முஸ்லிம் பெண்களின் பர்தாவை இழிவு படுத்தும் பாடநூல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடும் கண்டனம்.

தமிழக அரசின் கீழ் தயாரிக்கப்பட்ட 8 ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் இந்தியப் பெண்களின் இன்றைய நிலை என்ற பாடத்தில் பர்தா அணிவதை பெண்ணடிமைத்தனம் என்ற கருத்தை வெளியிட்டு இருக்கிறது.

இந்தியாவில் பெண்களை புர்கா அணிய வைத்து அடிமைப்படுத்திய தாகவும். புர்காவை ஒழிப்பதே புரட்சி என்றும் அதில் எழுதப்பட்டுள்ளது.

சகோதரத்துவத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய மாணவர்களுக்கு இஸ்லாத்தின் மீதும் பர்தா அணியும் பெண்கள் மீது வெறுப்பை விதைத்து நஞ்சை புகுத்தும் வகையில் இந்த கருத்து கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கீழ் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகத்தில் இதுபோன்ற கருத்து இஸ்லாமிய மக்களிடத்தில் மிகப் பெரிய அதிர்ச்சியையும் மன வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இஸ்லாமிய மார்க்கம் பெண்களுக்கு முழு சுதந்திரத்தையும் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

பெண்களை அடிமைப்படுத்திய காலங்களில் பெண்களுக்கு முழு உரிமையை வழங்கிய மார்க்கம் இஸ்லாம் ஆகும்.

பெண்களுக்கு சொத்துரிமை, மறுமணம் செய்யும் உரிமை, விவாகரத்து உரிமை, கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, என பல்வேறு உரிமைகளை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது.
பர்தா என்ற ஆடை இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாக்கும் அரணான ஆடையாகும்.

பெண்கள் முழு உடலையும் ஆடையால் மூடி கொள்வதின் மூலம் தவறாக பார்க்கும் ஆண்களின் பார்வையிலிருந்து தங்கள் கற்பை பாதுகாக்க இது பெரிதும் உதவுகிறது. இது போன்ற ஆடைகளை தற்போது முஸ்லிம் அல்லாதவர்களும் விரும்பி அணிய துவங்கி உள்ளனர்.

கணவன் இறந்துவிட்டால் உடன்கட்டை ஏறுவது என்ற காலத்தில் பெண்களை மறுமணம் செய்ய தூண்டிய மார்க்கம் இஸ்லாம்.

பெண்களை அடிமைப்படுத்தி முலை வரி வசூலித்த காலங்களிலே கூட பெண்களுக்கு ஆடைகளை முழுமையாக அணிய தூண்டிய மார்க்கம் இஸ்லாம்.

இஸ்லாத்தை கொச்சைப்படுத்தி இந்த பாடம் தயாரிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களை மிகவும் புண்படுத்தி தயாரிக்கப்பட்ட இது போன்ற பாடங்கள் பிஞ்சு உள்ளங்களில் புகுத்தப்பட்ட நஞ்சை விதைக்கும் என்பதை தமிழக அரசாங்கம் புரிந்து கொண்டு உடனடியாக இந்த பாடத்தை நீக்க வேண்டும் என தமிழக அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு,
இ.முஹம்மது,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.