கொரோனா வைரஸ் பரவக் காரணம் மத்திய அரசா? முஸ்லிம்களா?

கொரோனா வைரஸ் பரவக் காரணம் மத்திய அரசா? முஸ்லிம்களா?

டெல்லியில் சமீபத்தில் தப்லீக் ஜமாஅத் மாநாடு நடைபெற்றதாகவும் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் அதில் பங்கு கொண்ட நபர்களால் நாடு முழுக்க நோய்த்தொற்று கடுமையாக பரவுகிறது எனவும் சில மீடியாக்கள் செய்தி வெளியிடுகின்றன.

இதன் மூலம் முஸ்லிம்களால் தான் கொரோனா நோய் பரவுகிறது என்ற பிம்பத்தை மத்திய அரசு திட்டமிட்டு கட்டமைக்க முயல்கின்றது.

மத்திய அரசின் இச்சதிவேலைக்கு மாநில அரசுகளும் சில எடுபிடி மீடியாக்களும் ஒத்து ஊதுகின்றன.

டெல்லி நிஜாமுதீன் தப்லீக் ஜமாஅத்தின் மர்கஸ் அலுவலகத்தை பொறுத்தவரை நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கிற இடமாகும்.

அந்த அடிப்படையில் தான் மார்ச் 13, 14 உள்ளிட்ட தேதிகளில் சில நூறுகளில் மக்கள் அங்கு குழுமியிருக்கிறார்கள்.

இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென்று மார்ச் 21 அன்று நாடு முழுவதும் ரயில் சேவைகள் திடீரென ரத்து செய்யப்படுகிறது.

வழக்கம் போல தத்தமது ஊருக்கு செல்பவர்கள் அரசின் இத்திடீர் அறிவிப்பால் முடங்கிப் போகும் சூழல் ஏற்படுகிறது.

மார்ச் 22, 2020 அன்று மக்கள் சுய ஊரடங்கை மோடி அறிவிப்பு செய்கிறார்.

நாட்டு மக்களின் நலன் கருதி இந்த சுய ஊரடங்கையும் அங்கே உள்ளவர்கள் கடைபிடிக்கின்றார்கள்.

ஊரடங்கு முடியும் முன்னரே மார்ச் 23 ஆம் தேதி காலை 6 மணிக்கு தொடங்கி மார்ச் 31 வரை டெல்லி முழுவதும் முடக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

அங்கே வழக்கம் போல் கூடிய நபர்கள் தங்கள் இல்லங்களுக்கு செல்ல முடியாமல் அங்கேயே ஒன்றாக தங்கும்படியான சூழல் அரசின் திட்டமிடப்படாத அறிவிப்புகளாலேயே உண்டானது.

இத்தனைக்கு பிறகும் அங்குள்ளவர்கள் வெளியேற மாநில அரசு மற்றும் காவல்துறையின் உதவியை நாடிய பிறகும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

அவர்கள் வழக்கம் போல் அலுவலக, ஆன்மிக பணிகளில் ஈடுபடும் முன் மத்திய அரசிடமிருந்தோ மாநில அரசிடமிருந்தோ எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

மக்கள் ஒன்று கூடக்கூடாது என்று அறிவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் ஒன்று குழுமவில்லை.

இதிலே மத்திய மாநில அரசுகளின் உத்தரவை அவர்கள் எங்கேயும் மீறவில்லை. முன்னரே வழக்கம் போல் கூடிய நபர்கள் அரசின் திடீர் அறிவிப்பால் ஓரிடத்தில் முடங்கிப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது நோய் பரவ டெல்லி தப்லீக் ஜமாஅத்தினர் தான் காரணம் என்கிற ரீதியில் முஸ்லிம்கள் குறிவைக்கப்படுவது எவ்விதத்தில் நேர்மையானது?

நோய் பாதிப்பு உள்ளவர்களை கண்டறிவதோ அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதையோ அறிவுடையோர் குறை கூற மாட்டார்கள்.

ஆனால் கொரோனா எனும் கொடிய நோய் ஏதோ முஸ்லிம்களின் மூலம் மட்டுமே பரவும் என்பதை போன்ற போலியான பிம்பத்தை உருவாக்க முயல்வது உச்சகட்ட மடமையாகும்.

