ஸஃபர் பீடை! இஸ்லாத்தில் உண்டா?

ஸஃபர் பீடை! இஸ்லாத்தில் உண்டா?

அகிலத்தின் இறைவன் தந்த அறிவுப்பூர்வ மார்க்கம்

அறிவுப்பூர்வ கருத்துக்களையும், ஆக்கப்பூர்வ சிந்தனைகளையும் இஸ்லாம் உலகிற்கு எடுத்துரைக்கிறது. இஸ்லாம் கூறும் வழிபாடுகளும், பண்பாடுகளும் பகுத்தறிவு நிறைந்தது. மூடநம்பிக்கைகளுக்கும் முட்டாள் தனங்களுக்கும் இஸ்லாத்தில் இம்மியளவும் இடமில்லை.

காலத்தை நல்லது , கெட்டது எனக் பிரித்து அதற்கேற்ப தன் செயல்களை அமைத்துக் கொள்ளும் பழக்கத்தை அறியாமையின் காரணத்தால் முஸ்லிம்களில் சிலர் அரங்கேற்றி வருகின்றனர்.

சகுனம் பார்ப்பது, ஜோதிடம் பார்ப்பது, பால் கிதாபு போன்ற மார்க்க விரோத செயல்களையும் நடைமுறைப் படுத்தி வருகின்றனர்.

இப்படியான தீய நம்பிக்கைகளில் ஒன்று தான் தற்போதைய மாதமாகிய ஸஃபர் மாதத்தை பீடையாக கருதுவது.

கூடவே இம்மாதத்தின் இறுதி புதன் கிழமையை ஒடுக்கத்துப் புதன் என்ற பெயரில் பீடைகள் நிறைந்த தினமாக அனுசரித்து வருகின்றனர்.

இம்மாதத்தின் பீடையைப் போக்குகிறோம் என்ற பெயரில் கொழுக் கட்டைகளைச் செய்து அதைப் பீடை பிடித்தவரின் (?) தலையில் கொட்டுவார்கள். மேலும் கடல், ஆறு போன்றவற்றிற்கு சென்று குளிப்பது, புல்வெளிகளுக்குச் சென்று புல்மிதிப்பது, ஸலாமுன் கவ்லம் மிர்ரப்பிர்ரஹீம் என்ற குர்ஆனின் வார்த்தைகளை மாவிலையில் எழுதி அதை கழுவி குடிப்பது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறெல்லாம் செய்யும் பட்சத்தில் பீடை பிடித்தவர்களின் பீடைகள் நீங்குகிறதாம் . இஸ்லாத்தில் இல்லாத இத்தகைய மூடப்பழக்கங்களை செய்வோர், இறைவனுக்கு அஞ்சி இவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

சுவனத்தின் வாடையை தடுக்கும் ஸஃபர் பீடை(?) நம்பிக்கை ?

ஸஃபர் மாதத்தை மக்கள் பீடையாக கருதுவது போல் ஷவ்வால் மாதத்தையும் அரேபியர்கள் பீடைமாதமாக கருதி வந்தார்கள். இதை நபியவர்கள் தகர்த்தெறிந்தார்கள்

ஆயிஷா (ரலி) அவர்களை நபியவர்கள் ஷவ்வால் மாதத்திலேயே திருமணம் புரிந்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம்: 2782

தொற்று நோயும், பறவைச் சகுனமும், ஸஃபர் பீடை என்பதும் கிடையாது என நபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புஹாரி: 5707

இத்தகைய தீய நம்பிக்கைளால் சுவனத்தின் வாடையையும் மக்கள் இழக்க நேரிடும். அல்லாஹ் காப்பானாக!

காலத்தை திட்டுபவர் , கருணை இறைவனைத் திட்டுகிறார் !

அல்லாஹ் படைத்திருக்கக்கூடிய நாட்களை நல்ல நாள் கெட்ட நாள் என பிரிப்பது அல்லாஹ்வைக் குறை கூறுவதாகும்.

ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கின்றான். நானே காலமாக இருக்க அவன் காலத்தைத் திட்டுகிறான். என் கையிலே ஆட்சியுள்ளது. இரவு பகலை நானே புரட்டி வருகிறேன் என அல்லாஹ் கூறுவதாக நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:

அபூஹுரைரா (ரலி) புஹாரி 4826

மறுமை வெற்றிக்கு வேட்டு வைக்கும் மாற்று மதக் கலாச்சாரம்:

ஸஃபர் மாதத்தை பீடையாகக் கருதி திருமணம் மற்றும் நல்ல காரியங்கள் எதையும் செய்யக்கூடாது என்ற வழக்கத்தையும் மக்கள் கடைபிடித்து வருகின்றனர். இது மாற்று மதத்தவர்களின் நம்பிக்கையும் கலாச்சாரமும் ஆகும். மாற்று மத கலாச்சாரங்களை பின்பற்றுவதை நபியவர்கள் வன்மையாக கண்டித்துள்ளார்கள்.

உங்களுக்கு முன்னுள்ளோரை நீங்கள் ஜானுக்கு ஜான் , முழத்திற்கு முழம் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தாலும் நீங்களும் அதில் நுழைவீர்கள் என நபியவர்கள் கூறினார்கள் .
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: புஹாரி 3456

யார் பிறமத மக்களுக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவரும் அவர்களை சேர்ந்தவரே என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல் : அபூதாவூத் 3512

கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்.

நபியவர்கள் போதித்தது மட்டுமே இஸ்லாமாகும். அவர்களுக்குப் பின் வரக்கூடிய எதுவும் இஸ்லாமாகாது.

இதோ நபியவர்களின் எச்சரிக்கை.

செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மதின் வழியாகும். காரியங்களில் மிகக் கெட்டது புதிதாக ஏற்படுத்தப்பட்டதாகும். புதிதாக ஏற்படுத்தப்பட்டவை அனைத்தும் வழிகேடாகும் வழிகேடு அனைத்தும் நரகத்திற்குரியவையாகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),

நூல்: நஸயீ (1560)

இவ்வாறு நபியவர்கள் விளக்கி இருந்த போதும் இத்தகைய மூடப் பழக்கங்கள் பின் வந்தவர்களால் நுழைக்கப்பட்டு விட்டன. இத்தகைய கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போய் இஸ்லாத்தை அதன் தூயவடிவில் நாம் பின்பற்றி மறுமையில் வெற்றி பெறும் நல்வாய்ப்பை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக. !