பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் இந்தியாவை கலவர பூமியாக்கத் திட்டமிடும் சங்பரிவாருக்கு டிஎன்டிஜே கடும் கண்டனம்.

பாபரி மஸ்ஜித் விவகாரத்தில்
இந்தியாவை கலவர பூமியாக்கத் திட்டமிடும் சங்பரிவாருக்கு டிஎன்டிஜே கடும் கண்டனம்.

பாபரி மஸ்ஜித் தொடர்பான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் ஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைத்துள்ள நிலையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பள்ளிவாசல் நிலத்தில் ராமர் கோயில் கட்டப்படும் என்றும், அதற்குப் பதிலாக லக்னோவில் மசூதி ஒன்று கட்டப்படும் என்றும் ராம ஜென்மபூமி நியாஸ் அமைப்பின் தலைவரும் பாஜக முன்னாள்எம்.பி.யுமான ராம் விலாஸ் வேதாந்தி அயோத்தியில் பத்திரிக்கையாளர்களிடம் அறிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல், ராமர் கோயில் கட்டும் பணிகள் உச்ச நீதிமன்ற விசாரணைக்கு முன்பே, அதாவது டிசம்பர் மாதத்திலேயே தொடங்கும் என்றும் கடந்த சனிக்கிழமை அன்று வேதாந்தி அயோத்தியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது முஸ்லிம்களிடம் கடும் எதிர்ப்பலைகளை கிளப்பி விட்டிருக்கின்றது.

ஒரு பக்கம் வேதாந்தி இப்படி ஓர் அறிக்கையை பத்திரிக்கையாளர்களிடம் வெளியிட்டிருக்கும் அதே வேளையில் இன்னொரு பக்கம் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்புத் தலைவரான சாத்வி பிராச்சி,”அயோத்தியில் இருந்த மசூதி எவ்வாறு நீதிமன்ற அனுமதியின்றி அகற்றப்பட்டதோ, அதேபோன்று நீதிமன்ற அனுமதியின்றி அங்கு ராமர் கோயில் கட்டப்படும்’’ என்று கூறுகின்றார்.

குஜராத்தில் எவ்வாறு சோமநாதர் கோயில் மீண்டும் கட்டப்பட்டதோ, அதேபோன்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும். அதற்கான அவசரச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். நாங்கள் வேண்டுவது ராமர் கோயிலே தவிர, வேறெதுவும் இல்லை. என்று சட்டத்தைக் கையில் எடுக்கும் விதத்தில் அவர் பேசியிருக்கின்றார்.

வேதாந்தி, சாத்வீ ஆகிய இருவரின் பேச்சுக்கள், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நாட்டில் வகுப்புக் கலவரத்தீயை மூட்டுவதற்குரிய சதித்திட்டதைத் தான் வெளிப்படுத்துகின்றன..

மத்தியில் ஆளும் பாஜக அரசு பல்வேறு முனைகளில் தோல்வி முகத்தை நோக்கிப் படுவேகத்தில் இறங்கிக் கொண்டிருக்கின்றது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு உ.பி.யில் முஸ்லிம்களுக்கும் ஜாட் இனத்திற்கும் மத்தியில் கலவரத்தீயை மூட்டி அதன் மூலம் வாக்குகளை அறுவடை செய்தது.

அதுபோல் இப்போது பாபரி மஸ்ஜித் விவாகாரத்தைக் கையில் எடுத்து, வகுப்புக் கலவரத்தைத் தூண்டி அதன் மூலம் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கின்றது என்பதைத் தான் இவ்விருவரின் பேட்டியும் உறுதி செய்கின்றது. சட்டத்தை மதிக்காத சங்பரிவார்களின் இந்த வெறிப் பேச்சுக்கு தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

வேதாந்தியின் பரஸ்பர ஒப்பந்தம், சமரசத் திட்டம் போன்ற பாசாங்கு வேலையை,பசப்பு மொழியை இஸ்லாமிய சமுதாயம் ஒரு போதும் நம்பப் போவதில்லை. வேதாந்தியின் வேதாந்த அறிவுரையை இந்த சமுதாயம் செவிமடுக்காது என்பதை தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தெரிவித்துக் கொள்கின்றது.

முஸ்லிம்களுக்குச் சொந்தமான பாபரி மஸ்ஜித் இடத்தில் மீண்டும் பள்ளிவாசல் கட்ட வேண்டும் என்றும், ராமருக்கு அயோத்தியில் வேறு எந்த இடத்தில் வேண்டுமானாலும் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்று சங்பரிவாருக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

முஸ்லிம்கள் ஒரு போதும் தங்களுக்கு உரிமையான பாபரி மஸ்ஜித் நிலத்தில் ஒரு சதுர அடியை கூட சமரசம் செய்ய மாட்டார்கள். சங்கபரிவாரக் கும்பலுக்கு ஒரு போதும் அதைத் தாரைவார்க்க மாட்டார்கள் என்ற உறுதியான நிலைப்பாட்டை அழுத்தம் திருத்தமாக ஆணித்தரமான வார்த்தைகளில் வேதாந்தியைப் பின்புலத்திலிருந்து இயக்கிக் கொண்டிருக்கின்ற அத்தனை சங்கபரிவாரக் கும்பலுக்கும் பதிய வைத்துக் கொள்கிறோம்.

நீதிமன்றத்தின் அனுமதியின்றியே பாபரி மஸ்ஜித் நின்ற இடத்தில் நாங்கள் கோயில் கட்டுவோம் என்று கூறும் சாத்விக்கு மட்டுமல்ல! சகல காவிகளுக்கும் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தெரிவித்துக் கொள்வது ஒன்றே ஒன்று தான்.

சங் பரிவாரங்கள் சட்டத்தைக் கையில் எடுத்தால் அதே பாணியில் இஸ்லாமிய சமுதாயமும் சாவுக்கு அஞ்சாது தங்களை காத்துக் கொள்ள சட்டதைக் கையில் எடுக்கத் தயங்காது.

சுதந்தரப் போராட்டத்தில் தனது சதவிகிதத்திற்கும் மிஞ்சிய விதத்தில் பங்கெடுத்து இரத்தம் சிந்தி நாட்டிற்கு சுதந்தரத்தைப் பெற்று தந்த முஸ்லிம் சமுதாயம், பாப்ரி மஸ்ஜித் உரிமை மீட்புக்கு அதே துணிச்சலுடன் மீண்டும் ஒரு சுதந்திரப் போரை சந்திக்கத் தயங்காது என்று எச்சரிக்கையை இந்த நேரத்தில் விடுத்துக் கொள்கின்றோம்.

இப்படிக்கு
இ.முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்