நோய் பரவ மத்திய அரசே காரணம்

தமிழகத்திலிருந்து டெல்லி சென்று வந்தவர்களில் கணிசமானோருக்கு நோய் பாதிப்பு உண்டாகி உள்ளது என்று சொல்வதிலும் குறிப்பிட்ட சாராரை குறை கூற முடியாது.

கொரோனா எனும் இந்நோய் இந்தியாவில் உருவான ஒன்றல்ல. அதுவும் இந்த மார்ச் மாதம் 20 ம் தேதிக்கு பிறகு பரவியதும் அல்ல.

இது கடந்த டிசம்பர் மாதமே சீனாவில் உருவாகி, அப்போதிலிருந்தே பிற நாடுகளுக்கு பரவத்துவங்கி விட்டது.

சீனாவில் இந்நோய் கடுமையாக பரவுகிறது எனும் செய்தி வந்தவுடனே மத்திய அரசு உரிய தடுப்பு நடவடிக்கையில் இறங்கியிருக்க வேண்டும். சீனாவுடனான விமான போக்குவரத்தை நிறுத்தி இருக்க வேண்டும். அங்கிருந்து பயணிகள் யாரையும் இந்தியாவிற்குள் அனுமதித்திருக்க கூடாது.

அது தான் சரியான தடுப்பு நடவடிக்கையாக இருந்திருக்க முடியும்.

ஆனால் அரசு என்ன செய்தது?

சீனாவிலிருந்து மட்டுமல்லாமல் அங்கிருந்து நோய் பரவிய ஜெர்மன், இத்தாலி, அமெரிக்கா என நோய்த் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வழக்கம் போல பயணிகள் இந்தியாவிற்குள் வர அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது 14 நாள்களுக்கு பிறகே தெரியவரும் என்ற மருத்துவர்கள் கூற்றுப்படி நோய் அறிகுறி இல்லாமலேயே நோய் பாதிக்கப்பட்ட பலரும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளனர் என்றே பொருள்.

இந்தியாவில் மட்டும் 1521 நபர்கள் இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிக்கிறார்கள் என்றும் அவர்களில் அதிகமானோர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும் அரசே தெரிவிக்கின்றது.

இதன்படி வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மூலமே இந்நோய்த் தொற்று இந்தியாவில் கால் பதித்துள்ளது என்று தெளிவாக தெரிகிறது.

அப்படி என்றால் இன்றைக்கு ஆயிரக்கணக்கான நபர்கள் பாதிக்கப்பட்டிருப்பதற்கும் இனி ஏற்படப் போகும் பாதிப்புகளுக்கும் வெளிநாட்டு பயணிகளை இந்தியாவிற்குள் அனுமதித்த மத்திய அரசு முதல் காரணமல்லவா?

டிசம்பரில் நோய்த் தொற்று பரவுகிறது என்பதை அறிந்த பிறகும் நோய் பாதிப்பு ஏற்பட்ட நாடுகளுடன் விமான போக்குவரத்தை தொடர்ந்தது அரசின் முட்டாள்தனம்.

துவக்கத்தில் அங்குள்ள இந்தியர்களை எல்லாம் தனி விமானம் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வந்து அவர்களை மக்களுடன் கலக்கச் செய்தது உச்சக்கட்ட அறிவீனம்.

இந்தியாவை பொறுத்தவரை ஜனவரி 30 ல் தான் முதல் கொரோனா நோய்த் தொற்றுடைய நபர் உறுதி செய்யப்படுகிறார். அவரும் சீனாவிலிருந்து வந்த நபர்தான்.

பிப்ரவரியின் துவக்கத்திலேயே நோய் பரவல் இந்தியாவில் துவங்கி விட்டது என்றால் இதர நாடுகளில் இந்நோய் ஏற்படுத்திய பாதிப்பின் உண்மைத்தகவல்களை அறிந்த மத்திய அரசு அதற்கு பிறகாவது சுதாரித்திருக்க வேண்டாமா?

இன்றைக்கு கடைபிடிக்கப்படும் சுய ஊரடங்கு, 144, போன்ற இதர நடைமுறைகளை அப்போது கடைபிடிக்கவில்லைதானே? மாநிலங்களை எல்லாம் மத்திய அரசு எச்சரிக்கை செய்ததா? இல்லையே.

