(மதுரை) அப்துல் ரஹிம் மரணம்:- காவல்துறை கூடுதல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை.

(மதுரை) அப்துல் ரஹிம் மரணம்:-
காவல்துறை கூடுதல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை.

கொரோனா தொற்று தமிழகத்தில் மிக வேகமாக பரவி வரும் சூழலில் அதை தடுப்பதற்கு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பையும், சிரமத்திற்கு மத்தியில் வழங்கி வருகின்றனர்.

தொடர் ஊரடங்கு உத்தரவால் ஏழைகள் ஒவ்வொரு நாளையும் சிரமங்களுக்கு மத்தியிலேயே கழிக்கின்றனர். இவர்கள் தங்கள் குடும்பத்தின் வறுமையை போக்க தினமும் உழைக்க வேண்டும்.
என்பதை நாம் மறுக்க முடியாது.

அரசு அனுமதிக்கும் நேரத்தில் தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்க உழைப்பதில் என்ன தவறு இருக்கிறது.

மதுரையைச் சேர்ந்த அப்துல் ரஹீம் கருப்பாயூரணி பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார்

இன்று (06-04-2020) காலை 9:00 மணிக்கு தனது கடையில் உள்ள ஆடு & கோழிகளுக்கு உணவளிக்க தன்னுடைய மருமகனுடன் அங்கு வந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த காவல்துறையினர் கடை வாசலில் நின்றிருந்த அப்துர் ரஹீமுடைய மருமகனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதை தடுக்க வந்த அப்துர்ரஹீம் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

144 ஊரடங்கு நேரத்தில் வெளியில் வருவது தவறு என்பதை உரிய முறையில் சுட்டிக்காட்டி இருக்கவேண்டுமே தவிர தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த காவல்துறையின் பணி மகத்தானது பாராட்டுக்குரியது என்றாலும் தொடர் ஊரடங்கால் ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து இருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டு அறிவுரை வழங்க வேண்டுமே தவிர கடுமையாக நடந்து கொள்வதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

கொரோனாவை ஒழிக்க மக்கள் அனைவரும் அரசுடன் ஒன்றுபட்டு நிற்கும் நேரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழக அரசுக்கு கலங்கத்தை ஏற்படுத்தும்.

காவல்துறை உங்கள் நண்பன் என்பதை இது போன்ற நேரங்களில் மக்களின் துயரத்தில் உதவி கரம் கோர்த்து நிரூபிக்க கடமைப் பட்டிருக்கின்றனர்.

பணியில் இருந்த காவலர்களின் தவறான அணுகுமுறையால் உயிரிழந்த இறைச்சிக் கடை அப்துல்ரஹீம் குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

நெருக்கடியான நேரத்தில் மனித உயிர்கள் மீது அன்பு காட்டாமல் கடுமையாக நடந்து கொண்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு
இ.முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்