வரதட்சணைக் கொடுமை செய்து கொலை செய்த வழக்குகளை கொலை வழக்காக பதிவு செய்து மிகப்பெரிய தண்டனையான மரண தண்டனையை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை அளித்துள்ளது.
இதுபோன்ற செயல்களுக்கு தங்களது வன்மையான கண்டனத்தையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பின்போது குறிப்பிட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சத்தியநாராயண திவாரி என்பவர் தனது மனைவி கீதா என்பவரை கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதி அன்று கொலை செய்தார். திவாரியும் அவருடைய தாயாரும் சேர்ந்து கீதாவின் கழுத்தை நெரித்துக் கொன்று, தீ வைத்து எரித்தனர். கொலை செய்யப்படும் போது, கீதாவின் வயது 24 ஆகும்.
இது தொடர்பாக, இந்திய தண்டனை சட்டம் 304-பி பிரிவின் கீழ் வரதட்சணை கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த செசன்சு நீதிமன்றம், திவாரி மற்றும் அவருடைய தாயார் இருவரையும் விடுதலை செய்தது. அதை எதிர்த்து காவல்துறை தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், இரண்டு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து திவாரி மற்றும் அவருடைய தாயார் இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த மனுவை நீதிபதிகள் மார்கண்டேய கட்சு, கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது. விசாரணை முடிந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அப்போது, வரதட்சணை கொலைகளுக்கு எதிராக நீதிபதிகள் கடுமையான கருத்துகளை கூறினார்கள். அந்த கொலைகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர். திவாரி மற்றும் அவருடைய தாயார் இருவருக்கும் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர்.
தீர்ப்பின் போது நீதிபதிகள் கூறியதாவது, வரதட்சணைக்காக மணமகளை கொல்லும் கொடூரச் செயல்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மேல்முறையீடு செய்துள்ள குற்றவாளிகளுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்க மறுப்பதற்கு எந்த காரணமும் இல்லை. உண்மையில், இதுபோன்ற வரதட்சணை கொலைகளுக்கு இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின் (கொலை) கீழ் வழக்குப் பதிவு செய்து மரண தண்டனை வழங்க வேண்டும்.
ஆனால், இந்த வழக்கைப் பொறுத்தவரை 302-வது பிரிவில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை. வரதட்சணை கொடுமை சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, எங்களால் மரண தண்டனை விதிக்க முடியவில்லை. இதுபோன்ற மணமகள் எரிப்பு வழக்குகள் அனைத்துமே அரிதிலும் அரிதான வழக்குகளாகவே கருதி மரண தண்டனை விதிக்க வேண்டும்.
பெண்களிடம் மரியாதை காட்டுவதே ஆரோக்கியமான சமுதாயத்துக்கு அடையாளம். ஆனால், இந்திய சமுதாயம் நலிவடைந்து வருகிறது. மணமகள் எரிப்பு அல்லது தூக்கில் தொங்குவது போன்ற வழக்குகள் நாட்டில் சாதாரணமாகி விட்டன. நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் குவிந்து கிடக்கும் ஏராளமான வழக்குகளே இதற்கு ஆதாரம்.
வரதட்சணைக்காக மணமகளை எரித்துக் கொல்வது, கழுத்தை நெரித்து தூக்கில் தொங்க விடுவது, மண்எண்ணெயை ஊற்றி எரிப்பது போன்றவை காட்டுமிராண்டித் தனமான செயல் என்பது நிச்சயம். நாகரீக சமுதாயத்தில் ஏராளமான பெண்கள் இதுபோன்று கொடுமைப் படுத்தப்படுவது ஏன்? நமது சமுதாயம் எவ்வாறு மாறிக்கொண்டிருக்கிறது. இந்த வழக்கு, அதற்கு உதாரணமாக இருக்கிறது.
பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்களை கோபத்தின் வெளிப்பாடு அல்லது சொத்துக்கான சாதாரண குற்றங்களாக கருத முடியாது. இவை, சமூக குற்றங்கள். ஒட்டுமொத்த சமூக கட்டமைப்புக்கும் ஊறு விளைவிக்க கூடியவை. பணத்தின் மீதுள்ள மோகத்தால் வரதட்சணை கேட்பதோடு, பின்னர் கூடுதலாக பணத்தை கேட்டு மனைவியை கொலை செய்வது நமது சமூகத்தில் நடைபெறுகிறது.
பின்னர், இதே காரணத்துக்காக (பணத்துக்காக) மீண்டும் மீண்டும் திருமணம் செய்து கொண்டு மனைவியை கொலை செய்கின்றனர். ஏனென்றால், நம்முடைய சமுதாயம் வர்த்தகமயமாகி விட்டது. அற்ப பணத்துக்காக மனைவியையே கொலை செய்யும் நிலைக்கு மக்கள் செல்கின்றனர். சமூகத்தில் நிலவும் இத்தகைய கொடிய செயலை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.