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பையுடைய தினமலர் பத்திரிக்கை, அதை மறந்து ஒரு சமுதாயத்தின் மீதான வெறுப்பை இந்த நிலையில் விதைப்பது ஒரு மோசமான செயலாகவே கருத வேண்டியுள்ளது.

இந்தியா முழுவதும் வெளிநாட்டிலிருந்து பல லட்சம் பேர் நாடு திரும்பியுள்ளார்கள். அவர்களின் மூலமாக வைரஸ் தொற்று ஏற்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துவரும் நிலையில், தினமலர் இது இஸ்லாமியர்களின் சதி என்று சித்தரிப்பது மிகவும் அருவருக்கத்தக்கதாகும்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்லாமியர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் நாட்டின் பல பகுதிகளில் கிருமி நாசினி மருந்துகளை தெளிப்பதும், தெருவோரம் உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவுகளை வழங்குவதும், இந்த மோசமான சூழ்நிலையில் பணியாற்றிவரும் காவல்துறையினர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு முக கவசங்களை வழங்குவதும் போன்ற உன்னதப் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இந்தப் பேரிடர் மட்டுமல்ல! இதற்குமுன் நாட்டில் ஏற்பட்டுள்ள அத்தனை பேரிடர் காலங்களிலும் இஸ்லாமியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பிற மக்களை காப்பாற்றும் கள பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் இஸ்லாமியர்களை மற்ற மக்களிடம் எதிரிகளாக சித்தரிக்கும் வேலையை தினமலர் நாளேடு செய்துள்ளது.

சமூகத்தினை பாதுகாக்கும் அக்கறையுள்ள பொறுப்பு மிகுந்த ஊடகத்தின் இந்த செயல் ஊடக தர்மத்தை மீறுவதாக உள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வை வழக்கமாக உமிழ்ந்து வரும் தினமலரின் பல்வேறு செயல்கள் பலமுறை கண்டிக்கப்பட்ட நிலையில் அது அனைத்திற்கும் மேலான ஒரு கொடும் விஷமச் செயலாக இப்போதைய செயலை பார்க்க வேண்டியுள்ளது.

முழுக்க முழுக்க இஸ்லாமியர்கள் மீது காழ்ப்புணர்வு கொண்டு மக்களிடையே துவேஷத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த செய்தியை வெளியிட்டுள்ள தினமலரின் இந்தப் போக்கை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மிக வன்மையாக கண்டிக்கிறது. தினமலர் தன்னுடைய சமூக பொறுப்பை உணர்ந்து மக்களிடத்தில் உண்மை செய்திகளை வெளியிட்டு ‘ஓரளவிற்காவது‘ நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக்கொள்கின்றது.

முஸ்லிம்களும் சேர்ந்து தான் கரோனாவினால் பாதிக்கப் படும் போது அவர்கள் எப்படி பரப்ப முடியும் என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் பொய் செய்தியை தினமலர் பரப்பி வருகின்றது. இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
இ.முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்