தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தொடர் பிரச்சாரம் – 2019

லோகோ (தமிழ்)

Click here to download PDF file

 

லோகோ (ஆங்கிலம்)

Click here to download PDF file

லோகோ (மலையாளம்)

Click here to download PDF file

கோஷங்கள்

  • ஒழியட்டும் தீவிரவாதம்! ஓங்கட்டும் மனிதநேயம்!
  • வன்முறையில்லா தலைமுறை! இஸ்லாம் கூறும் வழிமுறை!
  • பயங்கரவாதத்தை வேரறுப்போம்! பயமில்லா வாழ்வுக்கு பதையமைப்போம்!
  • வன்முறை ஒழிப்போம்! நன்முறை வளர்ப்போம்!
  • தீவிரவாதம் ஒழிப்போம்! மனிதநேயம் காப்போம்!
  • மானுடம் செழிக்க மனிதநேயம் காப்போம்!
  • தேசத்தை காக்க நேசத்தை வளர்ப்போம்!
  • இஸ்லாம் போதிப்பது மிதவாதம்! என்றும் அது எதிர்ப்பது தீவிரவாதம்!
  • கேட்டை விளைவிக்கும் தீவிரவாதத்தை நாட்டைவிட்டே விரட்டிடுவோம்!
  • பயங்கரவாதத்தை விரட்டிடுவோம்! பாதகச்செயலை தடுத்திடுவோம்!

செயல்திட்டம்

தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் மூன்று மாத தொடர் பிரச்சார செயல்திட்டம்

ஜூலை

📌 மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்
📌சுவர் விளம்பரம்
📌மாவட்டம் தோறும் நோட்டீஸ் விநியோகம்
📌தீவிரவாத எதிர்ப்பு போஸ்டர்
📌மாவட்ட அளவிலான பிரஸ் மீட்
மற்றும் அனைத்து பணிகளையும் பத்திரிகையில் வர வைப்பது
📌மாவட்டம் முழுவதும் செல்லும் பிரச்சார வாகனம்
📌அமைதி பேரணி
📌சிறிய, பெரிய பேனர்கள்

ஆகஸ்ட்
📌பெண்கள் பயான்
📌ஜும்ஆ வில் ஒரு தலைப்பு
📌தீவிரவாதத்திற்கு எதிரான மனித சங்கிலி
📌மெகா ரத்த தான முகாம்
📌மனித நேயத்தை நிலை நிறுத்தும் ஒரு இலட்சம் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி

செப்டம்பர்
📌திவிரவாத்திற்கு எதிரான ஏகத்துவ சிறப்பிதழ்
📌தனி நபர் தாவா
📌மெகா போன் பிரச்சாரம்
📌மாணவ, மாணவியர் அமைதி பேரணி மூன்று மாத தீவிரவாத எதிர்ப்பு தீவிரப் பிரச்சாரம்
📌பைக் பேரணி
📌பொதுக்கூட்டம்

உங்களுக்கென ஒதுக்கப்பட்ட மாநில நிர்வாகிகளின் வழிகாட்டுதலின்படி தீவிரவாதத்திற்கு எதிராக மேற்கண்ட பணிகளை சிறப்பாக செய்துமுடிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
இ.முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

நோட்டீஸ் 1

ஏக இறைவனின் திருப்பெயரால்…

ஒழியட்டும் தீவிரவாதம்.. ஓங்கட்டும் மனித நேயம்…

தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தொடர் பிரச்சாரம்
ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் – 2019

தீவிரவாதத்திற்கு எதிரானது இஸ்லாம்

உலக அளவில் தீவிரவாதம் என்றால் அங்கே இஸ்லாம் மார்க்கத்தை தொடர்புபடுத்திச் சித்தரிக்கக்கூடிய அவலத்தை கண்கூடாகக் காண்கின்றோம். .

