முதியோர் இல்ல மூதாட்டி மரணம் : அடக்க மறுத்த ஊர் ஜமாஅத் ! ”யாவரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியவரே!”

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சமுதாய நலப்பணிகளில் மிக முக்கியமானது ஆதரவற்ற முதியோர் இல்லம் ஆகும். தூக்கி வளர்த்த பெற்றோர்களை ஏதோ சுமைகளைப் போலக் கருதி தூக்கி வீசும் கொடூரமான பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள், தங்களின் கடைசி வாழ்க்கையை பிளாட்பாரங்களிலும், கடைகளின் வாசல்களிலும் தங்கிக் கழிப்பதை நாமெல்லாம் கண்டிருப்போம். சாப்பிடக் கூட வழியில்லாத அந்த முதியவர்கள் குப்பைத் தொட்டிகளில் விழும் எச்சில் இலைகளைத் திண்பதையும் நாம் கண்டிருப்போம்.

பெற்றோர்களை அதிகம் பேண வேண்டும் என்றும் வழியுறுத்தும் நம் இஸ்லாமிய மார்க்கத்திலும் இது போன்ற சிலரால் கைவிடப்பட்டு நடுத்தெருவில் நாதியற்று ஒதுங்கி வெயிலிலும் மழையும் கிடந்து அவதிப்பட்டு அசையக் கூட முடியாமல் கிடந்து அங்கேயே அநாதைகளாய் இறந்து போகும் முதியவர்களையும் நாம் கண்டிருப்போம்.

சில சமூக ஆர்வலர்கள் இது போன்ற முதியவர்களைக் கூட்டிச்சென்று மற்ற மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நடத்தும் அனாதை இல்லங்களில் சேர்த்து விடுகின்றனர். காலம் முழுவதும் ஈமானோடு இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாய் பின்பற்றி வாழ்ந்து வந்தவர்கள், இறுதிக் காலத்தில் வேறு வழியில்லாமல் உணவுக்காகவும் உறைவிடத்திற்காகவும் மாற்று மதக் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு இணைவைப்பில் விழுந்து விடுகின்றனர். அவர்களின் வணக்கங்கள் முழுமையாக நாசமாகி அவர்கள் நரகப்படுகுழிகளை நோக்கி பயணிப்பதற்கு நாமும் ஒரு வகையில் காரணமாகி விடுகின்றோம்.

இந்தநிலை இனி யாருக்கும் வந்துவிடக் கூடாது., நம் மக்கள் இனி அநாதைகளாக நடுவீதியில் செத்து விழக்கூடாது, உணவிற்காக கொள்கைகளை கொள்கை மாற்றிக் கொள்ளக்கூடாது என்ற தீர்மானத்தை அழுத்தமாகப் பதிந்து தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் ஆதரவற்ற முதியோர் இல்லம் துவக்கப்பட்டது. இறைவனின் பேரருளாலும் நம் சகோதரர்களின் பூரண ஒத்துழைப்பாலும் இந்த இல்லம் இப்போது தஞ்சை மாவட்டம் ராஜகிரி பண்டாரவாடையில் இயங்கி வருகின்றது. இப்போதைக்கு அங்கே 19 முதியவர்கள் தங்கியிருக்கிறார்கள். (அந்த இல்லம் நடக்கும் இடம் கூட நம் ஜமாஅத்தின் சேவைகளைக் கண்டு ஒரு சகோதரர் அன்பளிப்பாகத் தந்தது ஆகும்.)

இந்த நிலையில் கடந்த 12/09/2011 திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் அங்கே தங்கியிருந்த சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி சபியா பீவி என்பவர் மவுத்தானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இந்த மூதாட்டி கடந்த பல மாதங்களாக இந்த இல்லத்தில் தான் தங்கியிருந்தார். இவர் அசைந்து எழுந்து நடக்கக் கூட முடியாத நிலையில் இருந்தார். நம் சகோதரர்கள், அந்த மூதாட்டியைக் கருனையோடு கவனித்து வந்தனர். இவர் மவுத்தானதும் இவருக்குச் செய்ய வேண்டிய அனைத்துப் பணிகளையும் செய்து, குளிப்பாட்டி, கபனுடை தரித்து தயார்படுத்தினார்கள். அந்த இல்லத்தில் உள்ள அனைத்து முதியவர்களும் இரவெல்லாம் விழித்திருந்து அங்கேயே அமர்ந்திருந்தார்கள்.