ஜனவரி 30 ல் கொரோனாவின் பாதிப்பு இந்தியாவில் துவங்குகிறது.

மார்ச் 13 வரையிலும் இயல்பு நிலையே நீடித்து வருகிறது.

இருவர் பலி, 83 பேர் பாதிப்பு என்ற நிலையை இந்தியா அடைந்த பிறகு தான் கொரோனா நோய்த்தொற்றை மார்ச் 14 தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்கின்றது.

ஆனால் அதற்கு பிறகும் கூட வெளிநாட்டு பயணிகள் இந்தியாவிற்குள் வர தடை செய்யப்படவில்லை, ஊரடங்கு உத்தரவோ இதர கட்டுப்பாடுகளோ எதுவும் செய்யப்படவில்லை.

ஜனவரி 30 துவங்கி மார்ச் 20 வரை கறாரான எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. மாநில எல்லைகள் மூடப்படவில்லை.

வெளிநாட்டுப்பயணிகள் தடுத்து நிறுத்தப்படவில்லை.

நோய்த்தொற்று ஏற்பட்ட வெளிநாட்டு பயணிகள் கூட இந்தியாவிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மார்ச் 4 ம் தேதியிலிருந்து தான் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளை பரிசோதிக்கவே ஆரபித்தார்கள்.

அப்படி என்றால் அதுவரை எத்தனை நபர்கள் நோயின் அறிகுறிகளுடன் இந்தியாவிற்கு வருகை தந்திருப்பார்கள்?

நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது.

இது மத்திய அரசின் அலட்சிய போக்கு அல்லவா?

நோய் பாதிப்பு ஏற்பட்டு 2 வாரங்களுக்கு பிறகு தான் நோயின் அறிகுறி தெரியவரும் என்று மருத்துவர்கள் கூறிய பிறகும் கூட விமான நிலையத்தில் சடங்கிற்கு பரிசோதிக்கப்பட்டு அவரவர் இல்லத்திற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.

இந்த வகையில் நோய் பரவ மத்திய மாநில அரசுகளே காரணமாக உள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது.

இப்படி முட்டாள்தனமாக நோயாளிகளை எல்லாம் மக்களுடன் கலக்கச் செய்து இந்தியாவின் மாநிலம் முழுக்க 1521 நோயாளிகள் எனும் நிலையை எட்டிய பெருமை மத்திய அரசையே சாரும்.

இந்நிலையில் முஸ்லிம்கள் தான் நோய்த்தொற்றுக்கு காரணம் என்பது போல தோற்றத்தை மீடியாக்களின் துணையுடன் ஏற்படுத்த முயல்வது வெட்கக்கேடான அரசியலாகும்.

டெல்லியில் நோய் பரவ யார் காரணம்?

டெல்லியில் தப்லீக் ஜமாஅத் நிகழ்ச்சிக்கு தமிழகத்திலிருந்து கலந்து கொண்ட ஒரு சிலருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதால்

தமிழகத்தில் மட்டுமின்றி மொத்த இந்தியாவிலும் நோய் அதிகரித்தால் அதற்கு முஸ்லிம்கள் தான் காரணம் எனும் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தி மொத்த பழியையும் முஸ்லிம்கள் மேல் போட மத்திய, மாநில அரசு முயல்கின்றன.

டெல்லியில் தப்லீக் ஜமாஅத் மூலம் நோய் பரவவில்லை. வெளிநாட்டு பயணிகள் மூலமே பரவியது. தமிழகத்திலும் அப்படியே.

அதுமட்டுமின்றி தமிழகத்திற்கு முன்பே டெல்லியில் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றால் உடனே ஏன் டெல்லி தனிமைப்படுத்தப்படவில்லை.?

அதற்கு பிறகும் பிற நாடுகளிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் டெல்லிக்கு பயணிக்க அனுமதி வழங்கியது ஏன்? அதுவல்லவா முதல் குற்றம்.

ஜனவரி 13-ம் தேதி நிலவரப்படி, சீனா மற்றும் கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து 6,000 க்கும் அதிகமான பயணிகள் டெல்லிக்கு வந்துள்ளனர்.