ஆனால் உண்மை நிலவரம் என்ன? இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா என்று ஆராய்ந்து பார்த்தால் இஸ்லாமிய மார்க்கத்தைப் போன்ற மனிதநேயத்தைப் போதிக்கும் மார்க்கத்தை உலகில் எங்குமே கண்டுவிட முடியாது.
ஒரு மனிதரைக் கொலை செய்தவர் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் கொலை செய்தவர் போலாவார். (திருக்குர்ஆன் 5:32)

என்று இஸ்லாமிய மார்க்கம் தெரிவிக்கின்றது. இப்படிப்பட்ட மார்க்கத்தில் தீவிரவாதத்திற்குத் துளியும் இடமில்லை என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நாட்டைக் காப்பதற்காக எதிரி நாட்டுடன் நடக்கும் போரில் கூட பெண்களையும், குழந்தைகளையும் கொல்லக்கூடாது என்று முஹம்மது நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.

(ஆதார நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 3587)

பெண்களை, குழந்தைகளை கொல்வதே கூடாது என
இஸ்லாம் கூறுகின்றது
என்றால், அப்பாவிப் பொதுமக்களைக் குண்டுவைத்துக் கொல்வதை இஸ்லாம் ஆதரிக்குமா? என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

இஸ்லாமிய மார்க்கத்தைப் போதித்த முஹம்மது நபி அவர்களின் குணங்களை ஆராய்ந்து பார்த்தால் இப்படி ஒரு மனிதாபிமானம் மிக்க மனிதரை உலக வரலாற்றில் கண்டுவிடவே முடியாது.

உலகில் எத்தனையோ தலைவர்கள் தோன்றி மறைந்திருந்தாலும் அவர்கள் மீது ஏதேனும் ஒரு குற்றம் குறைகள் கூறப்படும். ஆனால் முஹம்மது நபி அவர்களின் வரலாற்றில் எந்தவிதமான கடும் போக்குகளையும் காணவே முடியாது.

*முஹம்மது நபியவர்களின் ஆட்சியில் முஸ்லிம் அல்லாத மக்கள் மிகவும் சுதந்திரமாக வாழ்ந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சியில் முஸ்லிமல்லாதவர்கள் பலர் சகல உரிமையும் பெற்று வாழ்ந்தனர். (நூல்: புகாரி 1356)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
யூதப் பெண்ணின் விருந்தை ஏற்றனர். (நூல்: புகாரி 2617)

யூதர்களே நியாயம் கேட்டு நபிகள் நாயகத்திடம் வந்தனர். (நூல்: புகாரி – 2412, 2417

*முஹம்மது (ஸல்) அவர்கள் ஜனாதிபதியாக இருந்தாலும் அவர்கள் வறுமையில் ஆட்பட்டிருந்தார்கள். முஹம்மது நபியின் ஊரில் வாழ்ந்த ஒரு யூதச் செல்வந்தரிடம் தன் கவச ஆடையை அடமானம் வைத்து சில படிகள் கோதுமையைப் பெற்றிருந்தார்கள்.
ஆதார நூல் : 2916,2068

இஸ்லாமிய அரசர் ஒருவரின் ஆட்சி எல்லைக்குள் பிற மதத்தவரைச் சேர்ந்தவர் சுதந்திரமாக வாழ்ந்து, அந்த நாட்டின் ஜனாதிபதிக்கே கடன் கொடுக்கும் அளவிற்குச் செல்வந்தராக இருந்திருக்கின்றார் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகின்றது.

இஸ்லாமிய மார்க்கம் வன்முறையை ஆதரிக்கின்ற மார்க்கமாக இருந்தால் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை. இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றது என்பது உண்மையாக இருந்திருந்தால் அந்த யூதச் செல்வந்தர் கொலை செய்யப்பட்டு அவரது சொத்துக்கள் சூறையாடப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் இஸ்லாமிய மார்க்கம் மனிதநேயத்தினை போதித்த காரணத்தால்தான் இஸ்லாமிய ஆட்சியிலும் கூட மற்ற மத மக்கள் சகோதரத்துடனும் சுதந்திரத்துடனும் வாழும் சூழ்நிலை உண்டானது.

அது போல கஷ்டப்படும் மனிதனுக்கு உதவி செய்ய இஸ்லாம் கட்டளையிடுகிறது.

பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்பவரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

திருக்குர்ஆன் 4:36

இஸ்லாம் அனைவர் மீதும் அன்பு செலுத்துன் படி சொல்கிறது. இஸ்லாத்தின் பெயரால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

தீவிரவாதத்தை இஸ்லாம் எதிர்க்கிறது என்பதை மக்களுக்கு வலியுறுத்தவே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் மூன்று மாத காலங்கள் தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இஸ்லாமியர்கள் எப்போதும் மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் மட்டுமே விரும்பக்கூடியவர்கள்.