இரவு நேரம் என்பதால் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளைக் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து அனைவரும் இருந்து விட்டனர்.

காலையில் பண்டாரவாடை பெரிய பள்ளிக்கு ஃபஜ்ரு தொழுகைக்குச் சென்ற நம் சகோதரர்கள் அந்த ஊர் நிர்வாகிகளிடம் மூதாட்டி வபாத்தான விசயத்தைச் சொல்லி அவரை அடக்கம் செய்வதற்கு அனுமதி தருமாறு கேட்டனர். இது சம்பந்தமாக நாங்கள் கலந்தாலோசிக்க வேண்டும்., எனவே காலை 8 மணிக்கு நாங்களே தகவல் அனுப்புகிறோம் எனச் சொல்லி நம் மக்களை அனுப்பி வைத்தனர் பண்டாரவாடை ஊர் நிர்வாகிகள்.

காலை மணி 9 ஆகியும் கூட எவ்வித தகவலும் வராத காரணத்தால் நேரடியாகச் சென்று கேட்டு விடுவது என முடிவுசெய்து அவர்களை அணுகிய போது அவர்கள் சொன்ன பதில் நம் மக்களுக்கு நெஞ்சை அடைப்பதாக இருந்தது.,

எந்த ஊரென்றே தெரியாதவருக்கெல்லாம் எங்கள் ஊரில் அடக்கம் செய்ய இடம் தர முடியாது. நீங்கள் வேறு எங்கு வேண்டுமானாலும் அடக்கம் செய்து கொள்ளுங்கள், உங்களுக்கு என்ன முடியுமோ அதைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என வெடித்தனர்.

ஜனாஸாவைச் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இருந்த நம் சகோதரர்கள் அவர்களிடம், ஜனாஸைத் தடுக்காதீர்கள்” என்று கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அதற்கும் மனமிறங்காத அந்த கல் நெஞ்சம் கொண்டவர்கள், “முடியவே முடியாது நீங்கள் இங்கிருந்து இடத்தைக் காலி செய்யுங்கள், உங்களுக்கென்று தனிப்பள்ளிவாசல் இருக்கும் போது அடக்கத்தலத்திற்கு மட்டும் ஏன் எங்களை நாடி வருகிறீர்கள்? அதையும் நீங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டியது தானே” என தங்களின் காழ்ப்புணர்வைக் கொட்டித் தீர்த்தனர்.

அதற்கும் கோபப்படாத நம் மக்கள் மிகத் தெளிவாக சொன்ன பதில், “எங்கள் கொள்கையை எதிர்ப்பதற்காக எங்களின் பெற்றோர்கள் இறந்து போனால் அவர்களின் ஜனாஸாவைத் தான் தடுக்கிறீர்கள், ஆனால் இப்போது இறந்து போயிருப்பது எங்கள் பெற்றோர் அல்லவே! இங்கிருக்கும் யாருடைய பெற்றோரும் அல்லவே. அனாதைகளாய் வீட்டை விட்டு விரட்டப்பட்ட ஒரு மூதாட்டியின் ஜனாஸாவுக்குத் தானே நாங்கள் உங்களிடம் வந்து பேசிக் கொண்டிருக்கிறோம். பிள்ளைகளால் வீட்டைவிட்டு துரத்தப்பட்டு மனம் நொந்து போய் தங்கள் கடைசி வாழ்க்கையை வாழ்ந்து இறந்து போன அவர்களின் ஜனாஸாவையாவது நிம்மதியாகப் போக விடுங்கள். உங்கள் மையவாடியில் ஆறு அடி நிலம் தந்து விடுவதால் உங்களுக்கு ஒன்றும் குறைந்து போய்விடாது என்று மீண்டும் கேட்டுப் பார்த்தனர்.

எதற்கும் இறங்காத மனம், ஜனாஸாவைப் பார்த்தாவது இறங்கும் என்பார்கள். ஆனால் அதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் ஒரு அனாதை மூதாட்டியின் ஜனாஸாவை அடக்கம் செய்வதில் முரண்டு பிடித்து நின்றனர் பண்டாரவாடை ஜமாஅத்தார்கள்.

