மது ஒழிப்பு – நோட்டீஸ்

உலகில் பல்வேறு குற்றச்செயல்கள் நடைபெறுவதற்கான முதன்மை காரணம் “மது” என்ற போதை பொருள் தான்.
மது உடலுக்கும், வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடுதான் என்பதை அனைவரும் அறிந்தே வைத்துள்ளனர். யாரும் இதில் மாற்றுக் கருத்து சொல்வதில்லை.
ஆனாலும், மதுவினால் தீங்குதான் ஏற்படுகிறது என்று அறிந்துக்கொண்டே அதற்கு அதிகமானோர் அடிமைப்பட்டு இருப்பதே வேதனையான விஷயம்.
இதனால் உயிரை, மானத்தை, குடும்பத்தை, ஆரோக்கியத்தை இழப்பவர்கள் ஒருபுறம் என்றால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பெரும் குற்றங்களை நாட்டில அரங்கேற்றுபவர்களும் மறுபுறம் இருக்கிறார்கள்.
மதுவினால் பல குடும்பங்களும், நாடும் நாச நிலைக்கு சென்றாலும் இதன் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கும் லாபம் மட்டுமே அரசின் குறிக்கோளாக இருக்கிறது. நாட்டு மக்களை பற்றியோ நாட்டை பற்றியோ எவ்வித கவலையும் அவர்களுக்கு இல்லை.
இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், மதுவிற்கு மக்கள் அடிமைப்பட்டு விட்டார்கள். இனிமேல் நாம் நிறுத்தினாலும் அவர்களால் நிறுத்த இயலாது என்று அறவீனமான கருத்தொன்றை கூறுகிறார்கள்.
வரலாற்று பக்கங்களை சற்று பின்னோக்கி திருப்பி 1400 ஆண்டுகளுக்கு முன்னே சென்றால், அப்போது வாழ்ந்த அரபிய சமூகமும் மதுவிற்கு அடிமைப்பட்டு கிடந்தார்கள்.
சாதாரண மதுப்பிரியர்கள் அல்ல. பீப்பாய், பீப்பாய்க்களாக ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளிலேயே மதுவை சேமித்து வைத்திருக்கும் அளவிற்கு கடும் பிரியர்களாக இருந்தார்கள்.
இதனால் அவர்கள் செய்யும் காட்டு மிராண்டி காரியங்களுக்காகவே உலகினால் அவர்கள் அறியாமைக் காலச் சமூகம் என்று அழைப்பட்டனர்.
இந்த சூழ்நிலையில் முஹம்மது(ஸல்) அவர்களின் மூலம் இஸ்லாம் அவர்களுக்கு கிடைக்கிறது. பிறகு உலகமே வியந்துப் பார்க்கும் அளவுக்கு ஒழுக்கச் சீலர்களாக அவர்களை மாற்றுகிறது.
அவர்களில் ஒவ்வொருவரும் தாங்கள் சேர்த்து வைத்திருந்த மதுவை வீதிகளிலே போட்டு உடைத்தார்கள் என்று வரலாறு சொல்கிறது.
இத்தகைய மாற்றத்தை அவர்களது வாழ்வில் இஸ்லாம்தான் கொண்டு வந்தது.
காரணம், சட்டத்தை மக்கள் ஏற்கும் விதத்தில் இஸ்லாம் எடுத்துரைத்ததுதான்.
நம் நாட்டு அரசை பொருத்தவரையில், அதுவே மதுவை அனுமதித்து தயாரித்து விற்பனை செய்யும் நிலையில் இருந்துக் கொண்டு வெறும் வாய் வார்த்தையாக மாத்திரம் மது தீங்கு என்று சொல்லிக்கொண்டுள்ளது.
ஆனால் இஸ்லாம் அவ்வாறு செய்யவில்லை. மதுவிற்கு அடிமைப்பட்டு கிடக்கும் இச்சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றால் ஒரேடியாக தடை என்று சொன்னால் இதை யாரும் கண்டுக்கொள்ள மாட்டார்கள் என்பதற்காக சிறிது சிறிதாக தடை செய்கிறது.
பேரீத்தம் மற்றும் திராட்சை பழங்களிலிருந்து மதுவையும், அழகான உணவையும் தயாரித்துக்கொள்கிறீர்கள். இதிலே சிந்திக்கும் சமுதாயத்திற்கு அத்தாட்சி இருக்கிறது.
அல்குர்ஆன் 16: 67
மது மற்றும் சூதாட்டம் பற்றி (நபியே!) உங்களிடம் கேட்கின்றார்கள். அவ்விரண்டிலும் பெரும் தீங்கும், மக்களுக்கு சிறு பயனும் இருக்கிறது. அவ்விரணடின் தீங்கு அதன் பயனைவிட மகிப்பெரியதாகும் என்று கூறுவீராக!.
அல்குர்ஆன் 2: 219
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை போதையாக இருக்கும் சமயத்தில் நீங்கள் தொழுகைக்கு நெருங்காதீர்கள்!
அல்குர்ஆன் 4: 43
மது, சூது, பலிபீடங்கள், (குறி பார்ப்பதற்கான) அம்புகள் இவையனைத்தும் ஷைத்தானின் காரியத்தைச் சார்ந்த அருவருக்கத்தக்கவையாகும். அவற்றை விட்டு நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். நீங்கள் வெற்றிப் பெறக்கூடும்.
மது மற்றும் சூதாட்டத்தின் மூலம் உங்கள் மத்தியில் பகைமை மற்றும் குரோதத்தை ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும், தொழுகையை விட்டும் தடுக்கவும் ஷைத்தான் நாடுகிறான். எனவே, (அதிலிருந்து) நீங்கள் விலக மாட்டீர்களா?
அல்குர்ஆன் 5: 90, 91
இந்த நான்கு வசனங்களும் மதுவை இஸ்லாம் எவ்வாறு பகுதி பகுதியாக தடைசெய்ய மக்களை பக்குப்படுத்துகிறது என்பதை பாருங்கள்.
முதல் வசனத்தில் பழங்களிலிருந்து எடுக்கப்படும் உணவுதான் அழகானது மது அழகானது இல்லை என்ற கருத்தை இஸ்லாம் சொல்கிறது.
இரண்டாம் வசனத்தில் மதுவில் நன்மையை விட தீங்குதான் அதிகம் இருக்கிறது என்று சொல்கிறது.
மூன்றாம் வசனத்தில் தொழுகைக்கு வரும்போதாவது மது அருந்தாமல் வர வேண்டும் என்று கூறுகிறது.
நான்காம் வசனம் ஒட்டு மொத்தமாக தடுக்கிறது.
இவ்வாறு இஸ்லாம் மதுவிற்கு அடிமைப்பட்டவர்களிடம் முழுவதுமாக மதுவை தடை செய்தது.
இஸ்லாம் மாத்திரம்தான் மதுவை மார்க்க சட்டமாக தடை செய்கிற வழிமுறையை கையில் எடுத்திருக்கிறது.
ஏனெனில், ஒருவன் அரசாங்கத்திற்கு கட்டுபடுவதை விட தான் சார்ந்திருக்கும் ஆன்மீகத்திற்கு அதிகம் கட்டுபடுவான்.
அந்த அடிப்படையில் தான் இஸ்லாம் மதுவை தடை செய்து. அது தீங்கு விளைவிக்க கூடியது என்று பகிரங்கப்படுத்துகிறது.
மதுவின் தீங்கிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வாய்ப்பு இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்களுக்கே கிடைக்கின்றது.