கொரோனா முன்னெச்சரிக்கை21 நாள் ஊரடங்கு பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க மாநில மத்திய அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை!!

கொரோனா முன்னெச்சரிக்கை
21 நாள் ஊரடங்கு

பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க மாநில மத்திய அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை!!

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவையும் தாக்கத் துவங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசிற்கு . . .

கொரோனோ வைரஸ் அவசர நிலையை கருத்தில் கொண்டு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 1,000 நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் தமிழக முதல்வர்.

ஆனால் இந்த நிதி மிகவும் குறைவானதாகும். தற்போதுள்ள அவசர சூழ்நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் ஏழை மற்றும் அன்றாட மக்களின் வாழ்வாதாரம் மிகவும் கடுமையாக பாதிக்கப்படும். ஏழைகள், அன்றாடக் கூலிகள் உணவுக்கே கஷ்டப்படும் சூழ்நிலை ஏற்படும்.

உணவுக்கே கஷ்டப்படும் சூழ்நிலையில் அனைத்து மக்களும் வாடகை வீட்டிற்கு வாடகை தர அல்லல் படும் சூழல் உருவாகியுள்ளது.

அன்றாடம் தொழில் செய்து ஆயிரம் ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கக்கூடிய மக்களை 21 நாட்கள் வீட்டுக்குள் முடங்கி விட்டார்கள்.

எனவே அவர்களுக்கு வெறும் 1,000 ரூபாயை நிதி உதவியாக அளிப்பது சமாளிக்க முடியாதாகும்.

நிதி உதவியை உயர்த்தி வழங்குவதோடு அதை சரியான முறையில் வங்கிகள் வழியாக மக்களின் கைகளில் சேர்க்கவும் அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா தொற்று நடவடிக்கைகளில் வெளிநாடுகளில் ஒதுக்கப்படும் நிதியைப் போல, நடவடிக்கையைப் போல தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும்.

குறைந்த பட்சம் கேரளா அறிவித்திருக்கும் நிதியைப் போல, சலுகைகளைப் போல தமிழகத்திலும் சலுகைகளை, திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

கேரள அரசு கொரோனா பாதிப்புகளுக்கு 20 ஆயிரம் கோடிகளை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த அவசர நிலையை கருத்தில் கொண்டு கேரளா முழுவதும் 1,000 அரசு உணவகங்களை அமைத்து ரூ.20 க்கு உணவு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்கள்.

இந்த மாதத்திற்கான மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட வேண்டும். அதுபோல வீட்டுவரி மற்றும் தண்ணீர் வரி ஆகியவைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

அதுபோன்ற திட்டங்களை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றது.

மத்திய அரசுக்கு . . .

இந்திய பிரதமர் அறிவித்துள்ள இன்றைய அறிவிப்பில் கொரோனா தடுப்பு மருத்துவ செலவு வகைக்காக 15 ஆயிரம் கோடி ஒதுக்கி அறிவிப்பு செய்துள்ளார்.

கேரள மாநில முதல்வர் 20 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளார். ஒரு மாநிலம் ஒதுக்கிய தொகை கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை.

கத்தார், கனடா போன்ற நாட்டு அதிபர்கள் அந்த நாட்டு மக்களுக்கு செய்த அறிவிப்பு அந்த நாட்டு மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது போல், நம் நாட்டு ஆட்சியாளர்களும் அறிவிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் வரிகளை தளர்த்தினால் மக்கள் விலைவாசி குறைவதில் அவர்களின் கடுமையான பொருளாதார பாதிப்புக்கு ஈடு கொடுத்ததாக அமையும். ஆனால் மத்திய அரசு இதுவரை மக்களுக்கு எந்த சலுகையும் அறிவிக்கவில்லை.

14 நாட்கள் வீட்டில் தங்கி இருப்பவர்களுக்கு உணவு மற்றும் அடிப்படை தேவைகளை சரிசெய்யும் என்று சிங்கப்பூர் அரசு மக்களுக்கு தெரிவித்துள்ளது.

ஆறு மாத காலங்களுக்கு அரசுக்கு வரி கட்ட தேவையில்லை என்று கத்தார் அரசு மக்களுக்கு தெரிவித்துள்ளது.

கனடா அதிபர் ஜஸ்டின் புரூடோ 82 பில்லியன் டாலர் திட்டத்தை அறிவிப்பு செய்துள்ளார்.
மக்களின் வங்கி கணக்கில் அரசு இரண்டு மாதத்திற்கு தேவையான பொருளாதாரத்தை செலுத்தும் என்றும் அறிவிப்பும் செய்துள்ளார்.

எனவே கொரோனா வைரஸ் பாதிப்பால் வீடுகளில் தங்கி அதனால் இழப்பு ஏற்படும் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
இ.முஹம்மது,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.