ஓமன் பள்ளிகளில் தமிழை மொழிப்பாடமாக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

ஓமன் பள்ளிகளில் தமிழை மொழிப்பாடமாக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

ஓமன் நாட்டில் இயங்கிவரும் சி.பி.எஸ்.சி பள்ளிகளில் தமிழ் மொழியையும் ஒரு பாடமாக இணைக்க வேண்டுமென்று ஓமன் நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றர்.

ஓமன் நாட்டில் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின்படி 22 ற்கும் மேற்பட்ட இந்திய கலாச்சார பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவ, மாணவிகள் குறிப்பாக தமிழை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் பயின்று வருகின்றார்கள்.

பல்லாயிரம் தமிழ் பேசும் மாணவர்கள் இந்தப் பள்ளிகளில் பயின்று வரும் நிலையில் இந்தப் பள்ளிக்கூடங்களில் இந்திய மொழிப் பாடங்களின் அடிப்படையில் ஹிந்தி, மலையாளம் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிப்படங்கள் நடைமுறையில் இருந்து வருகின்றன.

பல ஆண்டுகளாக இந்தப் பள்ளிகளில் தமிழ் மொழியை ஒரு மொழிப்பாடமாக சேர்க்க வேண்டும் என்று அங்கு வாழும் தமிழ்பேசும் மக்களும், தமிழ் சமுதாய ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தும் கூட இதுநாள் வரை அது நிறைவேறாமல் இருந்து வருகின்றது.

தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நிலையிலும், இந்தியாவின் தொன்மை மொழிகளில் ஒன்றாக தமிழ் விளங்கிவரும் போதிலும், உலகம் முழுவதும் 10 கோடி மக்களால் தமிழ்மொழி பேசப்பட்டுவரும் நிலையிலும், பல நாடுகளில் தமிழ் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், பல்லாயிரம் தமிழ் பேசும் பிள்ளைகள் படிக்கும் ஓமன் பள்ளிகளில் இதுவரை தமிழ் மொழிப் பாடங்கள் சேர்க்கப்படாதது அங்கு வசித்து வரும் தமிழ் பேசும் மக்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் மிகப்பெரிய குறையாகவே இருந்து வருகின்றது.

இந்திய அளவில் இரண்டாயிரத்திற்கும் குறைவானவர்களால் பயன்படுத்தக்கூடிய, ஒன்றுக்குமே உதவாத சமஸ்கிருத மொழிக்கு, சிறப்பு அந்தஸ்து கொடுத்து ஓமன் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றது. இதன்மூலம் மத்திய அரசு தமிழ் மொழியை முற்றிலும் திட்டமிட்டு புறக்கணிக்கின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

இதன் காரணமாக ஓமன் வாழ் தமிழ்பேசும் மக்கள் தங்களின் பிள்ளைகள் தமிழ் எழுதப் படிக்க தெரியாதவர்களாக மாறி விடுவார்களோ என அஞ்சுகின்றனர்.

வேலை நிமித்தமாக குடும்பத்துடன் சென்று இருக்கும் தமிழக மக்கள் சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தாயகம் வந்து விடும் நிலையில் தங்களின் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்க வேண்டும் என்ற

அந்த மக்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை அமல்படுத்துவதற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

மாணவரணி சார்பாக..
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத்