வந்தே மாதரம் பாடலை முஸ்லிம்களிடம் திணிக்கும் தேச விரோதிகள்

vhpஉத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள டியோபாண்ட் என்ற இடத்தில் நடந்த ஜம்இய்யத்துல் உலமா யே ஹிந்த் மாநாட்டில், “வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்திற்கு எதிரானது. எனவே இந்தப் பாடலை முஸ்லிம்கள் யாரும் பாட வேண்டாம்…” என்று தீர்மானம் இயற்றப்பட்டது.

இதைக் கேள்விப்பட்ட சங்பரிவாரும், பாஜகவினரும் வானத்திற்கும், பூமிக்கும் இடையே குதியாய் குதித்து “இந்தக் கருத்து அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது…” என்ற அளவுக்கு பேசியிருக்கிறார்கள்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் வந்தே மாதரம் பாட வேண்டும் என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்று அவர்களுக்குத் தெரியவில்லை. வந்தே மாதரத்தைப் பாடித்தான் ஆக வேண்டும் என்று சொல்பவர்கள் இந்திய ஒற்றுமைக்கு எதிரானவர்கள்; தேச நலனுக்கு குந்தகம் செய்பவர்கள் என்பதே உண்மை!

இந்திய அரசியலைப்புக் குழு 1950ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் தேதியன்று “ஜனகனமன” என தொடங்கும் பாடலை தேசிய கீதமாக அறிவித்துள்ளது. இந்தப் பாடல் எல்லா அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிலையங்களிலும் கட்டாயம் பாடப் படும். இந்தப் பாடலை 52 வினாடிகளில் பாடி முடிக்க வேண்டும் என்று விதியே இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்புவரை சினிமா படம் முடிந்தவுடன் திரையரங்குகளில் இந்தப் பாடல் ஒலிக்கப்படும். அப்போது எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தும் வழக்கம் இருந்தது.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக கூட்டங்களில் மட்டும்தான் இந்த தேசிய கீதம் அந்த காலத்திலும் பாடப்படவில்லை. இப்போதும் பாடப்படுவதில்லை. அந்த அளவுக்கு அவர்கள் தேசிய கீதத்திற்கு இழுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இவர்களின் வளர்ச்சி ஏற்பட்ட பிறகு திரையரங்குகளில் ஒலிபரப்பப்படும் “ஜனகனமன” பாடலும் நிறுத்தப்பட்டு விட்டது. எனவே தேசிய கீதத்தை மதிக்காத தேச விரோதிகள்தான் வந்தே மாதரத்திற்கு பல்லக்கு தூக்குகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்திய சுதந்திரத்திற்கு முன்பாகவே வந்தே மாதரம் பாடுவதை தேசிய தலைவர்கள் விட்டு விட்டார்கள். 1911ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி கல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸின் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில்தான் “ஜனகனமன…” என்று தொடங்கும் தேசிய கீதம் முதன் முதலாக பாடப்பட்டது.

இந்நிலையில் 1923ம் ஆண்டு காக்கி நாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த விஷ்ணு திகம்பர் பலுங்கர் என்பவர் இந்தப் பாடலைப் பாட முயன்றார். அப்போது சபையில் இருந்த மௌலானா முஹம்மது அ, “இது இஸ்லாத்திற்கு எதிரான பாடல். அதனால் இதைப் பாட அனுமதிக்க முடியாது…” என தடுத்தார்.

முஹம்மது அ அந்தப் பாடலை பாடக்கூடாது என்று தடுத்ததற்கு நியாயமான காரணங்கள் இருந்தன.
1. காங்கிரஸ் கட்சி வந்தே மாதரம் பாடலுக்கு விடை கொடுத்து விட்டுத்தான் “ஜனகனமன…” பாடலை 1911ல் எடுத்துக் கொண்டது.

2. 1922ல் அல்லாமா முஹம்மது இக்பா ன் “சாரே ஜஹான்ஸே அச்சா… ஹிந்துஸ் தான் ஹமாரா…” என்ற பாடலை காங்கிரஸ் துணை தேசிய கீதமாக ஏற்றுக் கொண்டது. (ஆதாரம் : ஆர்.எஸ்.எஸ்.ஸின் தேசிய பொதுச் செயலாளர் ஹொ.வெ. சேஷாத்திரி எழுதிய தேசிய பிரிவினையின் சோக வரலாறு. பக்கம் 169).

இவ்வளவுக்கும் பிறகு வந்தே மாதரத்தை காங்கிரஸ் மாநாட்டில் பாட முயன்றது அதிகப்பிரசங்கத்தனம்தானே! அந்த அதிகப்பிரசங்கித்தனத்தைதான் சங்பரிவாரும், பாஜகவினரும் இன்றுவரை விடாமல் செய்து வருகிறார்கள்.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டில் யாரையும், எதற்காகவும் வற்புறுத்த முடியாது. “ஜனகனமன…” என்று தொடங்கும் பாடல் தேசிய கீதம்தான். இந்த தேசிய கீதத்தை பாட வேண்டும் என்று கூட யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேசிய கீதம் பற்றி உச்சநீதிமன்றம் இப்படி தீர்ப்பளித்திருக்க, தேசிய கீதமல்லாத வந்தே மாதரத்தை முஸ்லிம்களும் பாட வேண்டும் என்று சங்பரிவார் வற்புறுத்துவது ஜனநாயக விரோத செயலாகும்.

தேசப்பற்று என்பது தேச மக்களை நேசிப்பதாகும். வந்தே மாதரம் பாடுவதில் அல்ல. இந்தியாவில் வாழும் சிறுபான்மை மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், பழங்குடியின மற்றும் தலித் மக்களை சங்பரிவார் வெறுத்து ஒதுக்கும். அவர்கள் வெறுப்பால்தான் இம்மக்களும் அவர்களை தூரத்திலேயே வைப்பர். இப்படி இந்தியாவில் வாழும் 90 சதவீத மக்களை வெறுத்து, அவர்களின் வெறுப்புக்கும் உள்ளாவது நிச்சயம் தேசப் பற்றுள்ளவர்களின் செயலாக இருக்க முடியாது.

இப்படி தேசப் பற்றில்லாமல் திரிபவர்கள்தான் வந்தே மாதரத்தை தலையில் தூக்கி சுமக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

வந்தே மாதரம் பாடல், மதம் சார்ந்த பாடல். அது தேசிய பாடலல்ல. இந்தியாவை சரஸ்வதியாக, துர்க்கையாக பாவித்து, அதனை வணங்குகிறேன் என்று ஆனந்த மடம் நாவல் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதியுள்ளார். இப்படி இந்து தெய்வங்களை வர்ணித்து, வணங்குகிறேன் என்று பொருள் வரும் பாடலை இறைவன் ஒருவனே என்று ஏற்று, நடைமுறைப்படுத்தும் முஸ்ம்களால் எப்படி வணங்க முடியும்?

தாய் நாட்டின் மீது பற்று வைக்கலாம். அதற்காக வெறும் மண்ணை வணங்க வேண்டும் என்று சொல்வது பகுத்தறிவுக்கு முரணானது அல்லவா? மண்ணில் சிறுநீர் கழிக்கிறோம். மலம் கழிக்கிறோம். குப்பை போன்ற அசுத்தங்களை எடுத்து வீசுகிறோம். அவை மண்ணோடு மண்ணாக மக்கி விடுகின்றன. இவை அனைத்தும் கலந்துள்ள மண்ணை வணங்குவது மடத்தனம் இல்லையா? இந்த மடத்தனத்தை செய்ய மாட்டோம் என்று முஸ்லிம்கள் சொன்னால் அவர்களின் மீது சங்பரிவார் பாய்ந்து பிராண்டுவது நியாயம்தானா?

தேசிய கீதமான “ஜனகனமன…” பாடல் எல்லோருக்கும் தெரிந்த, மனனமான பாடல். வந்தே மாதரம் பாடல் ஒருவருக்கும் தெரியாத பாடல்.

“வந்தே மாதரம்
சுஜலாம் சுபலாம் மபயஜ சீதளாம்.
சஸ்ய சியாமளாம் மாதரம்!
சுப்ரஜோத்சனா புளிகீத யாமிளீம்
புல்லகுசுமித துருமதள சோபினீம்
சுகாசினீம் சுமதுர பாஷிணீம்
சுகதாம் வரதாம் மாதரம்!”

வந்தே மாதரம் பாடித்தான் ஆக வேண்டும் என்று அடம் பிடிப்பவர்களுக்கு கூட இந்தப் பாடலை பாடத் தெரியாது. தேச மக்களோடு ஒன்றிப் போகாமல், அவர்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படுவதை சங்பரிவார் விட்டொழிக்க வேண்டும்.

வந்தே மாதரம் பாடலை கைவிடுவதின் மூலம் அதை அவர்கள் வெளிக்காட்ட வேண்டும். இல்லையேல் இவர்களை விட்டு தேச மக்கள் வெகு தொலைவுக்கு விலகிச் செல்வது காலத்தின் கட்டாயமாகிவிடும். இதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து நடந்து கொள்வார்களா?

– ஜாஹிர் ஹுஸைன்