ஷரீஅத்தை பாதுகாக்கும் பேரவையா? பாழாக்கும் பேரவையா?

Shariath Peravaiகடந்த ஞாயிறன்று சென்னை மண்ணடியில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சி குறித்து, ஷரீஅத் பாதுகாப்பு பேரவையினர் சார்பாக போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. சித்தீக்கி நத்வி என்பவர் மண்ணடியில் உள்ள ஒரு பள்ளிவாசலில் உரை நிகழ்த்தப்போவதாகவும், ஸெய்யிதுனா அபூ பக்கர் (ரலி) அவர்களுடைய வாரிசாக, அண்ணாரது பரம்பரையில் வந்த மாமேதை என்றும், லட்சத்திற்கும் அதிகமானோர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு காரணமாக இருந்தவர் இவர் என்றும், புருவம் உயர்த்தி அனைவரும் ஆச்சர்யப்படும் அளவுக்கு மெய்சிலிர்க்க வைக்கும் பேச்சாளர் என்ற பில்டப்புகளோடு போஸ்டர் வாசகங்கள் இருந்தன.

மௌலானாவின் பேச்சை ஒரு நிமிடம் கேட்டால் கூட உண்மையில் ஈமானுக்கு புத்துணர்வு ஏற்படுவதை யராலும் மறுக்க முடியாது என்ற 100 சதவீத உத்தரவாதத்துடன், அண்ணாரை பார்ப்பதே ஒரு பாக்கியம் என்பதில் சந்தேகமில்லை என்ற வரம்பு மீறிய புகழ் மொழிகளோடு அந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்த நமது சகோதரர்கள் இவர்கள் உண்மையிலேயே ஷரீஅத்தை பாதுகாக்க அமைப்பு நடத்துகின்றார்களா? அல்லது ஷரீஅத்தை அழிக்க அமைப்பு நடத்துகின்றார்களா? என்று மனம் வெதும்பி நம்மிடத்தில் கேள்வி எழுப்பினர்.

வரம்பு மீறி புகழ வேண்டாம்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னையே யாரும் வரம்பு மீறி புகழக் கூடாது என்று சொல்லியிருக்கின்ற நிலையில், அபூ பக்கர் (ரலி) பரம்பரையில் வந்தவர் என்று ஒருவரை சொல்லிக் கொண்டு (அவர் அபூ பக்கர் (ரலி) அவர்களுடைய பரம்பரையில் வந்தவர் என்பதற்கு என்ன சான்றோ தெரியவில்லை) அவர் பேச்சைக் கேட்டாலே ஈமான் பெருக்கெடுத்து ஓடும் என்றும், அவரைப் பார்ப்பதே பெரிய பாக்கியம் என்றும் சொல்வது ஒருவரை வரம்பு மீறி புகழக் கூடாது என்ற நபிகள் நாயகத்தின் கட்டளையை காலில் போட்டு மிதிப்பதாகும் என்பதை முதலில் ஷரீஅத் பேரவையினருக்கு சொல்லிக் கொள்கின்றோம். சஹாபாக்களுடைய வாரிசாகவே ஒருவர் இருந்தாலும் அதனால் அவருக்கு இறைவனிடத்தில் எந்த சிறப்பும் இல்லை என்ற அடிப்படை இஸ்லாமிய கொள்கை கூட ஷரீஅத் பேரவையினருக்கு இன்னும் விளங்கவில்லை என்றால் இவர்கள் எப்படி ஷரீஅத்தை பாதுகாக்க போகிறார்கள் என்று நமக்கு விளங்கவில்லை. இன்னும் தெளிவான வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய பரம்பரையில் வந்தவராக இருந்தால் கூட அவருக்கும் எந்த ஒரு சிறப்பும் கிடையாது என்பதையும் அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

பார்ப்பதே பாக்கியம் என்றால் யார் பெரிய பாக்கியசாலி:

மேலும் மேற்குறிப்பிட்ட மௌலானவைப் பார்ப்பதே ஒரு பாக்கியம் என்று பில்டப் கொடுக்கும் ஷரீஅத் பேரவையின ரிடத்தில் சில கேள்விகளை முன் வைக்கின்றோம்.

* ஒரு தீயவன் யாரேனும் ஒரு நல்லவரைப் பார்த்தால் அவனுக்கு அது பாக்கியம் என்றால் நபிகள் நாயகத்தை நேரில் பார்த்த காஃபிர்கள் எல்லாம் பாக்கியம் பொருந்தியவர்களா?

* ஒருவர் நற்காரியங்களை செய்வதால் பாக்கியம் பொருந்தியவராவாரா? நல்லவர் ஒருவரைப் பார்ப்பதால் பாக்கியம் பொருந்தியவராவாரா?

* இப்ராஹீம் நபியை பிறந்ததிருந்து பார்த்துக் கொண்டேயிருந்த அவர்களது தந்தை ஏன் பாக்கியம் பொருந்தியவராக ஆகாமல் காஃபிராக மரணித்தார்?

* நூஹ் நபியவர்கள் 950 வருடங்கள் வாழ்ந்தார்கள். அவர்களது மகனை தனது வாழ்நாளில் எத்தனை ஆயிரம் தடவை பார்த்திருப்பார்கள்? அப்படியென்றால் அவரது மகன் பாக்கியம் பொருந்தியவராக இருக்க வேண்டுமே! ஏன் அல்லாஹ் அவரை நீரில் மூழ்கடித்து அழித்தான்? பல்லாயிரம் தடவை பார்த்த காரணத்தி னாலா?

* நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எடுத்து வளர்த்த அவர்களது சிறிய தந்தை அபூ தாலிப் அவர்கள் எத்தனை தடவை நபிகளாரைப் பார்த்திருப்பார்கள்? அவர்களுக்கு அல்லாஹ் பாக்கியம் வழங்கி முஸ்லிமாக ஆக்காதது ஏன்? மேற்கண்ட விஷயங்கள் அனைத்தும் ஒருவரைப் பார்ப்பதால் நமக்கு எந்த பாக்கியமும் ஏற்பட்டு விடப் போவதில்லை என்பதை உணர்த்துகின்றதா? இல்லையா? நல்லடியார்கள்தான் என்று நற்சான்று கூறப்பட்ட நபிமார்களுக்கே இந்தநிலை என்றால், மேற்கூறிய மௌலானா அவ்லியாவா? இல்லையா? என்பதே சந்தேகத்திற்கு உரியதாக இருக்கும் நிலையில் அவரைப் பார்ப்பதால் நமக்கு என்ன வந்துவிடப் போகின்றது என்பதை ஷரீஅத் பாதுகாப்பு(?) பேரவையினர் விளக்க கடமைப்பட்டுள்ளனர்.

நேர்வழிக்கு உத்தரவாதம்:

அடுத்த படியாக, அந்த மௌலானாவின் பேச்சைக் கேட்டால், அதுவும் ஒரு நிமிடம் கேட்டால் கூட ஈமானுக்கு புத்துணர்வு ஏற்பட்டு விடும் என்பதை யாரும் மறுக்க முடியாது என்று இறுமாப்போடு எழுதியுள்ள ஷரீஅத் பாதுகாப்பு(?) பேரவையினரைப் பார்த்து சில கேள்விகள்:

* இவருடைய பேச்சை யாரேனும் கேட்டால், அவருடைய ஈமான் புத்துணர்வு அடையும் என்று சொல்வதன் மூலம், அவருக்கு நேர்வழி கிடைப்பது உறுதி என்று உத்தரவாதம் அளிக்கும் ஷரீஅத் பேரவையினரே! இப்ராஹிம் (அலை) நபியவர்கள் எப்படி எப்படியெல்லாம் அறிவுப்பூர்வமாக பிரச்சாரம் செய்தார்கள்? அவர்களுடைய பேச்சின் மூலம் அவர்களுடைய தந்தையை இஸ்லாத்திற்கு கொண்டு வர முடிந்ததா?

* நூஹ் (அலை) அவர்கள் நூற்றுக்கணக்கான வருடங்கள் அழைப்புப் பணி செய்து அவர்களுடைய மகனையும் மனைவியையும் ஏகத்துவத்தை ஏற்க வைக்க முடியவில்லையே! அந்த வரலாறு உங்களுக்கு தெரியாதா?

* லூத் (அலை) அவர்கள் தங்களுடைய மனைவியை தங்களது பேச்சின் மூலம் அவர்களுடைய ஈமானுக்கு புத்துணர்வு ஏற்படச் செய்து மனமாற்றத்தை ஏற்படுத்த செய்ய முடியவில்லையே! இதிலிருந்து இஸ்லாத்தின் அடிப்படை உங்களுக்கு விளங்காதா?

* எத்தனையோ நபிமார்கள் ஏகத்து வத்தை எவ்வளவோ தெளிவாக எடுத்துச் சொல்லியும் அவர்களது பேச்சை ஒருவர்கூட ஏற்றுக் கொள்ளாமல் அந்த நபி மார்களை கொலை செய்துள்ளார்களே! அதுவெல்லாம் உணர்த்தும் பாடம் என்ன?

* நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது சிறிய தந்தை அபூ தாலிப் அவர்கள் ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்களிடத்தில் எப்படியெல்லாம், அவருக்கு ஈமான் புத்துணர்ச்சி அளிக்கும் விதத்தில் பேசியிருப்பார்கள்? அவர்களால் அபூதாலிப் அவர்களை நேர்வழியின் பால் செலுத்த முடிந்ததா?

* யாரையும் நேர்வழியில் செலுத்துவதற்கு எவரும் உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதுதான் இஸ்லாத்தின் அடிப்படையாக இருக்கின்ற நிலையில், நேர்வழி செலுத்தும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது என்று இருக்கின்ற நிலையில், அல்லாஹ்வுடைய பண்பு இந்த பெரியாருக்கு வந்து விட்டதாகவும், அவ்வாறு உங்கள் ஈமான் புத்துணர்வு பெறுவது உறுதி என்று உறுதிபட போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கின்றீர்களே! இது தெளிவான இணை வைத்தல் இல்லையா?

* நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த ஏகத்துவத்தை குழி தோண்டிப் புதைப்பதற்கு ஒரு ஷரீஅத் பாதுகாப்பு(?) பேரவை தேவைதானா? இஸ்லாத்திற்கு அரணாக இருக்கின்றோம் என்று சொல்லிவிட்டு இதுபோன்ற இஸ்லாமிய அடிப்படைக்கு முரணாக உள்ள தர்கா, தரீக்கா, மத்ஹபு, தட்டு, தகடு, தாயத்து, செய்வினை, பில்லி, சூனியம் இவைகளை ஆதரிக்கக்கூடிய நீங்கள் ஷரீ அத்தை பாதுகாக்க வந்தவர்கள் அல்ல! ஷரீஅத்தை பாழாக்கவும், இஸ்லாத்தை ஷைத்தானிடத்தில் பயாக்கவும்தான் வந்துள்ளீர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

– அபூமர்யம்