புனிதமிக்க முஹா்ரமும் புரியாத முஸ்லிம்களும்

  1. ஏக இறைவனின் திருப்பெயரால்… 

புனிதமிக்க முஹா்ரமும் புரியாத முஸ்லிம்களும். 

முஹா்ரம் மாதத்தின் சிறப்பு. 

இஸ்லாத்தின் புனிதமிக்க மாதங்களில் ஒன்றுதான் முஹா்ரம் மாதம். இம்மாதத்தை “அல்லாஹ்வுடைய மாதம்“ என்று நபி (ஸல்) அவா்கள் சிலாகித்து கூறியிருப்பது அதன் சிறப்பை உணா்த்துவதாக உள்ளது. (பார்க்க முஸ்லிம் 1163) மகத்துவமிக்க இந்த முஹா்ரம் மாதத்தில் ஒரு நாள் புனிதமிக்க நாளாகும். அந்த நாள் ஆஷூரா எனும் பத்தாம் நாளாகும். 

நபி (ஸல்) அவா்கள் மதீனாவிற்கு வந்த போது யூதா்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதை கண்டார்கள். இது என்ன நாள்? இதில் நீங்கள் நோன்பு நோற்கிறீா்களே? என்று அவா்களிடம் கேட்டார்கள். அதற்வா்கள் இது மகத்தான நாளாகும். இந்த நாளில்தான் முஸாவையும் அவா்களின் சமுதாயத்தையும் ஃபிர்அவ்னிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தாரையும் நீரில் முழ்கடித்தான். எனவே மூஸா (அலை) அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காக இந்த நாளில் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்களும் இன்று நோன்பு நோற்கிறோம் என்று யூதா்கள் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவா்கள் “உங்களை விட மூஸாவுக்கு நாங்கள்தான் அதிகம் உரிமை படைத்தவா்கள்“ என்று கூறி அந்த நாளில் நோன்பு வைத்தார்கள். பிறரையும் நோன்பு நோற்குமாறு உத்தவிட்டார்கள். (பார்க்க புகாரி 2004, முஸ்லிம் 1130). (மூஸா நபியின் வரலாறு சுருக்கத்தை 7 103 – 126, 26 61- 67 ல் காண்க). 

ஆஷூரா நாளின் சிறப்பு.

 இந்த ஆஷூரா நாளில் நாம் நோன்பு நோற்பது சிறப்பிற்குரியதாகும். ரமலானுக்கு பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமான முஹா்ரம் மாதத்தின் நோன்பாகும் என்பது நபிமொழி (புகாரி 1163). ஆஷூரா நோன்பு பற்றி நபி (ஸல்) அவா்களிடம் கேட்கபட்டதற்கு “அது சென்ற வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாகும்“ என்று கூறினார்கள். (முஸ்லிம் 1162) 

முஹா்ரம் மாதத்தின் பிறை 9, 10 நோன்பு நோற்பது நபிவழி. 

என்றாலும் நாம் முஹர்ரம் 9-ம் நாளும் 10-ம் நாளும் நோன்பு வைப்பது நபிவழியாகும். நபி (ஸல்) அவா்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்கும்படி கட்டளையிட்டபோது “அல்லாஹ்வின் தூதரே! அந்த நாள் யூதா்களும் கிறித்தவா்களும் புனிதப்படுத்தும் நாளாயிற்றே“ என்று நபித்தோழா்கள் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவா்கள் “அல்லாஹ் நாடினால் எதிர்வரும் ஆண்டில் ஒன்பதாம் நாளும் சோ்த்து நோன்பு நோற்போம்“ என்று கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு வருவதற்குள் அவா்கள் மரணித்துவிட்டார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவா்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 1134). 

மேலும் நபி (ஸல்) யூத, கிருத்தவா்களுக்கு மாறு செய்யுமாறு கட்டளையிட்டுள்ளார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

முஹா்ரம் மாதத்தின் செய்யப்படும் பித்அத். 

நபி (ஸல்) அவா்களின் மரணத்திற்கு பிறகு முஹா்ரம் 10ம் நாளில் கர்பலாவில் ஹூஸைன் (ரலி) கொல்லப்பட்டதை காரணமாக வைத்து இன்றும் அதே நாளில் அந்த துக்கத்தை காட்டுவதற்காக சிலா் பஞ்சா எடுத்து, பூக்குழி என்ற பெயரில் தீமிதிக்கின்றனா். தங்கள் சட்டைகளை கிழித்து மார்புகளில் அடித்து கொள்கின்றனா். மேலும் சிலா் கொளுக்கட்டைகளை சமைத்து ஹூஸைன் (ரலி) அவா்களுக்காக பாத்திஹா ஓதுகின்றனா். சிலா் நபி (ஸல்) அவா்கள் நமக்கு வழிகாட்டிய ஆஷூரா நோன்பைக் கூட ஹஸனார், ஹூஸைனாருக்காக நோற்கப்படும் நோன்பு என்று கூறுகின்றனா். இது மார்க்கத்தில் இல்லாத அனாச்சாரங்களாகும். சிலா் முஹா்ரம் மாதத்தின் முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடுகின்றனா். இவையெல்லாம் நபி (ஸல்) அவா்கள் காட்டித்தராத பிற்காலத்தில் உருவான பித்அத்கள் (புதுமைகள்) ஆகும். 

நம்மால் ஏவப்படாத காரியத்தை எவன் செய்கிறானோ அது நிராகரிக்கப்படும் என்றும் நம்முடைய மார்க்கத்தில் இல்லாத ஒன்றை எவன் உருவாக்குகிறானோ அது நிராகரிக்கப்படும் என்றும் நபி (ஸல்) அவா்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம் 1718, 2697). 

“துன்பத்தின் போது கன்னத்தில் அடித்துக் கொள்பவனும், சட்டையை கிழித்து கொள்பவனும் முட்டாள் தனமான வார்த்தைகளால் புலம்புபவனும் நம்மை சார்ந்தவனல்ல“ (புகாரி 1297, முஸ்லிம் 103) என்றெல்லாம் நபி (ஸல்) அவா்கள் கூறியிருப்பதால் இது போன்ற பித்அத் மற்றும் அனாச்சாரங்களிலிருந்து நாம் விலகிக் கொள்ள வேண்டும். அல்லாஹ் அருள் புரிவானாக!.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.