ஜனவரி 15 ல் 17 பயணிகளுக்கு நோய் தொற்று டெல்லியில் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி சுகாதாரத்துறையே இதை அறிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/india/539776-17-people-from-delhi-who-returned-from-abroad-before-coronavirus-screening-showed-symptoms-hospitalised-1.html

நோய் பாதிக்கப்பட்ட ஒரு மாநிலத்திற்கு பயணிக்க அரசே மக்களுக்கு அனுமதி வழங்கி விட்டு பிறகு அவர்கள் நோய் பாதிப்பிற்கு உள்ளாகும் போது அவர்களையே குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவது எந்த ஊர் நியாயம்? அவர்கள் மீதே வழக்கு பதிவது எந்த வகை தர்மம்?

வெளிநாட்டவர்களையும் வெளிமாநிலத்தவர்களையும் சரியான முறையில் தடுத்து நிறுத்தாத்து அரசின் அறிவீனம்.

கத்தை கத்தையாக வெளிநாட்டிலிருந்து பயணிகளை எல்லாம் பெயருக்கு சோதித்து இந்தியாவிற்குள் அனுமதித்து விட்டு அதன் பின் நோய் பரவலுக்கு நீதான் காரணம் என்று சொல்வதில் துளியளவும் நியாயமில்லை.

மத்திய மாநில அரசுக்கே கொரோனா குறித்த விழிப்புணர்வு முழுமையாக ஏற்படாத நிலையில் டெல்லி தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் முஸ்லிம்கள் குற்றம் சாட்டப்படுவது மகா கொடுமையானதாகும்.

(அரசு தடை உத்தரவை பிறப்பித்த பிறகு தமிழகத்திலிருந்து யாரும் டெல்லிக்கு பயணிக்கவில்லை என்பதை நினைவில் கொள்க.)

இதையெல்லாம் அறிந்த பிறகும் சில ஊடகங்கள் முஸ்லிம்களை குற்றவாளி போல் சித்தரித்து பரபரப்பு செய்தி வெளியிடுவது ஊடக அறத்திற்கு ஏற்பட்ட சாபக்கேடு என்றே சொல்ல வேண்டும்.

இவையெல்லாம் ஏன் விவாதிக்கப்படவில்லை?

அரசின் உத்தரவை மீறி, சட்டத்திற்கு புறம்பாக முஸ்லிம்கள் யாரும் எந்த மாநாட்டையும் நடத்தவில்லை, எந்தவொரு பயணத்தையும் மேற்கொள்ளவில்லை. (மேலே விளக்கியுள்ளோம்)

ஆனால் ஏதோ முஸ்லிம்கள் என்றாலே சமூக அக்கறையற்றவர்கள், நோயை பரப்பக் கூடியவர்கள் எனுமளவு தற்போது திட்டமிட்டு சூழல் உருவாக்கப்படுகிறது.

தொலைக்காட்சிகளில் இதை அடிக்கடி பரபரப்பு செய்தியாக வெளியிடுபவர்கள் இதற்கு முன்பு நடைபெற்ற சில நிகழ்வுகளை அறவே கண்டு கொள்ளவில்லை என்பதை நினைவூட்ட வேண்டியுள்ளது.

1. கடந்த பிப்ரவரி 21 தமிழகத்தின் கோவையில் ஜக்கி வாசுதேவின் ஈசா மையம் நடத்திய மஹாசிவராத்திரி படுவிமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது.

https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-mahashivaratri-2020-kajal-aggarwal-in-isha-function-1-msb-257993-page-3.html

கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள சீனா, ஜெர்மன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் பல லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்திய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு முதல் பல VIP-கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தியாவில் நோய் பரவலுக்கு பின் நடைபெற்ற மிகப்பெரிய நிகழ்ச்சி இது என்ற அடிப்படையில் சீனா ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து எல்லாம் பல ஆயிரம் பயணிகள் இதற்கு வந்து சென்று உள்ளனர் என்ற நிலையில் இதில் கலந்து கொண்ட அனைவரும் நோய் பரிசோதனை செய்யப்பட்டார்களா?

பல லட்சக்கணக்கான மக்கள் இவர்களில் ஒரு நோயாளி கூட வந்திருக்க மாட்டாரா? அவர்கள் மூலம் தமிழகத்தில் இலட்சக்கணக்கான மக்களுக்கு

நோய் பரவும் வாய்ப்பு இல்லையா? ஏன் இது குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை?

