நரகில் தள்ளும் முஹ்யித்தீன் மவ்லிது

நரகில் தள்ளும் முஹ்யித்தீன் மவ்லிது

மனித இனம் படைக்கப்பட்டது இறைவனை வணங்குவதற்காகத்தான். இதை இறைவன் திருக்குர்ஆனில் கூறும் போது

ஜின்னையும் மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை.                                                                                                                                                                                                                     அல்குர்ஆன்: 51 : 57

இஸ்லாத்தில் வணக்கம் மிக அவசியம்: வணக்கத்திற்கு நிறைய இலக்கணங்கள் இஸ்லாத்தில் உண்டு.  வணக்ககத்தை இறைவனுக்கு மட்டுமே உரித்தாக்க வேண்டும். இறைவனும் ,இறைத்தூதரும் காட்டித் தந்ததாகவும் அவை இருக்க வேண்டும். இவ்விருவரும் காட்டித்தராத மற்றவை  எதுவும் வணக்கமாக ஆகமுடியாது. அது வழிகேடாகத்தான் ஆகும்.

இன்று தமிழக முஸ்லிம்களில் பலர் இஸ்லாத்தில் இல்லாத தங்களை நரகில் கொண்டு போய் சேர்க்கக்கூடிய பல அனாச்சாரங்களை வணக்கங்கள் என நினைத்து பல இலட்சங்களை செலவழித்து, பல மணி நேரங்களை ஒதுக்கி, பெரும் முயற்சி செய்து அவ்வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொண்டுள்ளனர்.

அதில் முஹ்யித்தீன் மவ்லிதும் ஒன்றாகும். பக்தாதில் பிறந்த அப்துல் காதிர் ஜீலானி என்பவர் இவ்வுலகில் வாழ்ந்து சன்மார்க்கப் பிரச்சாரங்கள் செய்து இதழ்கள் பலதீட்டி வந்துள்ளார். அவர் இயற்றிய பல நூல்கள் இன்றளவும் உள்ளன. இவர் மரணித்தவுடன் இவரை இறைவனின் நேசர் என்றும், இவர் பல அற்புதங்கள் செய்வார் என பல கற்பனைக் கதைகளை பரப்பி வருகின்றனர்.

அப்துல் காதிர் ஜீலானி  வரலாறு என்றும் அவரது கராமத்துக்கள் (அற்புதங்கள்) என்றும் ஏராளமான கற்பனைக் கைச்சரக்குகளை மக்கள் மத்தியில் பரவச் செய்துள்ளனர். இவை அனைத்தும் மார்க்கத்தைக்  கொண்டு வயிறு வளர்க்க நினைத்த மார்க்க வியாபாரிகளின் கைச்சரக்குகளாகும். இதில் ஒன்றான முஹ்யித்தீன் மவ்லிதைத்தான்  ரபீஉல் ஆஹிர் மாதத்தில் மக்கள் ஓதி வருகின்றனர்.

இதில் உள்ள பல பாடல் வரிகள் ஒருவரின் ஈமானை இழக்கச் செய்து இஸ்லாத்தை விட்டே வெளியேற்றும் கொடிய நச்சுத் தன்மை கொண்டதாகும். அதில் ஒரு சிலவற்றை மற்றும் இங்கு குறிப்பிடுகிறோம்.

குழந்தைப் பருவத்திலேயே நோன்பு நோற்றாராம்

اذ غم غرة الصيام    قالت لهم ذات الفطام

لم يلقم اليوم الغلام      ثديا لها أهل المراد

அப்துல் காதிர் ஜீலானி கைக்குழந்தையாக இருந்த போது  மேகம் பிறையை மறைத்தது. இதனால் ஷஃபான் மாதத்தின் கடைசி நாளா? ரமளான் மாதத்தின் முதல் நாளா? என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டது. உடனே மக்கள் அப்துல் காதிர் ஜீலானியின் தாயாரிடம் சென்று விளக்கம் கேட்டனர். அதற்கவர்கள் எனது மகன் இன்று தாய்ப்பால் குடிக்கவில்லை (எனவே ரமலான் நோன்பு ஆரம்பாமாகிவிட்டது) என்றாராம்.

