மவ்லிதும் மீலாதும் இறைவணக்கமா?

மவ்லிதும் மீலாதும் இறைவணக்கமா?

இஸ்லாத்தின் அடிப்படை விதி

எந்த ஒரு காரியமும் வணக்கமாக கருதப்பட வேண்டுமானால் அதை செய்வதால் மறுமையில் ஏதேனும் நன்மை கிடைக்கும் என்று நம்ப வேண்டுமானால் அந்த காரியம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் கற்றுத்தர பட்டிருக்க வேண்டும், அல்லது அவர்கள் முன்னிலையில் அக்காரியம் நிகழ்ந்து அதை அவர்கள் அங்கீகரித்து இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத எந்த காரியமும் ஒரு வணக்கமாக மறுமையில் நன்மை அளிப்பதாக ஆக முடியாது

நபிகளார் தன்னை எப்படி மதிக்க வேண்டும் என்று…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பின் ஒரு வணக்கத்தை மற்றவர்களும் உருவாக்கலாம் என்று யாரேனும் கருதினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வணக்கங்களை முழுமையாக கற்று தரவில்லை என்று அவர் கருதுகிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பின் மற்றவர்களுக்கும் வரக்கூடும் என்றும் அவர் கருதியவராகிறார் .

நபிகளாருடன் நிறைவடைந்த இறைச் செய்தி

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.

அல்குர்ஆன் 5:3

மார்க்கத்தில் எவையெல்லாம் உள்ளனவோ அவை ஒவ்வொன்றையும் நான் கூறி விட்டேன். புதிதாக எதையும் உருவாக்கிட அவசியமில்லை. அது கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இந்த மவ்லிதுகள் இருக்கவில்லை. அல்லாஹ்வால் நேரடியாக முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் மவ்லிதுகள் இருக்கவில்லை என்பதே மவ்லிதுகளை நிராகரிக்க போதுமான காரணமாகவுள்ளது.

”நமது உத்தரவின்றி யாரேனும் ஒரு அமலை செய்தால் அது நிராகரிக்கப்படும்” என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) நூல் முஸ்லிம் 3243

“நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்” எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்

அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) நூல்கள் புகாரி 2697 முஸ்லிம் 3242

 

“மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும் புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் பித் அத் அனாச்சாரம் ஆகும் ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும்” எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்

அறிவிப்பவர் ஜாபீர் பின் அப்துல்லா நூல் நஸயீ 1560

 

மவ்லிதின் முகப்பு அட்டையில் இது கஸ்ஸாலி எழுதியது கதீப் அவர்கள் எழுதியதாகவும் கூறப்பட்டுள்ளது என்று எழுதி வைத்துள்ளனர்

இவர் தான் எழுதினார் என்று கூட குறிப்பிட்ட எந்த குறிப்பும் இல்லை. கஸ்ஸாலியோ, கதீபோ எழுதி இருந்தால் உலகம் முழுவதும் உள்ள அவர்களின் அபிமானிகள் இதை அறிந்திருக்க வேண்டும்.

தாங்களாகவே இதை எழுதிக் கொண்ட சில வழிகேடர்கள் தங்கள் பெயரில் இதை பரப்பினால் மக்களிடம் எடுபடாது என்று கருதினார்கள். மக்களிடம் யாருக்கு நல்ல அறிமுகம் உள்ளதோ அவர்கள் பெயரைப் பயன்படுத்துவோம் என்ற திட்டத்துடன் தான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்

மேற்கண்ட இரு நூல்களின் பட்டியலில் சுப்ஹான மவ்லிது என்பது இடம்பெறவே இல்லை. அவர்களே எழுதியிருந்தாலும் அதனால் அது மார்க்கமாக ஆகாது என்பது தனி விஷயம்.