ஒழியட்டும் தீவிரவாதம்! ஓங்கட்டும் மனித நேயம்!

வெளியீடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
_____கிளை.____மாவட்டம்.
தொலைப்பேசி எண்:__________

நோட்டீஸ் 2

ஏக இறைவனின் திருப்பெயரால்…

ஒழியட்டும் தீவிரவாதம்.. ஓங்கட்டும் மனித நேயம்…

தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தொடர் பிரச்சாரம்
ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் – 2019

இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்

இன்று உலகில், தீவிரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம், பயங்கரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம் என்றளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் பெயர் களங்கடிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் வெட்டுக்குத்து, வெடிகுண்டு என்பது போல் அதன் தோற்றம் கறைப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் கலவரம், முஸ்லிம் என்றால் கலகக்காரன் என்றளவுக்கு இஸ்லாத்தின் முகம் கோரமாகச் சிதைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் உண்மையில் இஸ்லாம் தனது பெயரிலும், கொள்கையிலும், செயல்பாட்டிலும் அமைதியை மையமாகக் கொண்டது. அதன் முகமும் அகமும் சாந்தியை அடிப்படையாகக் கொண்டது. இஸ்லாம் என்ற வார்த்தையின் வேர்ச்சொல் ஸலாம் என்பதாகும். ஸலாம் என்றால் அமைதி அடைதல், பாதுகாப்புப் பெறுதல் என்பது இதன் பொருள். இஸ்லாம் என்றால் சரணடைதல், கட்டுப்படுதல் என்று பொருள்.

அதாவது படைத்த ஓர் இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்படுவதை இது குறிக்கின்றது. இதன்படி, படைத்த ஓர் இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்பவர் முஸ்லிம் ஆவார். பெயர் அடிப்படையில் இஸ்லாம் வன்முறைக்கு அப்பாற்பட்டது; அந்நியப்பட்டது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமையோ, பிற சமுதாயத்தவரையோ சந்திக்கும் போது கூறுகின்ற முகமன், “அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பதாகும். பதிலுக்கு அவர், “வ அலைக்கும் ஸலாம்’ என்று கூறுவார். இந்த இரண்டு வாசகங்களுக்கும் பொருள், “உங்கள் மீது அமைதி நிலவட்டுமாக!’ என்பதாகும்.

முகத்துக்கு நேராகச் சந்திக்கும் போதும், மறைமுகமாக தொலைபேசி, இணையதளம் போன்ற ஊடகங்களின் வழியாகவும் தெரிவிக்கின்ற வாழ்த்துக்களில் முஸ்லிம்கள் பரப்புவது இந்த அமைதியைத் தான்.

இஸ்லாத்தில் சிறந்த செயல் எது? என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்படுகின்றது. அதற்கு அவர்கள் அளிக்கின்ற பதிலைப் பாருங்கள்.

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது’ எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும், நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் (முகமன்) கூறுவதுமாகும்” என்று பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி 12

இஸ்லாத்தில் சிறந்தது எது என்ற கேள்விக்கு முதலாவதாக, பசித்தோருக்கு உணவளித்தல் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில் கூறுகின்றார்கள். இதில் முஸ்லிம், முஸ்லிமல்லாதவர் என்ற பாரபட்சம் இல்லை.

இரண்டாவதாக, முஸ்லிம், பிற மதத்தவர் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் ஸலாம் எனும் வாழ்த்தைக் கூறி அமைதியைப் பரப்பச் சொல்கின்றார்கள்.
ஒருவர் தனக்குக் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இருப்பார். அவரை நோக்கி, ‘உங்கள் மீது அமைதி உண்டாகட்டும்’ என்று கூறச் சொல்கின்றது. ஒருவர் தனது குழந்தை இறந்து விட்ட சோகத்தில் இருப்பார். அவரிடமும், “உங்கள் மீது அமைதி உண்டாகட்டும்’ என்று கூறச் சொல்கின்றது. இப்படி இன்பம், துன்பம் என எந்த நிலையில் இருந்தாலும் அனைவர் மீதும் ஸலாம் எனும் அமைதியைப் பரப்பச் சொல்கின்றது இஸ்லாமிய மார்க்கம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கை என்பது “எழுபதுக்கும் அதிகமான’ அல்லது “அறுபதுக்கும் அதிகமான’ கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை’ என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறை நம்பிக்கையின் ஒரு கிளைதான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் 51