ஒரு மாதத்தின் முடிவையும் அடுத்த மாதத்தின் துவக்கத்தையும் கண்டறிய பிறை பார்க்க வேண்டும் என நபியவர்கள் அழகிய வழி முறையைக் காட்டியிருக்கும் போது குழந்தையாக இருந்த முஹ்யித்தீன் தாய்ப்பால் குடிக்கவில்லை எனவே நோன்பு மாதம் ஆரம்ப மாகிறது என்பதை மார்க்கப் பற்றுள்ள ஒருவர் ஏற்பாரா? பிறை தெரிய வில்லை என்றால் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டுமென சிறுபிள்ளைக்கும் புரியும் விதமாக நபியவர்கள் தெளிவு படுத்தினார்கள் அந்த செய்தி இதோ

நீங்கள் பிறை கண்டு நோன்பு இருங்கள். பிறை கண்டு நோன்பை விடுங்கள் மேகம் மூடிக் கொள்ளுமானால் (முந்தைய மாதத்தை) முப்பதாக முழுமைப் படுத்துங்கள்.                                                                                                                                                                        அறிவிப்பவர்: இப்னு உமர் நூல்: புகாரி: 1909

ஆணவம் பிடித்தவரா முஹ்யித்தீன்:

إذ قال يوم مخبرا بالنعم            عن وارد من ربه ذي الكرم

على رقاب الاولياء قدمي                   فسلموا لذاك كل السلم

அருள் நிறைந்த தம் இறைவனின் அனுமதியுடன் தமக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளை ஒரு நாள் முஹ்யித்தீன் கூறினார். அதில் என் பாதங்கள் (மற்ற எல்லா) அவ்லியாக்களின் பிடரிகள் மீது உள்ளது என்றார். இதை மற்ற அவ்லியாக்கள் பரிபூரணமாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

இதைக் கொஞ்சம் கவனியுங்கள் . இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவமே அல்லாஹ் ஒருவனே எஜமான். மனிதர்கள் அனைவரும் அவன் அடிமை என்பதுதான். ஆனால் முஹ்யித்தீனுக்கு மற்ற அவ்லியாக்கள் எல்லாம் அடிமை  என இறைவனுக்கு நிகரான ஒரு நிலையை இவர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள். இறைவன் தன் நபிக்கு அறிவுரை கூறும் போது கூட இந்த நபி பணிவாக நடக்க வேண்டுமென கட்டளையிடுகிறான். இதில் வேடிக்கை என்னவென்றால் முஹ்யித்தீனைப் புகழுவதற்காக இயற்றப்பட்ட மவ்லிதில் அவரை திமிர் பிடித்தவராக சித்தரிப்பதுதான்.

(நபியே) நம்பிக்கை கொண்டோரிடம் உமது சிறகைத் தாழ்த்துவீராக அல்குர்ஆன்: 15:88

தீனை உயிர்ப்பித்தவராம்.

رأى بفج سقيما   منه ابتغى أن يقيما

لما غدا مستقيما     ناداه أن يا قوامي

إني لدين الرشاد    احييتني كي ينادي

لكم به كل نادي يا محيي الدين حامي

அப்துல்காதிர் ஜீலானி ஒரு நோயாளியைக் கண்டார். அந்த நோயாளி தம்மை எழுப்பி விடுமாறு வேண்டினார். எழுந்து நின்றவுடன் என்னை நிலை நிறுத்தியவரே. நான் தான் நேரான மார்க்கம். என்னை உயிர்ப்பித்து விட்டீரே முஹ்யித்தீனே (மார்க்கத்தை உயிர்பித்தவரே) என்று அந்நோயாளி கூறினாராம்.

இதன் பிறகு தான் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் முஹ்யித்தீன் என்று அழைக்கப்பட்டாராம்.

இந்த வரிகளில் வரக்கூடிய அபத்தங்களை கவனியுங்கள். அல்லாஹ்வின் மார்க்கமாகிய இந்த தீனுல் இஸ்லாம் உடல் நலிவுற்று கிடந்ததாம். அதை அப்துல்காதிர் ஜீலானி தான் நிலை நிறுத்தினாராம். முஹ்யித்தீனின் துணை இன்றி இம்மார்க்கத்தால் எழ முடியாது என எப்படி ஒரு நச்சுக்கருத்தை விதைக்கும் வரிகள் இவை. இக்கருத்தை ஒருவர் நம்பி ஓதினால் அவர் இஸ்லாத்தை விட்டே தொலைதூரம் சென்றுவிடுவாரே.

நேர்வழி காட்டுவது யார் ?

فوز و اقبال لمن هداه          ومن راى من اقتدى هداه

அவர் யாருக்கு நேர்வழி காட்டினாரோ அவருக்கும், அவரது நேர்வழியைப் பார்த்தவருக்கும் வெற்றியும், முன்னேற்றமும் உண்டு.

அப்துல் காதிர் ஜீலானி எத்தனையோ காபிர்களை பார்த்திருப்பார். அவர்கள் அனைவரும் நேர்வழி பெற்றார்களா? அப்துல் காதிர் ஜீலானியைக் கண்டவர்களை மற்ற எத்தனையோ பேர் கண்டார்கள் அவர்கள் அனைவரும் நேர்வழி பெற்றார்களாம்

நேர்வழி என்பது இறைவன் புறத்திலுள்ளவை. நாடியவர்களுக்கு அதை வழங்குவான். இதைத் தான் திருமறைக் குர்ஆன் போதிக்கிறது. ஆனால் நேர்வழி என்பது முஹ்யித்தீனிடம் உள்ளது என்ற கருத்து கடைந்தெடுத்த அபத்தக் கருத்து இல்லையா இப்படியான இறைவனுக்கு இணை கற்பிக்கும் விஷக்கருத்துகளின் கேந்திராமாக முஹ்யித்தீன் மவ்லிது இருக்கிறது.