மார்க்கம் முழுமைப்படுத்த பட்டு 14 நூற்றாண்டுகள் சென்று விட்டனர் இந்த மவ்லிதுகள் சுமார் 300 ஆண்டுகளாகத்தான் தமிழகம் மற்றும் கேரளாவில் நடைமுறையில் உள்ளது.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட எந்த நூலிலும் இதுபற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

இணைவைத்தல்

”கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள். அல்லாஹ்வின் தூதர் என்றும் அடியார் என்றும் கூறுங்கள்”

அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல் புகாரி 3445, 6830

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை புகழவே இந்த மவ்லிதுகள் என்பதை ஒரு வாதத்துக்கு ஏற்றுக்கொண்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய இந்த வரம்பை மீறிய புகழ்கிறார்கள். சுபஹான மவ்லிதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் நிலையில் நிறுத்தக்கூடிய பாடல்கள் பல உள்ளன.

மவ்லித் வரிகள் சில

பாவங்களை அழிப்பவரே! நும் மீது ஸலாம்!

கவலைகளை அகற்றுபவரே! நும் மீது ஸலாம்!

 

பாவங்களை மன்னிப்பவன் அல்லாஹ் ஒருவனே என திருக்குர்ஆன் கூறுகிறது

இழிவு ஊட்டும் சிறு பிழைகள் யாவும் பொறுப்பது தாங்களன்றோ

அழிவேற்படுத்தும் வன்பிழைகள் அனைத்தும் பொறுப்பது தாங்களன்றோ

 

என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித்தருள்வீரே

சின்னஞ் சிறிய தீமைகளை சீராய் பொறுத்தருள் பொறுத்தருள் புரிபவரே

 

இந்த வார்த்தைகள் குரலுடன் எப்படி குர்ஆனுடன் எப்படி முரண்படுகிறது என்று பாருங்கள்

அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? அல்குர்ஆன் 3:135

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதை) தெரிவிப்பதாக!

அல்குர்ஆன் 39:53

நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும் நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே நீர்) கூறுவீராக

அல்குர்ஆன் 72:21

அல்லாஹ் சோதிக்க நாடுபவரை  அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் (முஹம்மதே) அதிகாரம் பெற மாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு

அல்குர்ஆன் 5:41

”அல்லாஹ்விடம் நான் தினமும் நூறு தடவை பாவ மன்னிப்பு கேட்கிறேன்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர் அல் அக்ர் (ரலி) நூல் முஸ்லிம் 4870

முகமது நபி அவர்கள் இறைவனிடமே பாவமன்னிப்புத் தேடினார்கள்.

மவ்லிதில் உள்ள வாசகங்கள் அல்லாஹ்வுடைய நிலைக்கு நபிகள் நாயகத்தை வைப்பதால் இது இணைவைப்பாகும்

பிறந்தநாள் கொண்டாடுவது யார் கலாச்சாரம்?

இஸ்லாத்தில் பிறந்த நாள் கொண்டாடுவது கிடையாது. பிறந்த நாள் கொண்டாடுவது கிருத்தவர்களின் கலாச்சாரம். அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் யூத, கிறித்தவ கலாச்சாரத்திற்கு மாறு செய்ய சொன்னார்கள்.

யார் நமது வழிமுறையை விட்டு விடுகிறாரோ அவர்கள் அவர்களைச் சார்ந்தவர்களே

நூல் முஸ்லிம்

யார் பிறமதக் கலாச்சாரத்தை பின்பற்றுகிறாரோ அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் இல்லை நூல் புகாரி

 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறார்களோ அது மறுக்கப்பட வேண்டியதே”

ஆயிஷா (ரலி) புகாரி 2697

நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் தன் பிறந்த நாளையோ தன் பிள்ளைகளின் பிறந்த நாளையோ தாமும் கொண்டாடியது இல்லை, பிறரை கொண்டாடும்படி கூறவும் இல்லை.

மேலும் நபி (ஸல்) அவர்களை எல்லா அம்சங்களிலும் நூற்றுக்கு நூறு பின்பற்றி வந்த நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களுடைய பிறந்தநாளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்களா என்றால் அதுவும் இல்லை. அதற்காக விழா கொண்டாடவும் இல்லை.

 

இதன் நோக்கம் நன்மையை ஏவி தீமையை தடுப்பதற்காகவே,

நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர் அல்குர்ஆன் 3:104