மக்களுக்கு ஊறு விளைவிக்கின்ற பொருட்களைப் பாதையிலிருந்து அகற்றுவதும் அந்த இறை நம்பிக்கையின் ஒரு கிளை என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
ஒரு பாதையில் முஸ்லிம்கள் மட்டும் நடக்க மாட்டார்கள். அனைத்து மதத்தினரும் தான் நடப்பார்கள். அவர்களுடைய கால்களைப் பதம் பார்த்து, புண்ணாக்கி, புறையோடச் செய்து அவர்களது உயிர்களுக்கே உலை வைக்கின்ற கல், முள் போன்றவற்றைப் பாதையிலிருந்து அகற்றுவது முஸ்லிம்களின் இறை நம்பிக்கையின் ஓரம்சம் என்று இஸ்லாம் கூறுகின்றது. அதாவது, ஒரு முஸ்லிமின் அடிப்படைக் கொள்கையே மற்றவர்களை இன்னல், இடையூறுகளிலிருந்து பாதுகாப்பது தான் என்று இஸ்லாம் குறிப்பிடுகின்றது.

காலைப் பதம் பார்க்கின்ற கல், முள்ளையே அகற்றச் சொல்லும் இஸ்லாம், ஆளையே கொல்லுகின்ற குண்டுகளை வைக்கச் சொல்லுமா என்று நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து) விட்டார். அவரது இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்கüலிருந்து) மன்னிப்பு வழங்கினான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 2472

இப்படிப் பாதையிலிருந்து கற்கள், முற்களை அகற்றுவதற்காக ஒரு முஸ்லிமுக்கு இறைவன் சொர்க்கத்தைப் பரிசாக வழங்குகின்றான் என்றால், பேருந்துகள், இரயில்கள், விமானம் போன்ற போக்குவரத்துக்களிலும் அவை வந்து நிற்கும் நிலையங்களிலும், மக்கள் குழுமுகின்ற வணிக வளாகங்களிலும், அவர்கள் பயணிக்கின்ற பாதைகளிலும் குண்டு வைத்துக் குலை நடுங்கச் செய்யும் ஒருவனுக்கு இந்தக் கருணைமிகு இறைவன் என்ன தண்டனை வழங்குவான்? நிச்சயமாக நரகத்தைத் தான் தண்டனையாக வழங்குவான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதுதான் முஸ்லிம்களின் சரியான நிலைப்பாடாகும்.

ஒரு முஸ்லிமின் செயல்பாடு பிறருக்கு உதவியாகத் தான் இருக்க வேண்டுமே தவிர ஒருபோதும் உபத்திரமாக, ஊறு விளைவிப்பதாக இருக்கக் கூடாது என்பதை மேற்கண்ட இஸ்லாமிய போதனைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

“முஃமின் – இறை நம்பிக்கையாளர் யாரெனில் தங்கள் உயிர்கள் மற்றும் உடமைகள் விஷயத்தில் மனிதர்கள் யார் விஷயத்தில் அச்சமற்று இருக்கிறார்களோ அவர் தான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
நூல்: திர்மிதி 2551

“பிற மனிதனுக்கு உனது கையினால், நாவினால் இடைஞ்சல் அளிக்காமல் இருந்தால் நீ ஒரு முஸ்லிம்’ என்று கூட நபி (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கலாம். ஆனால் அவ்வாறு சொல்லாமல், “மனிதர்கள் உன்னுடைய நாவினால், கையினால் பாதுகாப்புப் பெற வேண்டும்’ என்று சொல்கிறார்கள். உன்னிடமிருந்து பிறர் பாதுகாப்புப் பெறுவதை நீ தீர்மானிக்கக் கூடாது; ஏனெனில் நீ ஏற்படுத்திய பாதிப்பின் தன்மை உனக்குத் தெரியாது; பாதிக்கப்படுபவர் அல்லது மற்றவர்கள் தான் அதைத் தீர்மானிக்க வேண்டும் என்பது இதன் பொருள்.
அந்த அளவுக்கு, ஒரு முஸ்லிம் தனது நாவினாலும், கையினாலும் பிற மக்களுக்குத் துன்பம் தரக் கூடாது என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 6018

அண்டை வீட்டுக்காரர் முஸ்லிமாகவும் இருக்கலாம்; முஸ்லிம் அல்லாதவராகவும் இருக்கலாம். மொத்தத்தில் அண்டை வீட்டுக்காரருக்கு இடையூறு செய்யக்கூடாது என்று பொதுவாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

இந்த அளவுக்கு இஸ்லாம் தெளிவாகக் கூறியிருந்தும், இதற்கு நேர்மாற்றமாக முஸ்லிம், முஸ்லிமல்லாதோர் எனப் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் எதிராக, பொது இடங்களிலும் மக்கள் கூடும் சந்தைகளிலும் குண்டு வைப்பவன் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும்? அத்தகையோர் இஸ்லாத்தின் பார்வையில் ஒருபோதும் முஸ்லிம்கள் அல்லர்.
இறைவனுக்குப் பல அழகான பெயர்கள் உள்ளன. அவற்றில் “ஸலாம்’ என்பதும் ஒன்று. இதன் பொருள் அமைதியானவன் என்பதாகும். இறைவனின் திருப்பெயரும் அமைதியானவன் என்று அமையப் பெற்றிருக்கும் போது அமைதியான அந்த இறைவன் இந்த அமளி துமளிகளை எப்படி ஆதரிப்பான்?

அல்லாஹ் அமைதி இல்லத்திற்கு அழைக்கிறான். தான் நாடியோருக்கு நேரான பாதையைக் காட்டுகிறான்.
அல்குர்ஆன் 10:25

மொத்தத்தில் இஸ்லாம் என்றால் உயிருக்கு உத்தரவாதம்! உடமைக்கு உத்தரவாதம்! கற்புக்குக் காவல் அரண்! பெண்களுக்குப் பாதுகாப்பு!
இஸ்லாம் என்றால் அமைதி! இஸ்லாம் என்றால் அபயம்!
இதனால் தான் இந்த மார்க்கத்தின் அதிபதி இதை ஓர் அமைதி மார்க்கம் என்று கூறுகின்றான்.

பாதுகாப்பான ஒரு வீட்டில் இருக்கும் போது அதில் வெயிலின் கொடூரம் கிடையாது. குளிரின் கொடுமை கிடையாது. கொட்டும் மழை கிடையாது. குலை நடுங்க வைக்கும் இடியோ, கண்ணைப் பறிக்கும் மின்னலோ இதில் தெரியாது. இவை அத்தனைக்கும் ஓர் இல்லம் பாதுகாப்பாக இருப்பது போல் ஒரு மனிதனின் வாழ்வுக்குப் பாதுகாப்பாக இஸ்லாம் இருக்கின்றது. அந்தப் பாதுகாப்பு இல்லமான இஸ்லாம், ஒருபோதும் பயங்கரவாதத்தை, தீவிரவாதத்தை ஆதரிக்காது.

பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை என்ற கருத்தை அனைவரும் ஏற்கின்றனர். அந்த அடிப்படையில், முஸ்லிம் பெயர் தாங்கிகள் செய்கின்ற பயங்கரவாதச் செயல்களுக்கு முஸ்லிம் சமுதாயமோ, இஸ்லாமிய மார்க்கமோ பொறுப்பாகாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இஸ்லாம் ஓர் ஆக்க சக்தி! அது அழிவு சக்தி அல்ல என்பதை நம்மைச் சுற்றியுள்ள சமுதாயங்களிடம் கொண்டு செல்வோம். சாந்தி, சமாதானம், ஆக்கம், அமைதி இவையே இஸ்லாம் என்பதை தமிழகத்திலும், இந்தியாவிலும் மட்டுமின்றி தரணியெங்கும் எதிரொலிக்கச் செய்வோம்.

வெளியீடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
_____கிளை.____மாவட்டம்.
தொலைப்பேசி எண்:__________

நோட்டீஸ் 3

ஏக இறைவனின் திருப்பெயரால்…

ஒழியட்டும் தீவிரவாதம்.. ஓங்கட்டும் மனித நேயம்…

தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தொடர் பிரச்சாரம்
ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் – 2019

மனிதநேய மார்க்கம் இஸ்லாம்

இஸ்லாம் என்ற சொல்லுக்கு சாந்தி, சமாதானம் பரப்புதல் என்று பொருள். பெயரில் மாத்திரம் அல்ல போதனைகளிலும் இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் தான் பொதிந்திருக்கின்றது.

இத்தகைய இஸ்லாத்துடன் தீவிரவாதம் எனும் சொல்லாடல் இணைக்கப்பட்டு இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறுவது முரண்பாடான, பொருத்தமற்ற இணைப்பாகும்.
மனிதர்களுக்கிடையில் சாந்தியை பரப்புவதே இஸ்லாத்தின் நோக்கமே தவிர சண்டையைப் பரப்புவது அதன் நோக்கம் அல்ல.

மனிதர்களுக்கிடையில் அன்பும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும், மனித நேயம் மிளிர வேண்டும் என்றே இஸ்லாம் விரும்புகிறது. அதனாலேயே எல்லா மதங்களை விடவும் அதிகமாகவே இஸ்லாத்தின் போதனைகளில் மனித நேயம் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது.

அவற்றை அறியும் போது இஸ்லாம் தீவிரவாதத்தைப் பரப்பும் மார்க்கம் அல்ல, மனித நேயத்தை மற்ற மதங்களை விடவும் அதிகம் பரப்பும் மார்க்கம் என்பதை சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

ஒரு தாய் மக்கள்

மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதற்கு அடிப்படைத் தேவை சகோதர உணர்வு. நாம் அனைவரும் சகோதரர்கள், ஒரு தாய் மக்கள் என்ற உணர்வு எழுந்தாலே ஒரு இணைப்பு, நெருக்கம் உண்டாகும். இந்த உணர்வு இல்லையாயின் யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன? என்று சக மனிதனை கண்டுகொள்ளாத மனிதநேயமற்ற நிலை மனிதர்களிடம் உண்டாகிவிடும்.
இஸ்லாம் அத்தகைய சகோதர உணர்வைத் தவறாது ஏற்படுத்தி விடுகிறது.

மக்கள் அனைவரும் ஜாதி, மதப் பாகுபாடின்றி ஒரு தாய், தந்தைக்குப் பிறந்தவர்களே என்று கூறி அன்பு செலுத்துவதற்கான அடிப்படை உணர்வை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். திருக்குர்ஆன் 39:13
இஸ்லாம் கூறும் ஒரு தாய் மக்கள் என்ற இந்தச் சித்தாந்தம் தீவிரவாதத்தை அடியோடு அடித்து நொறுக்கும் சித்தாந்தமாகும். அனைவரும் சகோதரர்கள் சகோதரர்களுக்குள் வெட்டுக் குத்து, சண்டை சச்சரவு இருக்கக் கூடாது என்பதே இந்தச் சித்தாந்தம் வலியுறுத்தும் கருத்தாகும்.

பிறருக்கு உதவு

சிரமப்படும் மக்கள் யாராக, எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சகோதர உணர்வோடு அவர்களுக்கு உதவிட வேண்டும் என்றும் அது மிகச்சிறந்த தர்மம் என்றும் இஸ்லாம் போதிக்கின்றது.

“தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்” என நபியவர்கள் கூறியதும் தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்?” எனக் கேட்டனர் அதற்கு நபியவர்கள், “ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து தர்மம் செய்ய வேண்டும்” என்றார்கள். தோழர்கள், “அதுவும் முடியாவிட்டால்?” எனக் கேட்டதற்கு, “தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்” என்று பதிலளித்தார்கள். தோழர்கள், “அதுவும் இயலவில்லை என்றால்?” என்றதும், “நற்காரியத்தைச் செய்து, தீமையிலிருந்து தம்மைத் தடுத்திட வேண்டும் இதுவே அவர் செய்யும் தர்மமாகும்” என்று கூறினார்கள்.
நூல்: புகாரீ 1445