2. பிப்ரவரி 24 அன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்திருந்தார். அகமதாபாத், டெல்லி என்று அவரின் பயணத்தை அரசியல் பிரச்சாரக்களத்தை விட ஆடம்பரமாக அமைத்திருந்தார் மோடி.

பல்லாயிரக்கணக்கான மக்களை ஒன்று திரளவைத்து நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-51609554

இந்தியாவில் கொரோனா தொற்று ஜனவரி 30 ல் துவங்குகிறது என்றால் ட்ரம்பின் நிகழ்ச்சிகள் அதிலிருந்து 23 நாள்கள் கழித்து நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிகளில் எத்தனை வெளிநாட்டு பயணிகள் கலந்து கொண்டு இருப்பார்கள்?

அமெரிக்காவிலிருந்து எத்தனை நபர்கள் பங்கு கொண்டிருப்பார்கள்?

வெளிநாட்டிலுள்ள எத்தனை ஊடகங்கள் உள்ளே வந்தார்கள்?

இது இந்தியாவில் குறிப்பாக குஜராத்தில் நோய்த்தொற்றுக்கு காரணமாகாதா?

குஜராத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கு யாரும் இதை குற்றம் சாட்டவில்லையே ஏன்?

மோடியையும் ட்ரம்பையும் ஒரு சேர கண்டால் கொரோனா ஓடிவிடுமா என்ன?

3. முன்னறிவிப்பு இன்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த காரணத்தால் டில்லியில் மட்டும் சுமார் 10,000 நபர்கள் பேருந்துக்காக ஒன்று திரண்டுள்ளனர். உத்தரப்பிரதேசம், பிகார், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களை சார்ந்தவர்கள் இவர்கள்.

https://www.bbc.com/tamil/india-52080512

இதனால் கொரோனா பாதிப்பு ஏற்படாதா? இதில் அந்தந்த மாநிலத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு யார் பொறுப்பு?

4. மார்ச் 24 அன்று மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட மோடி மாலை 5 மணியளவில் மொட்டை மாடியில் வந்து நின்று எல்லாரும் கை தட்டி ஓசை எழுப்ப வேண்டும் என்றார்.

மருத்துவர்களையும் செவிலியர்களையும் ஊக்கப்படுத்த இவ்வாறு செய்ய வேண்டும் என்றார். மோடியின் முட்டாள்தனமான இக்கருத்தை பலரும் கண்டித்தார்கள்.

மருத்துவர்களுக்கு தேவையான உபகரணங்களையும், தரமான முக கவசங்களையும் அவர்களுக்கு வழங்குவதே ஊக்கப்படுத்துவதாகும். கைதட்டுவது வெற்று அரசியல் என்றெல்லாம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

எனினும் அறியாத மக்கள் பலரும் மோடியின் பேச்சைக் கேட்டு கைதட்டினால் கொரோனா வீரியம் குறையும் என்றெண்ணி கூட்டம் கூட்டமாக வெளியில் வந்து நின்று கை தட்டினார்களே? சிலர் ஊர்வலமாக சென்றார்களே, இது நோய் பரவலுக்கு வழிவகுக்காதா? ஏன் யாரும் இதைப்பற்றி இப்போது போல செய்தி வெளியிடவில்லை?

5. லக்னோவை சார்ந்த கனிகா கபூர் என்ற ஒரு ஹிந்தி பாடகி மார்ச் மாதம் லண்டனிலிருந்து வருகின்றார். முதலில் அவரை சோதனை செய்யும்போது அவருக்கு அந்த நோய் இல்லை. பிறகு சில நாள்களுக்கு பிறகு அவருக்கு நோய் உறுதி செய்யப்படுகின்றது.

இதற்கிடையில் கனிகா கபூர் நோயுடன் பல பார்ட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்கள் கனிகா கபூருடன் பார்ட்டியில் பங்கு கொண்டுள்ளனர்.

https://www.bbc.com/tamil/india-51976915

இப்படியே பிஜேபியின் நபர்கள் மூலம் ஜனாதிபதி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் வரை தொடர்பு செல்கிறது.

இப்போது லக்னோ மற்றும் இதர மாநிலங்களில் நோய் பரவ கனிகாவும் பிஜேபி வகையறாக்களும் தான் காரணம் என்று யாராவது சொல்வார்களா?

