மேலப்பாளையத்தில் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாணவரணி சார்பில் அரசு பொதுத் தேர்வைச் சந்திக்கவுள்ள எஸ்.எஸ்.எல்.சி மற்றும் +2 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலப்பாளையம் மாநகராட்சி திருமண மண்டபத்தில் 09.01.2011 ஞாயிறு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவர் எஸ். யூசுப் அலீ தலைமை தாங்கினார். மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் எஸ். அப்பாஸ் அலீ துவக்கவுரை நிகழ்த்தினார். நிறுவனத் தலைவர் பி. ஜைனுல் ஆபிதீன் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து, கல்வியின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார்.

பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி? பயமின்றி தேர்வு எழுதுவது எப்படி? உரிய நேரத்தில் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் எழுதுவது எப்படி? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு சிறந்த கல்வியாளர்கள் விளக்கம் அளித்தனர்.

காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை எஸ்.எஸ்.எல்.சி. மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. கல்வியாளர்கள் திரு. அந்தோணி சேவியர் கணிதப் பாடம் குறித்தும், திரு. பீட்டர் பாஸ்கரன் ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடத்திலும், திரு. நேவீஸ் சமூக அறிவியல் பாடத்திலும் உள்ள நுணுக்கங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை +2 மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. கல்வியாளர்கள் ஜோசப் சேவியர் ராஜதுரை கணிதப் பாடத்திலும், திரு. சீனிவாசன் இயற்பியல் பாடத்திலும், ஜனாப். முகம்மது முத்து மீறான் வேதியியல் பாடத்திலும், திரு. ஸ்டார் பிரிஸ் வணிகவியல் பாடத்திலும் உள்ள நுணுக்கங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவ, மாணவியருக்கு முக்கிய வினாக்களின் தொகுப்பு புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மேலாண்மைக் குழுத் தலைவர் எம். ஷம்சுல்லுஹா, மேலாண்மைக் குழு உறுப்பினர் எம்.எஸ். சுலைமான், எஸ்.ஒய். செய்யது மஸ்ஊது யூசுபி, நெல்லை மாவட்டச் செயலாளர் செய்யதலீ, மருத்துவ சேவை அணிச் செயலாளர் முஹைதீன், தொண்டரணிச் செயலாளர் செய்யது, மாணவரணிச் செயலாளர் அன்சாரி, மேலப்பாளையம் நகரத் தலைவர் ரோஷன், செயலாளர் சிராஜ், பொருளாளர் நிவாஸ், நகர மாணவரணி செயலாளர் இர்ஷாத் அஹ்மது ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் நேஷனல் ஷாகுல் நன்றியுரை நிகழ்த்தினார்.