சபியா கொலை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.

தலைநகர் டெல்லியில் காவல்துறை பாதுகாப்புப் துறையில் சேர்ந்து சில நாட்களே ஆன சபியா என்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப் பட்டுள்ளார். இக்கொடுஞ் செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது.

பணிக்குச் சென்ற அந்த இளம் பெண் பிணமாகத் தான் வீடு திரும்பினாள். 21 வயதே ஆன அந்த இளம் பெண்ணின் உடல் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டப்பட்டுள்ளது. அந்த இளம் பெண் மனிதமிருகங்களால் மிகக் கோரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அப்பெண் எப்படியெல்லாம் துடிதுடித்து இறந்திருப்பார் என்பதை நினைக்கும் போது உள்ளம் பதைபதைக்கிறது. சபியாவை இழந்து வாடும் அவளின் தாய் மற்றும் குடும்பத்தினர் வடிக்கும் கண்ணீரைப் பார்க்கும் போது நம் கண்களும் குளமாகின்றது.
மனிதனாகப் பிறந்த ஒருவனின் உள்ளத்தில் இத்தனை வக்கிரங்களா? இறந்தவள் என்றும் பாராமல் அவள் உடலை மீண்டும் மீண்டும் வெட்டிப் பிளந்த ஈவு இரக்கமற்ற இந்தக் கோரச் செயலை என்னவென்று சொல்வது.

மிருகத்தை விடவும் கேடான அத்துனை குற்றவாளிகளும் இது வரையில் கைது செய்யப்படவில்லை.
டெல்லி மாநில காவல்துறையை கையில் வைத்திருக்கும் ஒன்றிய அரசும் இதுவரையில் ஆக்கப்பூர்வ நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரியவில்லை.
இந்த கோர சம்பவம் பற்றி எந்த கண்டனங்களும் ஒன்றிய அரசு சார்பில் வெளியிடப் படவில்லை.

ஊரில் நடக்கும் உப்புச் சப்பில்லா பிரச்சினைகளையும் ஊதிப்பெரிதாக்கும் சில ஊடகங்களும் சபியா விஷயம் பற்றி வாய் திறக்காததால் ஊனமாகிப் போனது ஊமையாகிப் போனது.
தேசத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் சபியாவின் படுகொலை மட்டுமல்ல. நம் நாட்டில் பல்லாயிரம் பெண்கள் அன்றாடம் இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
இந்நிலையில் ஒரு நல்ல அரசு என்ன செய்ய வேண்டும்.? சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக கைது செய்து அவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும். தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும்.

நீதியை நிலைநாட்ட நினைக்கும் எந்த அரசும் குற்றவாளிகளின் மீது இரக்கம் காட்டக் கூடாது.

குற்றவாளிகளின் மீது இரக்கம் காட்டக்கூடாது என்பது தான் உன்னதக் குர்ஆனும் உலகிற்கு சொல்லும் செய்தியாகும்.
எனவே சபியா படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு இவ்வுலகில் வாழத் தகுதியற்ற அந்த மனித மிருகங்களுக்கு மரணதண்டனையை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் ஒன்றிய அரசும், நீதித்துறையும் இதற்கான வேலைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கின்றது.
இப்படிக்கு,
இ.முஹம்மது,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.