6. மார்ச் 25 அன்று முதல் நாடு முழுக்க லாக் டவுன் என்று கண்டிப்புடன் அறிவிக்கப்படுகிறது.

ஆனால் அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராமர் கோவில் கட்டும் இடத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பிரதிஷ்டை செய்து பூஜை நடத்தப்பட்டது.

இதில் பலர் கலந்து கொள்கிறார்கள். அருகருகே முகத்தில் மாஸ்க் இல்லாமல் அமர்ந்து கொள்கிறார்கள்.

(ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்ட புகைப்பட செய்தி)

மொத்த நாடும் வீட்டில் முடங்கி, உணவிற்காக கூட வெளியே செல்ல முடியாத நிலையில் இவர்களால் எப்படி பூஜை செய்ய முடிந்தது?

144 தடையுத்தரவு, நாடு முழுக்க லாக் டவுன் என அனைத்தையும் மீறி நோய் பரவல் அதிகரித்த நிலையில் நடைபெற்ற இந்நிகழ்வு பற்றி ஏன் விவாதிக்கப்படவில்லை, நோய் பரவலுக்கு காரணமாக ஆக்கப்படவில்லை?

கர்நாடகாவில், அங்குள்ள பாஜக பிரமுகரின் மகள் திருமணம் 3000 க்கும் மேற்பட்டவர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றதும், அம்மாநில முதல்வர் எடியூரப்பா அதில் கலந்து கொண்டதும் ஊடகங்களின் கவனத்தை விட்டு தவறிப் போனது ஏதேச்சையாக நடந்ததா?

பேருந்து நிலையங்களில் பெருகிய பெருங்கூட்டம்

பணமதிப்பு நீக்க நடவடிக்கையை போன்று ஒரு நான்கு நேர மணி நேர இடைவெளியில் மத்திய இரயில், மாநில பஸ் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்ட பிறகு அன்றாடங்காய்ச்சிகள், தினக்கூலிகள் அத்தனை பேரும் தலைநகர் டெல்லி பேருந்து நிலையத்தில் இலட்சக்கணக்கில் பெரும் வெள்ளமாய் பெருக்கெடுத்து நிரம்பியது பிரதமரின் சமூக விலகல் அறிவிப்பை கேள்விக்கும் கேலிக்கும் உரியதாக்கியது. இதற்கு தமிழகமும் விதி விலக்கல்ல! தமிழக அரசு மார்ச் 24 மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு என்று ஒரு நாள் முன்னதாகவே அறிவிப்பு செய்கின்றது.

அந்த ஒருநாள் இடைவெளியில் பேருந்துகளில் தொங்கிய படி, கடுமையான நெரிசலுடன் சென்னையை விட்டு பல ஆயிரம் நபர்கள் தங்கள் ஊர்களுக்கு வெளியேறினார்கள். இது மாதிரியான கட்டங்களில் மக்களின் இந்த நெரிசலைப் பார்த்து கொரோனா இரக்கம் காட்டி ஒதுங்கி விடுமா? ஒடுங்கி விடுமா?

இப்படி விவாதிப்பதற்கும் நோய் பரவியதற்கும் பல காரணங்களை கண்டறிய முடியும் என்றாலும் அவற்றை எல்லாம் புறந்தள்ளி விட்டு அரசின் எந்த உத்தரவையும் மீறாத முஸ்லிம்களை நோயை பரப்பக் கூடியவர்களாக சித்தரிப்பது அநாகரீக அரசியலாகும்.

உலகப் போரிலும் ஒரு துவேஷமா?

இந்திய நாடு கொரோனா எனும் பெருந்தொற்று நோயை சந்தித்துள்ள நெருக்கடியான இத்தருணத்தில் இதை மக்கள் ஒரு மூன்றாம் உலகப் போராக பார்க்கின்றார்கள். இந்த மூன்றாம் உலகப் போரில் சாதி, மத பாகுபாடுகளை களைந்து அனைவரும் போராடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இதிலும் முஸ்லிம்கள் மீதான துவேஷப் பார்வை மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும்.

அரசுகள் அளிக்கும் இலவச சோதனை!

