விளக்குமாறால் அடிவாங்கினால் பீடை ஒழியுமா? – விசித்திரமான மூடநம்பிக்கை!

விளக்குமாறால் அடிவாங்கினால் பீடை ஒழியுமா?

– விசித்திரமான மூடநம்பிக்கை!

மாற்றுமத்ததவரோடு போட்டி போடும் இஸ்லாமிய சமுதாயம்!

கடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள கஞ்சமநாயக்கர் பேட்டை என்ற ஊரிலுள்ள ஒரு கோவிலில் கடந்த சிலவாரங்களுக்கு முன்பு ஒரு திருவிழா நடைபெற்றது. அந்த திருவிழாவின் சிறப்பு என்னவென்றால், மார்கழி மாத பீடையைப்போக்குவதற்காக பக்தர்கள் அந்த கோவிலில் குவிகின்றனர். பீடை எப்படி போகும் என்று கேட்கிறீர்களா?. அந்த கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் அனைவருக்கும் விளக்குமாறு மற்றும் முரத்தால் தலையிலேயே அடிவிழுகின்றது. இப்படி கோவிலில் உள்ள அரவாணி வேடம் பூண்டவர்களிடத்தில் விளக்குமாத்தாலும், முரத்தாலும் அடிவாங்கினால் மார்கழி மாத பீடை கழிந்து விடுமாம்.

இந்த கால கட்டத்திலும் இப்படிப்பட்ட மூடநம்பிக்கையோடு மக்கள் இருக்கின்றார்களே என்று நாம் ஆச்சரியப்படவேண்டியதில்லை. காரணம் என்னவென்றால், அந்த கோவிலுக்கு வந்து விளக்குமாத்தால் அடிவாங்கும் பக்தகோடிகளுக்கு அறிவுரை வழங்க ஆள் இல்லை. அவர்களிடத்தில் அனைத்துமூடநம்பிக்கைகளையும் ஒழித்துக்காட்டும் திருக்குர்-ஆன் இல்லை. மூடநம்பிக்கைக்கு முடிவுகட்டும் நபிகளாரின் போதனைகள் இல்லை. ஆனால் இவற்றை தங்கள் கைவசம் வைத்திருக்கும் முஸ்லிம் சமுதாயமே இத்தகைய இந்த மூடநம்பிக்கைகளுக்கு நிகரான மூடத்தனங்களை செய்து வரும்போது வேதமில்லாத சமுதாயம், தவறுகளை செய்வதையே மதநம்பிக்கைகளாக கொண்ட, அறியாத சமுதாய மக்களை நாம் நொந்து கொள்வதில் வேலையில்லை.

ஆம்! மாற்று சமுதாய மக்களுக்கு மார்கழி மாத பீடை, ஆடி மாத பீடை என்றால், நம்முடைய சமுதாயமோ “ஸபர் மாத பீடை” என்று மூடத்தனத்தில் மூழ்குவதை காண்கின்றோம். அவர்கள் எப்படி விளக்குமாறு அடிவாங்கினால் பீடை ஒழியும் என்று நம்புகின்றார்களோ, அதைப்போல நமது சமுதாயமோ “ஒடுக்கத்து புதன்” என்ற ஒரு நாளை உருவாக்கிக்கொண்டு, அந்த நாளில் புல் மிதித்தால் நமது தலைவழியாக இறங்கிய பீடை கால்வழியாக சென்று புல்வழியாக பூமியில் இறங்கிவிடும் என்று நம்புகின்றனர்.

மேலும், மாமர இலை, போன்ற இலைகளில் எழுதி கரைத்துக்குடித்தால் பீடை போய்விடும் என்று நம்புகின்றனர்.

மேலும், இந்த ஸபர் மதம் ஏன் பீடை மாதம் என்றால், இந்த மாதத்தில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள் என்று கூறி இந்த மூடநம்பிக்கையை நியாயப்படுத்துவதை பார்க்கின்றோம்.

ஆனால், நபிகளார் நோய்வாய்பட்டது ஸபர் மாதம், எனவே நோய்வாய்பட்ட மாதம் பீடை மாதம் என்று சொல்லும் இவர்கள், நபிகளார் மரணித்த ரபியுல் அவ்வல் மாதத்தை சிறந்த மதமாக கருதுவதுதான் மிகவும் விசித்திரமாக உள்ளது. நோய்வாய்பட்ட மாதத்தை விட மரணித்த மாதம் தான் மிகப்பெரிய பீடை மாதமாக கருதப்பட வேண்டும். ஆனால் நபிகளார் மரணித்த மாதத்தை சிறந்த மாதமாக இவர்கள் கருதுவதிலிருந்து இது எத்தகைய மூடத்தனம் என்பதை சொல்லித்தெரியவேண்டியதில்லை.

மாற்றுசமுதாய மக்களை காப்பியடித்து செய்யப்படும் இத்தகைய மூடத்தனங்களிலிருந்து நமது சமுதாயம் விழிப்புணர்வு பெறவேண்டும்.