“ஏசு மட்டுமல்ல; நாம் எல்லோருமே தேவனின் பிள்ளைகள் தான்” – பாதிரிமார்கள் ஒப்புதல்வாக்குமூலம்

பாதிரியார்களுடன் நடந்த நேருக்கு நேர்:

தொடர் – 3

தொடர் – 2

தொடர்-1

பாதிரியார்களுடனான நேருக்கு நேர் நிகழ்ச்சியில் நமது தரப்பிலிருந்து முதலாவதாக கேட்கப்பட்ட கேள்வி:
“ஏசு பைபிளில் எங்கேயாவது தன்னை,
நான் இறைவனுடைய குமாரன் என்று சொல்லியிருக்கிறாரா?” என்பது தான். அதற்கு விவிலியத்திலிருந்தே நாங்கள் ஆதாரம் காட்ட முடியும் என்று சில ஆதாரங்களைப் பாதிரிமார்கள் காட்டினார்கள். அந்த ஆதாரங்கள் அனைத்தும் அவர்களுக்கு எதிரானதாக வந்து முடிந்தன.

ஏசு இறைவனின் மகன் தான் என்பதற்கு ஆதாரமாக, பழைய ஏற்பாட்டில் உள்ள ஏசாயா என்ற அதிகாரத்திலிருந்து,

ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். (ஏசாயா 7:14) என்ற வசனத்தை முதலில் ஆதாரமாக எடுத்து வைத்தனர்.

பொய்யாகிப் போன முன்னறிவிப்பு:

நாம் கேட்ட கேள்வி, ஏசு தன்னை எங்கேயாவது நான் தான் இறைவனுடைய மகன் என்று சொல்லியிருக்கிறாரா? என்பது தான். அதற்கு பதிலளித்த பாதிரிமார்கள் ஏசாயா என்ற அதிகாரத்திலுள்ள மேற்கண்ட வசனத்தை ஆதாரமாகக் காட்டினார்கள். மேற்கண்ட வசனத்தில், ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள் என்று வருவதால் குமாரன் என்று உள்ள வார்த்தை தேவகுமாரன் என்று ஏசுவைப்பற்றித் தான் குறிப்பிடுகின்றது என்பது தான் அவர்களுடைய வாதம்.

கன்னி திருமணம் முடிக்காமல் ஒரு குமாரனை பெற்றெடுப்பாள் என்றால், அவளுக்கு ஒரு மகன் பிறக்கப் போகிறான் என்று தானே அர்த்தம். அதை விட்டு விட்டு இது தேவ குமாரன் என்று ஏசுவே சொன்னதாக பைபிளில் ஏதும் ஆதாரமுண்டா என நாம் கேட்ட கேள்விக்கு எப்படி பதிலாகும் என்பது கூட பாதிரிமார்களுக்குத் தெரியவில்லை.

அவர்கள் காட்டிய அந்த ஆதாரத்தில் அவ்வாறு பெற்றெடுக்கக்கூடிய குழந்தைக்கு இம்மானுவேல் என பெயரிடப்படும் என்று முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அப்படியானால் ஏசுவை எங்கேயாவது யாராவது இம்மானுவேல் என்று அழைத்துள்ளார்களா? அல்லது ஏசு பிறந்தவுடன் அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடப்பட்டதா? என்று நாம் அவர்கள் சொன்ன பதிலிலிருந்தே அடுத்த கேள்வியையும் எழுப்பினோம்.

மத்தேயு என்ற அதிகாரத்தில் இந்த நற்செய்தி கூறப்பட்டுள்ளது என்று மத்தேயுவிலிருந்து ஒரு வசனத்தை எடுத்துக் காண்பித்தனர். அடுத்து அவர்கள் காண்பித்த வசனமும் அவர்களுக்கு எதிரானது தான். காரணம் என்னவென்றால் ஏசாயா என்ற அதிகாரத்தில் அவர் என்ன முன்னறிவிப்பை செய்தாரோ அதே முன்னரிவிப்பைத் தான் மத்தேயு தனது நற்செய்தியிலேயே செய்துள்ளார். இதோ அந்த வசனம்:

அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். (மத்தேயு 1:23)

இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதும் முன்னறிவிப்பு தான். இந்த முன்னறிவிப்பு எப்போது நிறைவேறியது என்பது தான் எங்கள் கேள்வி என்று நாம் கேட்டவுடன், செய்வதறியாமல் திகைத்த பாதிரிமார்கள்,

இல்லை, இல்லை, லூக்கா என்ற அதிகாரத்தில் ஏசு எனப் பெயரிடுவதாக உள்ளது என்று அடுத்த ஆதாரத்தைக் காட்டினார்கள்.

இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. (லூக்கா 1:31) என்ற இந்த வசனத்தில் ஏசு என்று தான் உள்ளது என்று சொன்னார்கள்.

பைபிளில் உள்ள முரண்பாடு:

மேற்கண்டவாறு லூக்கா கூறியிருப்பது சரியானதா என்று கூட பாதரிமார்கள் ஆராயவில்லை. லூக்கா என்பவர் இயேசுவுக்கு முன்னர் வாழ்ந்தவர் அல்லர். இயேசுவுக்குப் பின்னால் வந்தவர். இயேசுவைக் குறித்து முன்னறிவிப்பு செய்யப்பட்டிருந்தால் இயேசுவுக்கு முன்னுள்ள நூலில் தான் அது கூறப்பட்டிருக்கும். லூக்கா போன்றவர்கள் அது போன்ற முன்னறிவிப்பை எடுத்துக் காட்டலாமே தவிர இவர்களே முன்னறிவிப்பை கற்பனை செய்யக் கூடாது. இயேசு என்று பெயரிடுவாயாக என்று முன்னறிவிப்பு இருந்தால் பழைய ஏற்பாட்டில் அப்படி எழுதப்பட்டு அதைத் தான் லூக்கா எடுத்துக் காட்ட வேண்டும். ஆனால் பழைய ஏற்பாட்டில் இம்மானுவேல் என்று பெயரிடுவாயாக என்று தான் காணப்படுகிறது. அதை மத்தேயு சரியாக எடுத்து மேற்கோள் காட்டுகிறார். ஆனால் லூக்காவோ முன்னறிவிப்பில் இல்லாததை அவராக உருவாக்கி கற்பனை செய்து விட்டார் என்ற சாதாரண உண்மை கூட பாதிரிமார்களுக்குத் தெரியவில்லை.

மேற்கண்டவாறு லூக்கா கூறியிருப்பாரேயானால், ஒரு இடத்தில் இம்மானுவேல் என்று தான் பெயரிடப்படும் என்று மத்தேயு என்ற பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர் முன்னறிவிப்பு செய்திருக்கும் போது, லூக்கா என்ற பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர் ஏசு என்று பெயரிடப்படுவார் என்று முன்னறிவிப்பு செய்திருப்பாரேயானால், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட மத்தேயுவின் முன்னறிவிப்பு பொய்யாகி விட்டதாகவல்லவா ஆகி விடும் என்பதை பாதிரிமார்கள் கவனிக்கத் தவறி விட்டனர். இயேசு எனப் பெயரிடப்படுவதாக முன்னறிவிப்பு செய்திருப்பதும், இம்மானுவேல் என்று பெயரிடப்படுவதாக முன்னறிவிப்பு செய்திருப்பதும், முரண்பாடு என்பதையும் அவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை.

இம்மானுவேல் என்று ஏசுவுக்கு யாரும் பெயர் சூட்டவில்லையே என்று நாம் மறுபடியும் கேள்வியெழுப்ப, இம்மானுவேல் என்றால் நம்மோடு இருக்கும் கடவுள் என்று பொருள். அவருக்கு அப்படி பெயர் சூட்டப்படாவிட்டாலும் நாம் அவ்வாறு அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொதப்பலான பதிலை பாதிரிமார்கள் அளித்தனர்.

என்னையறிந்தவர் என் தந்தையை அறிந்தார்:

”என்னையறிந்தவர் எந்தந்தையை அறிந்தார்” என்றும், ”என்னோடு இணைந்துள்ளவர் என் தந்தையோடு இணைந்துள்ளார்” என்றும் ஏசு கூறியுள்ளார். அப்படியானால், கர்த்தரை, என் தந்தை என்று யார் கூற முடியும். ஏசு இறைவனுடைய மகனாக இருந்ததால் தான் “என் தந்தை” என்று கடவுளைக் குறிப்பிட்டுள்ளார் என்பது தான் அவர்களின் அடுத்த வாதம்.

இறைவனுடய குமாரர்களின் பட்டியல்:

என் தந்தை என்று ஏசு குறிப்பிட்டுள்ளார் என்ற வசனத்தை வைத்து நீங்கள் ஏசு தேவகுமாரன் என்று முடிவெடுத்துள்ளீர்கள். ஆனால், பைபிளில் பல தீர்க்கதரிசிகள் தேவனுடைய குமாரர்கள் என்று சொல்லப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய பட்டியல் இதோ, என்று கீழ்க்கண்ட வசனங்கள் வாசித்துக் காண்பிக்கப்ட்டன.

