உதிரத்தை உறைய வைக்கும் உ.பி. சம்பவம்.ஜெய்ஸ்ரீராம் சொல்ல மறுத்த சிறுவன் எரித்துக் கொலை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

உதிரத்தை உறைய வைக்கும் உ.பி. சம்பவம்.ஜெய்ஸ்ரீராம் சொல்ல மறுத்த சிறுவன் எரித்துக் கொலை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

உத்திரபிரதேச மாநிலம் சவுந்தாவுளி மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மது காலித் என்ற 15 வயது சிறுவனை 4 பேர் கொண்ட பயங்கரவாத கும்பல் கடத்திச் சென்று தாக்கியுள்ளது. அவனை “ஜெய்ஸ்ரீராம்” சொல்லு என்று வற்புறுத்தியுள்ளது. ஆனால் சிறுவன் ஜெய்ஸ்ரீராம் சொல்வதற்கு மறுத்துள்ளான். இதனால் சிறுவனை கொடூரமாகத் தாக்கிய கும்பல் அவன் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளது. பால் முகம் பால்ய வயது சிறுவன் என்று கூட பார்க்காமல் கொளுத்தி கொலை செய்த கோடூரச் செயல் படிப்போர், வீடியோ பதிவுகளை பார்ப்போரின் நெஞ்சங்களை கொதிப்படையச் செய்கின்றது.
உடல் முழுவதும் தீக்காயம் அடைந்த அப்பாவி சிறுவனை வாரணாசியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இறந்து போன சிறுவனின் உடலை ஆம்புலன்ஸில் கூட ஏற்றி அனுப்பாமல் டெம்போ வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ள கொடுமை நடந்தேறியுள்ளது.

நாடு நவீன மயமாகி விட்டது டிஜிட்டல் இந்தியா என்று உலகத்திற்கு பெருமை கூறிக் கொள்ளும் இந்த தேசத்தில்தான் மனிதர்கள் துடிக்கத் துடிக்க அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்படுகின்றார்கள்.

அப்பாவி இஸ்லாமியர்களைப் பிடித்து அவர்களை சித்ரவதை செய்து ஜெய்ஸ்ரீராம் சொல்லச் சொல்லி அடித்து அவர்களின் உயிர்களைப் பறிப்பது இந்தியாவில் தற்போது புதிய விளையாட்டாக மாறிவிட்டது. இந்த பயங்கரவாதிகளின் கொடூரச் செயல்களால் இந்தியா மனிதர்கள் வாழத் தகுதியற்ற நாடாக மாறி வருகின்றது.

சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் எந்த நேரத்திலும் தங்களின் உயிருக்கு அச்சம் ஏற்படுமோ என்ற பயத்திலேயே வாழ்ந்து வருகின்றார்கள். சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை அடித்துக் கொலை செய்பவர்களுக்கு பொன்னாடை போர்த்தி அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் இழிநிலை இந்தியாவில்தான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

பயங்கரவாதிகளைக் கண்டிக்கவும் தண்டிக்கவும் வேண்டிய அரசாங்கம் அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து வருகின்றது. குற்றச் செயல்களில் ஈடுப்பட்டவர்களை, குண்டுவைப்பவர்களை நாடாளுமன்றத்தில் கொலுவேற்றி அழகுபார்க்கின்றது. அமைச்சர் பதவியை பரிசாகக் கொடுத்து அவர்களை பாதுகாக்கின்றது.

இந்த நாட்டின் மீது அக்கறையுள்ள ஒவ்வொரு குடிமகனும் வன்முறையை விரும்ப மாட்டான். ஆனால் இந்தியாவில் தோன்றியுள்ள மாட்டின் பெயரால், மதத்தின் பெயரால் வன்முறை செய்யும் பயங்கரவாதிகளால் தேசத்திற்கு பேராபத்து உண்டாகியுள்ளது என்பதை உணர்ந்துதான் கும்பல் வன்முறையைத் தடுக்கக் கோரி பல பிரபலங்கள் கையெழுத்திட்டு பிரமருக்கு கடிதம் அனுப்பி வைக்கின்றனர்.

கும்பல் வன்முறையில் இருந்து அரசாங்கம் நம்மைப் பாதுகாக்கும் என்று நம்பியிருக்கும் கோடான கோடி மக்களின் நம்பிக்கையை மத்திய அரசு செவிசாய்த்து கும்பல் வன்முறை பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்
ஜார்க்காண்ட் மாநிலத்தில் ஜெய்ஸ்ரீராம் என்று சொல்லுமாறு அடித்து கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்ட தப்ரேஸ் அன்சாரி கவலைக்கிடமான நிலையில் உயிருக்கு போராடிய போது அம்மாநில காவல்துறை சிகிச்சை அளிக்க திட்டமிட்டே காலதாமதம் செய்தது
அதன் விளைவாகத் தான் காக்கப்பட வேண்டிய ஓர் உயிர் அநியாயமாக பறிக்கப்பட்டது. அது போல், ஜார்க்காண்ட் மாநில காவல் துறைக்கு கொஞ்சமும் சளைக்காத உ.பி.யின் யோகி ஆதித்யநாத் காவல்துறை இந்த படுகொலையை தற்கொலை முயற்சி என்று திசை திருப்ப முயல்வது மிகவும் வேதனைக்குரிய விஷயமும் வெட்கித் தலைக்குனியக் கூடிய விஷயமும் ஆகும்.

”ஜெய்ஸ்ரீராம்” பயங்கரவாதிகளின் படுகொலைகளின் தொடர்ச்சியாக., தற்போது கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சிறுவன் முகம்மது காலித் படுக்கொலையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.

ஊடக தொடர்புக்கு: 9789030302

இப்படிக்கு
இ.முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்