பசு பயங்கரவாதிகளின் வெறிச்செயலுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

பசு பயங்கரவாதிகளின் வெறிச்செயலுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

இந்தியாவில் மாடுகளின் பெயரால் மனிதர்களை கதறக் கதறக் அடித்து படுகொலை செய்யும் வன்முறைகளின் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு படுகொலை அரங்கேறியுள்ளது. பீஹார் மாநிலத்தில் ஹாஜ்பூர் முபாசில் என்ற பகுதியில் வசித்து வரும் ஜமால் (வயது 30) என்ற இளைஞர், கடந்த 11/11/2019 திங்கள்கிழமையன்று 18 மாடுகளை ஏற்றிக் கொண்டு விற்பனைக்காக தன் சகோதரர்களுடன் மேற்கு வங்கத்தை நோக்கிச் சென்றுள்ளார்.

லாபா பாலம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த ஜமாலின் வாகனத்தை சாகர் யாதவ் மற்றும் அவனது மூன்று மகன்கள் சேர்ந்து வழி மறித்துள்ளனர். மாடுகளை ஏற்றிச் செல்ல வேண்டுமானால் தங்களுக்கு கனிசமான பணம் தர வேண்டும் என்றும் அந்த வன்முறை கும்பல் கேட்டு மிரட்டியுள்ளது. ஆனால் ஜமால் அவர்களுக்குப் பணம் தர மறுத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த பயங்கரவாத வன்முறை கும்பல், அவர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளது. இதில் ஜமாலின் சகோதரர்கள் தப்பி ஓடி விட ஜமால் மட்டும் வன்முறை கும்பலால் கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மோசமான காரணமாக ஜமால் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அத்தோடு நில்லாமல் அந்த வன்முறை கும்பல் ஜமாலிடம் இருந்த 18 மாடுகளையும் திருடிக் கொண்டு சென்று விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து ஜமால் உடலை மீட்டுள்ளனர். மாடுகளைத் திருடிய பசு பயங்கரவாதிகளிடமிருந்து 13 மாடுகள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. வன்முறை கும்பலைத் தேடி வருவதாகவும் காவல்துறை தரப்பில் இருந்து செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாடுகளுக்காக மனிதர்களை அடித்து கொடூரமாகக் கொலை செய்யும் பயங்கரவாதிகள் அட்டகாசம் இன்னமும் ஓய்ந்து விடவில்லை. மனிதர்களை அடித்தே கொலை செய்யும் இந்தக் காட்டு மிராண்டித்தனத்தால் இந்தியா உலக அரங்கில் தலை குனிந்து அவமானத்தைச் சந்திக்கின்றது. இந்தியா தவிர்த்து வேறு எந்த ஜனநாயக நாட்டிலும் மாடுகளின் பெயரைச் சொல்லி, மதத்தின் பெயரைச் சொல்லி மனிதர்கள் அடித்துக் கொலை செய்யப்படுவதில்லை.

ஆனால் இந்தியாவில் இதுபோன்ற கொடூர வன்முறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த வன்முறை பயங்கரவாதிகளை அரசாங்கமும் கண்டிப்பதில்லை, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் இல்லை. இது போன்ற வன்முறை பயங்கரவாதிகளால் நாளுக்கு நாள் நாடு பின்னடவைச் சந்திக்கின்றது.

மாடுகளை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சோப லட்சம் விவசாயிகளை, சிறு வியாபாரிகளை அழிக்கும் நோக்கில் செயல்படும் பசு கும்பல் வன்முறை பயங்கரவாதிகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. இதுபோன்ற செயல்கள் இனி நடைபெறாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இறந்து போன ஜமாலின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் கேட்டுக்கொள்கின்றது.

இப்படிக்கு,
இ.முஹம்மது
மாநில பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்