இஸ்ரவேல் இறைமகன்:

அப்போது நீ பார்வோனோடே சொல்ல வேண்டியது என்னவென்றால் “இஸ்ரவேல் என்னுடைய குமாரன்; என் சேஷ்ட புத்திரன். எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பி விடு என்று கட்டளையிடுகிறேன். அவனை விட மாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை உன் சேஷ்டபுத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல்” என்றார்.
(யாத்திராகமம் 4:22,23)

எப்பிராயீம் இறைமகன்:

இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்ட புத்திரனாயிருக்கிறான்.
(எரேமியா 31:9)

தாவீது இறை மகன்

நீர் என்னுடைய குமாரன்; இன்று நான் உம்மை ஜனிப்பித்தேன்”
(சங்கீதம் 2:7)

நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். அவன் எனக்குக் குமாரனாய் இருப்பான்.
(முதலாம் நாளாகமம் 17:13)

சாலமோன் இறை மகன்

அவன் (சாலமோன்) என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான். அவன் எனக்குக் குமாரனாயிருப்பான். நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். இஸ்ரவேலை ஆளும் அவனுடைய ராஜாங்கத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார்.
(முதலாம் நாளாகமம் 22:10)

சாமுவேல் இறை மகன்

நான் அவனுக்குப் பிதாவாய் இருப்பேன். அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்.
(இரண்டாம் சாமுவேல் 7:14)

மேற்கண்ட வசனங்களில், இஸ்ரவேல், எப்பிராயீம், தாவீது, சாலமோன், சாமுவேல் இவர்களெல்லாம் தேவ குமாரர்கள் என்று சொல்லியிருக்கும் போது ஏசுவை மட்டும் நீங்கள் தேவ குமாரன் என்று சொல்லக் காரணம் என்ன என்று நாம் கேள்வியெழுப்பினோம். மேலும், நீங்கள் சுட்டிக்காட்டிய வசனத்திலாவது ஏசு தான் தன்னுடைய தந்தை என்று கர்த்தரை குறிப்பிடுகின்றார். கர்த்தர் தன்னுடைய மகன் என்று ஏசுவைக் குறிப்பிடவில்லை. ஆனால் நாம் ஆதாரமாகக் காட்டும் வசனங்களில் கர்த்தரே கீழ்க்கண்டவர்களெல்லாம் என்னுடை குமாரர்கள் என்று தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளாரே, அவர்களை ஏன் தேவ குமாரர்கள் என்று நம்ப மறுக்கின்றீர்கள் என நாம் கேள்வியெழுப்ப விழிபிதுங்கிய பாதிரிமார்கள், நாம் அனைவருமே தேவனுடைய பிள்ளைகள் தான் என்று அந்த இடத்தில் தங்களது ஒப்புதல் வாக்கு மூலத்தைப் பதிவு செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்…

நீங்கள் சுட்டிக்காட்டிய வசனங்களின் பிரகாரம் நாம் அனைவருமே தேவ குமாரர்கள் தான் என்றாலும், நாங்கள் ஏன் ஏசுவை மட்டும் தேவ குமாரன் என்று கூறுகின்றோம் என்றால் அவர் மட்டும் தான் இறந்த பிறகு உயிர்பெற்று எழுந்தார். அது தான் கிறிஸ்தவத்தின் அடிப்படை. ஏசுவைத் தவிர வேறு யாரும் இறந்த பின் உயிர் பெற்று எழுந்ததாக நீங்கள் காட்ட முடியாது. அப்படி யாராவது உயிர்பெற்று எழுந்துள்ளார்கள் என்று நீங்கள் கோடிட்டு காட்டினால் நாம் அதை நம்பலாம். ஆனால் அப்படி யாரும் உயிர்பெற்று எழவில்லை. எனவே தான் அவர் தேவ குமாரர் என்று நாங்கள் நம்புகிறோம் எனபது தான் அவர்களது அடுத்த வாதம்.

இந்த வாதமாவது உண்மையா? இயேசுவைத் தவிர வேறு யாரும் உயிர்த்தெழவில்லை என்பது சரி தானா? என்று நாம் ஆய்வு செய்தால், ஏசுவைத் தவிர வேறு யாரும் இறந்த பின் உயிர்பெற்று எழுந்ததாக நீங்கள் காட்ட முடியாது என்று அந்த பாதிரியார் அவசரப்பட்டு உளறி விட்டார் என்று தான் கூற வேண்டும். அவர் வைத்த இந்த வாதத்துக்கு அவர்களது வேதத்திலிருந்தே பதிலடி கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு எதிரான பைபிள் வசனங்களை நாம் எடுத்துப் போட்டவுடன் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகி விட்டனர்.