குர்ஆன் வசனங்களை நீக்கக் கோரும், குருட்டுச் சிந்தனையாளனுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

குர்ஆன் வசனங்களை நீக்கக் கோரும், குருட்டுச் சிந்தனையாளனுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் மனிதர்களுக்கு நேர்வழி காட்ட கருணை இறைவனால் காருண்ய நபிக்கு அருளப்பட்ட அற்புத வேதமே குர்ஆன் ஆகும்.

உலகம் நெடுகிலும் கோடான கோடி மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட உன்னத வேதம் குர்ஆன் ஆகும்.

அந்த திருக்குர்ஆன் வேதம்.

  • திக்கற்று நிற்பவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம்.
  • மனக்குழப்பத்திற்கு மகத்தான மருந்து.
  • சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டும் உரைகல்.
  • கண்மூடிப் பழக்கங்களை மண்மூடிப் போகச் செய்வதற்காக அரும்பாடுபட்ட நல்லவர்களின் சரித்திரத் திரட்டு.
  • ஒரு மனிதனின் அகத்தையும் , புறத்தையும் அழகுபடுத்தும் இறையச்சம், மனத்தூய்மை, கொள்கை உறுதி, நற்பண்புகள் இவற்றை போதிக்கும் போதனைக் களஞ்சியம்.
  • தீண்டாமை, பெண்சிசுக் கொலை, தீவிரவாதம், மனித உரிமை மீறல், பெண்ணடிமைத்தனம், திருட்டு , கொலை, கொள்ளை, வன்முறை போன்ற சமூக விரோதச் செயல்களையும்,
    வட்டி , விபச்சாரம், மது , சூது போன்ற சமூகத்தீமைகளையும் வேரறுக்கும் வேதமாகும்.
  • திருமணம், விவாக ரத்து, பாகப்பிரிவினை, பொருளாதாரம் , கொடுக்கல் வாங்கல் இன்னும் மனிதர்கள் அறிந்து கொள்ள வேண்டிய வழிபாடுகளையும் பண்பாடுகளையும், கற்றுத் தரும் வாழ்வியல் வழிகாட்டி.

14 நூற்றாண்டுகளாக பாரெங்கும் திருக்குர்ஆன் நிகழ்த்திய சாதனைகளும், ஏற்படுத்திய மாற்றங்களும் ஏராளம். ஏராளம்.

இத்தகைய உன்னதக் குர்ஆனின் 26 வசனங்களை நீக்க வேண்டுமென உருக்குலைந்த உள்ளம் கொண்ட சையத் வசீம் ரிஸ்வி என்பவன் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றான்

திருக்குர்ஆனின் சில வசனங்கள் தீவிரவாதத்தை தூண்டுவதாகவும், நபிகளாருக்குப் பின் வந்த அபூபக்ர் , உமர் போன்ற ஆட்சியாளர்கள் இக்கருத்தை திருக்குர்ஆனில் புகுத்தி விட்டதாகவும் விஷமி சையத் வசீம் ரிஸ்வி விஷம் கக்கியிருக்கின்றான்.

திருக்குர்ஆன் இறைவனால் பாதுகாக்கப்பட்ட வேதமாகும். மனிதக் கருத்து நுழைவதற்கு இதில் எள்முனையளவும் இடமில்லை.

இதை திருக்குர்ஆனே தெளிவு படுத்துகிறது.

நாமே இந்த அறிவுரையை அருளினோம் . நாமே இதைப் பாதுகாப்போம்.

அல்குர்ஆன் : 15 : 9

இவ்வாறு பன்னெடுங்காலமாய் பல நூறு ஆண்டுகளாய் பாதுகாக்கப்பட்ட வேதத்தை பங்கப்படுத்தும் நோக்கிலே பகுத்தறிவில்லா பகைவன் சையத் வசீம் ரிஸ்வி வகையின்றி வழக்குத் தொடுத்துள்ளான்.

நியாயத்தையும், மனித நேயத்தையும் போதிக்கும் திருக்குர்ஆனில் தீவிரவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

வரம்பு மீறிய எதிரிகள் யுத்தம் செய்ய போர்க்களம் வந்தால் அவர்களோடு யுத்தம் செய்வதையே உன்னதக் குர்ஆன் போதிக்கின்றது.

இதை திருக்குர்ஆன் மட்டும் கூறவில்லை. ஒரு தேசத்தை பாதுகாக்கும் எந்த நாடும் தன் எல்லை தாண்டி எதிரி வந்தால் அவனை பொன்னாடை போர்த்தி வாழ்த்துமா ? அல்லது ஆயுதம் கொண்டு வீழ்த்துமா?

பாரெங்கும் பல நாடுகளும் பல்லாயிரம் கோடி செலவு செய்து பாதுகாப்புப் பணிக்காக இராணுவம் அமைப்பதே அதற்குத்தானே.

இந்த நியாயம் புரியாமல் திருக்குர்ஆன் வசனங்களை சுட்டிக்காட்டி தீவிரவாதம் போதிப்பதாக சங்கிகளின் வாந்தியைத் தான் சையத் வசீம் ரிஸ்வி தன் வாயால் எடுத்திருக்கின்றான்.

ஐநா போன்ற சபைகள் இல்லா காலத்திலேயே மனித உரிமைகளை வகுத்துத் தந்து மனிதம் வளர்த்த வேதம் இது.

போர்க்களங்கள் என்றாலே உரிமை மீறல் நிறைந்திட்ட பொல்லாக் களங்களாக திகழ்கின்றது. ஆனால் போர்க்களங்களில் கூட சில ஒழுங்குகளையும். தர்மங்களையும் வகுத்துத் தந்த வேதம் இது.

எதிரிகளின் குழந்தைகளையும், எதிரிகள் வீட்டுப் பெண்களையும், மதகுருமார்களையும் கொல்லக்கூடாதென்பது தான் இஸ்லாம் கூறும் போர் நெறியாகும்!

இவை எதையும் புரியாமல் அவதூறுகளை அள்ளித் தெளித்து அல்குர்ஆன் வசனங்களை நீக்க வேண்டும் என்பது அநியாயத்தின் உச்சமாகும்.

மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய இரண்டும் இந்தியாவின் இரு கண்களாகும். இந்த நாட்டில் இப்படி ஒரு வழக்கா ? என்று நியாயவான்கள் புருவம் உயர்த்திப் பார்க்கும் அளவிற்கு இது ஒரு புத்திகெட்டவன் போட்ட வழக்காகும். இதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கின்றது.

உச்சநீதிமன்றம் உடனடியாக இவ்வழக்கை தள்ளுபடி செய்வதுடன், இந்தியாவின் மதச்சார்பின்மையை கீறிக்கிழிக்கத் துடிக்கும் சையத் வசீம் ரிஸ்வி என்ற தேச விரோதியை தண்டிக்க வேண்டும் என்பது தான் நியாய உள்ளம் படைத்தவர்களின் உளக்கிடக்கை ஆகும்.

இப்படிக்கு,
இ.முஹம்மது,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.