அஸ்ஸாமில் அரசு வன்முறை – தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் கடும் கண்டனம்

அஸ்ஸாமில் அரசு வன்முறை – தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் கடும் கண்டனம்

அஸ்ஸாமில் கோருகுட்டி எனும் கிராமத்தில் உள்ள சிறுபான்மையின மக்களை ஆக்கிரமிப்பு நிலத்தில் இருப்பதாக கூறி வெளியேற்ற காவல் துறையினர் முயற்சித்துள்ளனர்.

அந்த மக்கள் பல தலைமுறையாய் அங்கு வசித்து வந்ததால் உடனடியாக வெளியேறவில்லை.

இருப்பினும் மக்களின் எதிர்ப்பை மீறி அங்குள்ள பல வீடுகளை இடித்து தகர்த்து விட்டனர்.

இந்நிலையில் மறுநாள் மீதமுள்ள பகுதிகளை அகற்ற வரும் போது கிராம மக்கள் அணிதிரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தங்களை வெளியேற்றக் கூடாது என்று கோஷமிட்டு ஜனநாயக வழியில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

அஸ்ஸாமில் நடைபெறுவது பாஜக ஆட்சி என்பதாலும் கிராம மக்களில் கணிசமானோர் முஸ்லிம்கள் என்பதாலும் மாநில முதல்வரின் உத்தரவுடன் கிராம மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை காவல்துறையினர் நடத்தி உள்ளனர்.

காவல்துறையின் அராஜகம் எல்லை மீறி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரு உயிர்கள் அநியாயமாக பலியாகியுள்ளது.

காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்திய காணொளியை ஒரு பத்திரிக்கையாளர் பகிர்ந்துள்ளார்.

அதில் ஏதோ எதிரி நாட்டுடன் இராணுவ யுத்தம் நடத்துவதை போல கண்மூடித்தனமாக கிராம மக்களை நோக்கி சுடுகின்றனர்.

இதில் தான் இரு உயிர்களை அநியாயமாக கொலை செய்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவுக்கு அந்த மக்கள் என்ன செய்து விட்டார்கள்?

ஆக்கிரமிப்பு நிலத்தில் இருப்பது துப்பாக்கிச் சூடு நடத்துமளவு குற்றமா?

படிப்பறிவில்லா சாமானியர்கள் முதல் கொழுத்து பெருத்த பண முதலாளிகள் வரை, சினிமா நடிகர்கள், தனியார் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் என தெரிந்தோ தெரியாமாலோ ஆக்கிரமிப்பு நிலத்தில் இருக்கிறார்கள்.

சாமானிய கிராம மக்களை நோக்கி நீண்ட துப்பாக்கிகள் இத்தகைய பண முதலாளிகளை நோக்கி நீளுமா?

அவர்களையும் பாஜக அரசு இதே போல துப்பாக்கிச் சூடு நடத்தி கொன்று குவிக்க முனையுமா?

கிராம மக்கள் சிறுபான்மையினர் எனும் ஒரே காரணத்தினால் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

பாஜக முதல்வர் மற்றும் அராஜக காவல்துறையின் மனிதாபிமானமற்ற இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது.

ஆக்கிரமிப்பு நிலத்தில் அவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டாலும் கடந்த அறுபதாண்டுகளுக்கும் மேலாக அங்கு அவர்கள் அங்கு வசித்துள்ளனர்.

அவர்களுக்கு தகுதியான வேறு இருப்பிடத்தை கொடுக்க அரசு முன்வராமல் இப்படி காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் தொடுப்பது எவ்விதத்திலும் நியாயமானது அல்ல.

அம்பானி – அதானி போன்ற தனியார் முதலைகளுக்கு தொழில் வளர்ச்சி எனும் பெயரில் நிலத்தை தாரை வார்க்கும் பாஜக அரசுக்கு அப்பாவி மக்களுக்கு கொடுக்க கொஞ்சம் நிலமில்லையா?

மல்லையாக்களும், நீரவ் மோடிகளும் அரசின் பல்வேறு சலுகைகளை அனுபவித்தது மட்டுமின்றி கோடிகணக்கில் ஏமாற்றி விட்டு சென்றார்களே?
அவர்கள் எல்லாம் இந்த காவல்துறையின் கண்களுக்கு தெரியவில்லை.
ஆனால் அப்பாவி ஏழை மக்களின் மீது மட்டும் வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறார்கள்.

காவல்துறை தங்கள் கடமையைத்தான் செய்த தாகவும், காவல்துறையின் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடரும் என துப்பாக்கிச் சூடு தொடர்பாக பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் பேசியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் பலியான கிராம மக்களுக்கு சிறு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.

காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் போலீசாரின் மூன்றாவது குண்டிலேயே தரையில் சுருண்டு விழுந்து விட்டார். அதன் பிறகும் அவர் மீது அத்தனை போலீசாரும் சூழ்ந்து லத்தியால் தாக்குகின்றார்கள்.

இதில் பாசிச சிந்தனை கொண்ட அரசு தரப்பு புகைப்பட கலைஞர் ஒருவர் குண்டடி பட்டு செத்து விழுந்த கிராமவாசியின் மீது ஏறி அவரின் கழுத்திலும் முகத்திலும் கடுமையாக தாக்குதல் தொடுக்கின்றார்.

அரசு இயந்திரத்திற்குள் ஆர்.எஸ்.எஸின் ஊடுருவலை இது காட்டுகிறது.

இவ்வளவு வன்மமான தாக்குதலை நடத்திய பாஜக அரசின் சர்வாதிகார போக்கு கண்டிக்கத்தக்கது.

இந்திய நாட்டில் அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டவர்களே.

எனவே இக்காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய அனைவரும் குற்றவாளிகளாக கருதப்பட்டு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு,
இ.முஹம்மது,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.