மேலப்பாளையத்தில் மருத்துவ முகாம்

19.12.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் வளாகத்தில் கலைஞர் காப்பீட்டுத் திட்ட இலவச அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத், நெல்லை ஷிபா மருத்துவமனையுடன் இணைந்து இம்முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில மேலாண்மைக் குழுத் தலைவர் எம். ஷம்சுல்லுஹா இம்முகாமுக்குத் தலைமை தாங்கினார். நெல்லை ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் முஹம்மது ஷாபின் முகாமைத் துவக்கி வைத்தார்.

பொது அறுவை சிகிச்சை நிபுணர் வரதராஜன், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் திருவாசக மணி, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் செந்தில்பாபு, காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் கணபதி, எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ராஜவேல், பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் செந்தில் சிவமுத்து மற்றும் நெல்லை ஷிபா மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டு இம்முகாமில் சிகிச்சையளித்தனர்.

தமிழக அரசு அறிவித்துள்ள ஏழைகளுக்கான உயிர் காக்கும் உயர் சிகிச்சைத் திட்டமான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதயம் மற்றும் நெஞ்சக நோய், சிறுநீரகம், எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று, தைராய்டு, பித்தப்பை, கல்லீரல் நோய்கள், காது மூக்கு தொண்டை நோய்கள், உதடு பிளவு சரி செய்தல், பிறவிக் குறைபாடுகள், புற்று நோய், சர்க்கரை நோய் பாதிப்பால் விரல், கால் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கான நோயாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இம்முகாமில் சுமார் 400 நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சுமார் 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட நோயாளிகளுக்கு பரிசோதனைக்குப் பின் நெல்லை ஷிபா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டத் தலைவர் யூசுப் அலீ, செயலாளர்  செய்யதலீ, பொருளாளர் ஷாகுல், மருத்துவ சேவை அணிச் செயலாளர் முகைதீன், தொண்டரணிச் செயலாளர் செய்யது, மேலப்பாளையம் நகரத் தலைவர் ரோஷன், செயலாளர் சிராஜ், பொருளாளர் நிவாஸ், மஸ்ஜிதுர்ரஹ்மான் பொருளாளர் ஸய்யது இப்ராஹீம், கிரஸன்ட் மருத்துவமனை நிர்வாகி அப்துல் மஜீத் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஷிபா மருத்துவமனை கலைஞர் காப்பீட்டுத் திட்ட அலுவலர் சுதர்ஸன் ஐசக் முகாமுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.