இழிவிற்குரிய இணைவைப்பும், இறைவனின் எச்சரிக்கையும்:

انت حقا محيى الدين       انت قطب باليقين

كنت غوثا كل حين          فادفعن عنا حينا

நிச்சயமாக நீங்கள் இம்மார்க்கத்தை உயிர்ப்பித்தவராவீர். உறுதியாக நீங்கள் அச்சாணியாகத் திகழ்கிறீர்கள். எல்லா நேரமும் நீங்கள் இரட்சகராக இருக்கிறீர்கள். எனவே நாங்கள் அழிவதை விட்டும் எங்களைக் காப்பாற்றுங்கள்.

இறைவனை அழைப்பதற்குரிய வார்த்தைகளைக் கொண்டு அப்படியே அப்துல் காதிர் ஜீலானியை அழைக்கிறார்கள். இது தெளிவான இணைவைப்பு வரிகள் இல்லையா?

 

  • இணை கற்பித்தல் மகத்தான அநியாயம் (31:13)
  • இணை வைத்தால் நல்லறங்கள் அழிந்து விடும், (39:65)
  • இணை கற்பிப்போருக்கு சொர்கத்தை அல்லாஹ் ஹராமாக்கிவிட்டான் ( 5:72)
  • தனக்கு இணை கற்பிக்கப்படுவதை இறைவன் மன்னிக்கமாட்டான்.(4:48) இவையெல்லாம் இணை வைத்தலின் அபத்தங்கள்  பற்றி இறைவன் திருமறைக் குர்ஆனில் கூறுபவை .

பழிப்பிற்குரிய இணை வைத்தலின் இந்த எல்லா அம்சங்களும் முஹ்யித்தீன் மவ்லிதில் மலிந்து கிடக்கின்றன.

நரகிற்குரிய பித்அத்தும் நபிகளாரின் எச்சரிக்கையும்:

நபிகள் நாயகம் காலத்திற்கு பின் இஸ்லாத்தின் பெயரால் உருவாகுபவை அனைத்தும் பித்அத் எனும் நவீன காரியங்களாகும் . இது போன்று புதுமைகள் வரும் காலங்களில் உருவாகும் என்பதையும் அது பற்றிய எச்சரிக்கைகளையும் நபிகள் நாயகம் (ஸல்) தெளிவாக  சுட்டிக் காட்டத் தவற வில்லை.

நம்முடைய மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை யார் புதிதாகச் செய்கிறாரோ அது (இறைவனிடம்) நிராகரிக்கப்பட்டதாகும் என நபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம்: 3541

செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை மார்க்கத்தின் பெயரால் புதிதாக உண்டாக்கப்பட்டவை ஆகும். அவை அனைத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகில் கொண்டு போய் சேர்க்கும்

அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி) முஸ்லிம்: 1573

இஸ்லாத்தின் பெயரால் புதிதாக உருவாகும் நவீன காரியங்கள் பற்றி நபிகள் நாயகம் இப்படி எச்சரிக்கை செய்திருக்கும் போது நபிகளாருக்கு பிறகு பல நூற்றாண்டுகளுக்குப் பின் உருவான முஹ்யித்தீன் மவ்லிது எப்படி ஒரு வணக்கமாக இருக்க முடியும். என்பதை சிந்திப்பீர்,

சுருக்கம் கருதி சில அபத்தங்களைத்தான் நாம் இதில் குறிப்பிட்டுள்ளோம். இது போன்ற வழிகேடுகளும், அபத்தங்களும் முஹ்யித்தீன் மவ்லிதில் நிரம்ப உண்டு. இதைத் தான்  ரபீஉல் ஆஹிர் மாதத்தில் முஸ்லிம்கள் பக்தி பரவசத்தோடு ராகம் போட்டு ஓதி வருகின்றனர். மறுமையில் சொர்க்கத்தில் இன்புற்று வாழவே நாம் முஸ்லிம்களாக வாழ்ந்து வருகிறோம் . இந்நிலையில் நம்மை நரகில் கொண்டு சேர்க்கும் இம் மவ்லிதை ஓத வேண்டுமா ? என சிந்திப்பீர் .  அல்லாஹ்வுக்கு அஞ்சி நரகில் கொண்டு போய் சேர்க்கும் இத்தீமையை விட்டு  விலகிக் கொள்ளுங்கள்  . அல்லாஹ் நம் சமுதாயத்தை காப்பானாக