ஜெர்மனி, தென் கொரியா போன்ற நாடுகளில், தனித்திருத்தலோடு சேர்த்து அதிக அளவில் கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகளும் முறையாக நடைபெறுகின்றன. நம் நாட்டு பிரதமர் போன்று மக்களுக்கான சமூக விலகலை அறிவித்து விட்டு அந்த நாடுகளின் பிரதமர்கள் சமூகத்தை விட்டு விலகியிருக்க வில்லை. சமூகத்திற்கான இலவச பரிசோதனையையும் அளித்துக் கொண்டிருக்கின்றன

8 கோடி மக்கள் தொகை கொண்ட ஜெர்மனியில் நான்கரை லட்சம் பேர் அளவிற்கு பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில் அங்கே இந்த நோய் தொற்றுக்கான சிகிட்சைகளும், பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மிக நேர்த்தியாக‌ செயல்படுத்தப்படுகின்றன.

தென் கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகள் இந்த நோய் தொற்றிலிருந்து வேகமாக மீண்டதன் பின்னணி, சந்தேகப் பார்வையில் விழுந்த அனைவரையும் முறையான பரிசோதனைக்கு அவர்கள் உட்படுத்திக் கொண்டது தான்.

130 கோடி ஜனத்தொகை கொண்ட இந்தியாவிலோ வெறும் 20 ஆயிரம் பரிசோதனைகள் மட்டுமே நடந்திருக்கின்றன! 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் வெறும் 40,000 செயற்கை சுவாசக் கருவிகள் மட்டுமே உள்ளன என்கிறார்கள் மருத்துவர்கள்.

https://static.hindutamil.in/hindu/other/Covid19_BookLET.pdf

இப்படிப்பட்ட சூழலில் நாம் மேலே குறிப்பிட்ட லட்சக்கணக்கானோர் இன்னமும் பரிசோதிக்கப்படாமல் இருப்பது, அதன் முக்கியத்துவத்தை மேலும் அழுத்தமாக உணர்த்துகின்றது.

ஒரே நேரத்தில் ஏராளமான நபர்களுக்கு அதீத பிரச்சனை ஏற்பட்டால் இவை நிச்சயம் பெரும் பற்றாக்குறையாக இருப்பதுடன் மிகப்பெரிய அளவிலான இழப்புகளை உண்டாக்கும் என்று அச்சம் தெரிவிக்கின்றனர்.

இத்தாலி, சீனா போன்று பெருமளவு நோய் பாதிப்பு ஏற்பட்டால் இந்திய அரசிடம் நோயை எதிர்கொள்வதற்குரிய போதுமான தயாரிப்புகள் இல்லை என்கிற காரணத்தால் தான் 21 நாள் ஊரடங்கை தங்களுக்கு பாதிப்பாகவே இருந்தாலும் பலரும் கடைபிடித்து வருகின்றனர்.

கருத்தியல் ரீதியாக மோடியை எதிர்ப்பவர்களும் இந்த ஊரடங்கை கடைபிடித்து வருவதற்கு அதுவே முக்கிய காரணம்.

முஸ்லிம்களின் குடியுரிமையை சந்தேகத்திற்குள்ளாக்கி அந்நியர்களாக மாற்ற முயலும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மோடி கொண்டு வந்த போது இந்தியா முழுக்க தொடர்ச்சியாக பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

தற்போது தற்காலிகமாக அத்தகைய வாழ்வுரிமை மீட்கும் போராட்டங்களையும் தள்ளிவைத்து சமூக அக்கறையுடன் நடந்து கொள்ளும் முஸ்லிம்களா நோயை பரப்பக் கூடியவர்கள்?

மக்கள் ஒன்று கூடுவதால் நோய் பரவுகிறது எனவே ஒன்று கூடுவதை தவிருங்கள் என்று அரசு, சுகாதாரத்துறை அறிவித்த போது கூட்டாக பள்ளிவாசலில் வழிபாட்டை நிறைவேற்றுவதை தவிர்த்து தங்கள் வீடுகளிலேயே வழிபாடு செய்து வருகிறார்கள் முஸ்லிம்கள்.

இவ்வாறாக அரசின் பல உத்தரவுகளையும் மருத்துவர்களின் வழிகாட்டுதல்களையும் சமூக அக்கறையுடன் பேணி வரும் ஒரு சமூகத்தின் மீது வஞ்சகத்துடன் சேற்றை வாரி இறைப்பதை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது.

வெளியீடு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

#COVID19 #CoronaVirusInIndia #CoronaUpdatesInIndia