இனி இதற்கு மேலும் இங்கே நின்றால் வேலைக்காகாது என்று ராஜகிரி பண்டாரவாரை கிளை நிர்வாகிகள், உடனடியாக தலைமையகத்தைத் தொடர்பு கொண்டனர். தகவல்களை முழுமையாகக் கேட்டறிந்து விட்டு ஜனாஸாவின் அடக்கமே முக்கியம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்த மாநிலத் தலைமை, இறந்தவர் நம்முடைய கொள்கைச் சகோதரர்கள் என்றால் கடைசி வரை போராடிப் பார்க்கலாம். ஆனால் மனிதாபிமான அடிப்படையில் நம்மிடம் அடைக்கலம் நாடி வந்தவர்களின் ஜனாஸாவை வைத்து பிரச்சனையாக்க வேண்டாம் வேறு ஏதாவது ஊரில் முயற்சி செய்து பாருங்கள் என்று அவர்களை அறிவுறுத்தியது. மாவட்ட நிர்வாகிகளுக்கும் இது குறித்து அறிவுறுத்தப்பட்டது.

தஞ்சை வடக்கு  மாவட்டத்தின் தலைவர் இம்தியாஸ் தன் சொந்த ஊரான திருமங்கலக்குடியை அடுத்த குறிச்சிமலை ஜமாஅத்தார்களை அனுகினார். இந்த விசயத்தைக் கேட்டதும் அந்த ஊர் நாட்டாமை ஹபீப் முஹம்மது அவர்களும் மற்றும் நிர்வாகிகள் இன்ஜினியர் ஜாபர், ஹாஜா மற்றும் ஜாபர் ஆகியோரும் எவ்வித ஆட்சேபனையும் இன்றி உடனடியாக ஜனாஸாவை இங்கே அடக்கம் செய்து கொள்ளுங்கள் என தெரிவித்ததைத் தொடர்ந்து ,  தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் உடனடியாக இந்தத் தகவலை பண்டாரவாடை கிளைக்குத் தெரிவித்தனர்.

இறைவனின் உதவி அறியாப்புறத்தில் இருந்து வரும் என்ற இறை வசனத்திற்கேற்ப எவ்வித இடையூறும் இன்றி, ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கு அனுமதி தந்த அந்த ஊர் ஜமாஅத் நிர்வாகிகளுக்காக நம் மக்கள் துவா செய்தனர்.

உடனடியாக காலை 10.45 மணிக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அந்த மூதாட்டியின் ஜனாஸாவை ஏற்றிச் சென்று சரியாக 11.30 மணிக்கு குறிச்சிமலை சென்றடைந்தனர். அதே பள்ளிவாசலில் நபிவழிப்படி நம் சகோதரர்கள் அந்த ஜனாஸாவிற்குத் தொழுகை நடத்தி அந்த மூதாட்டிக்காக தங்கள் கைகளால் குழி வெட்டி கடைசிவரை உடனிருந்து ஜனாஸாவை அடக்கம் செய்து முடித்தனர். சரியாக 12.40 மணியளவில் அந்த மூதாட்டியின் நல்லடக்கம் முடிந்தது.

ஜனாஸாவை அடக்க செய்ய வேண்டும் என்று சொன்னவுடன் எவ்வித தயக்கமும் காட்டாமல் உடனடியாக அனுமதி தந்த குறிச்சிமலை ஜமாஅத்தார்களுக்கு நம் மக்கள் நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்தனர். அந்த மக்களுக்கு அல்லாஹ் அருள் செய்வானாக!

எதையும் பார்க்காமல் ஜனாஸாவை அடக்கம் செய்ய அனுமதி தந்த இவர்கள் எங்கே, ஆதரவற்ற ஜனாஸாவை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த அவர்கள் எங்கே! அனைவரும் இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள். அவன் கடுமையாக தண்டிக்கக் கூடியவன்.

எந்த நிர்வாகிகள் ஆதரவற்ற ஒரு மூதாட்டியின் ஜனாஸாவை அடக்கம் செய்ய விடாமல் மறுத்தார்களோ, இறைவன் நாடினால் அவர்களுக்கும் கூட நாளைக்கு அந்த நிலை ஏற்படலாம். அல்லாஹ்விற்கு அஞ்சிக் கொள்ள வேண்டும்.

ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதே. கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகளைத் தவிர வேறில்லை.
அல்குர்ஆன் 3:185

பண்டாரவாடையைச் சேர்ந்த சகோதரர்கள் தங்கள் ஊர் நிர்வாகிகளாக காட்டுமிராண்டிகளையும் மனித மிருகங்களையும் எப்படி தேர்ந்தெடுத்தார்கள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும், மனிதாபிமானம் கூட இல்லாத இந்தக் கொடியவர்களை தக்க முரையில் தட்டிக் கேட்பார்கள் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.