கொரோனா வைரஸ் (Covid-19)முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்போம்

Click here to download PDF file

 

கொரோனா வைரஸ் (Covid-19)
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்போம்

கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் அதிலிருந்து மக்களைக் காப்பதற்குப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் செய்து வருகின்றன.

கொரோனா வைரஸானது, கோவிட் 19 (Covid-19) என்ற நோயை உண்டாக்குகின்றது. கோவிட்-19 நோயானது, நுரையீரல் மற்றும் சுவாசக் குழாய்களை தாக்குகின்றது. இந்த வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்க முடியாத காய்ச்சல் மற்றும் வறட்டு இருமல் ஆகியவற்றால் அவதிப்படுவார்கள். இவ்வாறான அறிகுறிகள் முதல் வாரத்தில் மிதமாக இருக்கும்; இரண்டாவது வாரத்தில் அதிகமாகி, மிகத் தீவிரமடையும்.

கொரோனா வைரஸ் புதிய வகை வைரஸாக இருப்பதால், அது எவ்வாறு பரவுகின்றது என்பது இன்னும் முழுமையாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. நாம் இருமும் போது வெளியாகும் துளிகள் மூலமாகப் பரவலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மிக வேகமாகப் பரவக்கூடிய இந்தக் கொரோனா என்பது கொடிய வைரஸ் என்றாலும் இதை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

கொரானா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் , சுகாதாரத்துறை நிபுணர்கள், அரசு சொல்லும் அறிவுரைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

தற்காப்பு நடவடிக்கைகள்

 • இந்த வைரஸ் பரவாமல் தடுக்க முதலில் நம்மையும், நம் இருப்பிடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 • கொரோனா வைரஸானது கண், மூக்கு, வாய் வழியாகச் சென்று தாக்குகின்றது. இந்தப் பாகங்களை நாம் அடிக்கடி தொடுவதால், நோய் வராமல் தடுக்க நமது கைககளைச் சுத்தமாக வைத்திருப்பது மிக மிக அவசியம்.
 • இரு கைகளையும் சோப்பு போட்டுக் கழுவி, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 • சோப்பு, தண்ணீர் இல்லையென்றால் சானிடைசர் ஜெல் கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
 • வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பியவுடன் அல்லது வீட்டிலிருந்து புறப்பட்டு வேலைக்குச் சென்றவுடன் கைகளை அவசியம் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
 • கைகளை குறைந்தது 20 நொடிகள் கழுவ வேண்டும்.
 • இருமினாலோ, தும்மினாலோ வாய் மற்றும் மூக்கு ஆகியவற்றை முழங்கையின் மேற்புறத்தால் மூடிகொள்ள வேண்டும். கைக்குட்டையாலோ அல்லது கைகளாலோ வாய் மற்றும் மூக்கை அறவே மூடவேண்டாம். டிஸ்யூ பேப்பர் உபயோகிப்பவர்கள் அதைக் கவனமாக குப்பைத் தொட்டியில் போட்டு, பின்னர் கைகளை மேற்கூறியபடி சுத்தம் செய்ய வேண்டும்.
 • யாரேனும் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிந்தால் அல்லது அதீத காய்ச்சல், வறட்டு இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவர்களிடமிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஒதுங்கி இருக்க வேண்டும்.
 • முக்கியத் தேவை இருந்தால் மட்டுமே வெளியூர் செல்ல வேண்டும். இயன்ற வரை சொந்த வாகனத்தில் பயணிப்பது சிறந்தது. வேறு வழி இல்லாவிட்டால் மட்டுமே ரயில், பஸ் போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும்.
 • ஹோட்டல், பொது மக்கள் அதிகமாகக் கூடும் அனைத்து இடங்களையும் தவிர்த்துக் கொள்ளவும்.
 •  வெளியே செல்லும் பொழுது மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும்.

செய்யக் கூடாதவை

 • கைகள் அழுக்காக இருந்தால் கண், வாய், மூக்கு போன்றவைகளை அறவே தொடவேண்டாம்.

எப்பொழுது மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்?

 • அதீத காய்ச்சல், கட்டுக்கடங்காத வறட்டு இருமல் மற்றும் மூச்சுத் திணறல் இருந்தால் மருத்துவமனைக்கு செல்லவும்.

கவனத்துடன் இருக்க வேண்டியவர்கள்

 • 70 வயதும் அதற்க்கு மேலான முதியவர்கள், கர்ப்பிணிகள், நெடுங்கால வியாதியஸ்தர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவைக்கைகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

சிகிச்சைகள்

 • கொரோனா வியாதிக்கென்று தனி மருத்துவம் இல்லை.
 • காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் போன்ற அறிகுறிகளுக்கு தேவையான மருத்துவம் செய்துகொண்டு, கொரோனா வைரஸ் வியாதியை நமது உடம்பே நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தி கொண்டு குணப்படுத்த வழிவகுக்க வேண்டும்.
 • கொரோனா நோயால் தாக்கப்படடால், மாஸ்க் போட்டு கொள்வது அவசியம்.
 • அத்துடன் நோய் பரவாமல் இருக்க ஒருவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம்.

இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் கொரானாவில் இருந்து நம்மையும் தற்காத்து, நம்மைச் சுற்றியிருப்பவர் களையும் காத்துக் கொள்ளமுடியும், இன்ஷா அல்லாஹ்!

ஆக்கம் : Dr K P அஜ்மல் கான் (தணிக்கை குழு உறுப்பினர், TNTJ)

வெளியீடு:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்