ஏழையும் இறைவனும்

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள். இதையும் தாண்டி இஸ்லாம் மனிதனுக்கு உதவி செய்வது இறைவனுக்கு உதவி செய்வதைப் போன்றது எனவும், மனிதர்களை உதாசீனப்படுத்துவது படைத்த இறைவனையே புறக்கணிப்பதைப் போன்றது எனவும் போதிக்கின்றது. இது இஸ்லாத்தில் உள்ள மனிதநேயத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.
மனிதனுக்கு உதவுவதை இறைவனுக்கே உதவுவதைப் போன்று ஒப்பீடு செய்யும் இதை மிஞ்சிய மனிதநேயம் வேறென்ன இருக்கின்றது?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில், “ஆதமுடைய மகனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை” என்று கூறுவான். அதற்கு அவன், “என் இறைவா! நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவு அளிக்கவில்லை” என்று கூறுவான்.
அதற்கு அவன், “என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை” என்று கூறுவான்.
அதற்கு அவன், “என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய்” என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).நூல்: முஸ்லிம் (4661)

மனிதர்களிடம் இரக்கம்

மனிதர்களுடன் இரக்க உணர்வோடு நடந்தால் தான் இறைவன் நம்மிடம் இரக்கம் காட்டுவான் என்ற இஸ்லாத்தின் போதனை இஸ்லாத்தில் உள்ள மனிதநேயத்திற்கு மற்றுமொரு முத்திரை பதித்த சான்று.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான்.
அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 7376

போரில் மனித நேயம்

போர் என்றாலே மனிதநேயத்திற்கு அப்பாற்பட்ட களமாகப் பார்க்கும் உலகம் இது. போர் என்று வந்து விட்டால் சிறியவர், பெரியவர், குழந்தைகள், பெண்கள், அப்பாவிகள் என ஒருவர் விடாமல் சகட்டு மேனிக்கு அனைவரையும் கொன்றொழிக்கும் அழிவுக் கலாச்சாரம் தான் இன்றைய போர்முறை. சர்வதேச நாடுகளில் எந்த ஒன்றும் இதற்கு விதிவிலக்கல்ல. போர் என்றால் பொதுமக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று ஆட்சியாளர்களே அதை நியாயப்படுத்திப் பேசுவதையும் நாம் பார்க்கிறோம்.

ஆனால் இஸ்லாம் மாத்திரம் தான் போர்க்களத்தையும் மனித நேயம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய களமாகப் பார்க்கிறது. ஆகவே பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், போருக்குத் தொடர்பில்லாத அப்பாவிகள் ஆகியோரைப் போரில் கொல்ல இஸ்லாம் தடைவிதிக்கின்றது. அவற்றைப் பெரும்பாவமாக அறிவிப்பு செய்கின்றது.
நடைமுறை உலகில் சிறு குற்றமாகக் கூட பார்க்காத ஒன்றை இஸ்லாம் பெரும்பாவம் என்று குறிப்பிடுவது மனித உயிர்களுக்கு இஸ்லாம் அளிக்கும் மதிப்பை மிகச்சரியாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

இன்னும் எண்ணற்ற செய்திகள், இஸ்லாம் மனிதநேயத்தைப் போதிக்கும் மார்க்கம் என்பதை சான்றளிக்கின்றது. அது எங்கேயும் தீவிரவாதத்தைப் போதிக்கவில்லை.
இப்படி தீவிரவாதத்திற்கு எதிராக, மனிதநேயத்திற்கு ஆதரவாக தனது சாட்டையைத் தீவிரமாக சுழற்றும் இஸ்லாத்தை தீவிரவாத மார்க்கம் என்று குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம்?

அறிவிலிகள், மனிதநேயமற்ற சில காட்டுமிராண்டிகள் செய்யும் தீவிரவாதச் செயலால் அவர்கள் சார்ந்த மதத்தை தீவிரவாத மார்க்கம் என்று முத்திரை குத்துவது எந்த வகையிலும் ஏற்க இயலாத, நியாயமற்ற செயலாகும்.

வெளியீடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
_____கிளை, _____மாவட்டம்
தொலைப்பேசி எண்: