மேலப்பாளையத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக வாரந்தோறும் நடந்து வரும் இலவச மருத்துவ முகாம்!

melappalayam_maruthuva_mugam_1melappalayam_maruthuva_mugam_2மேலப்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் சார்பில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த மருத்துவ முகாமில் நெல்லை மாவட்டத்தின் பிரபல குழந்தைகள் நல மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சையளிக்கின்றனர். இம்முகாம் துவங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, 10வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மஸ்ஜிதுர்ரஹ்மான் நிர்வாகக் கமிட்டிச் செயலாளர் எம்.எஸ். சுலைமான் முன்னிலை வகித்தார். மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் மாநில மேலாண்மைக்குழுத் தலைவர் எம். ஷம்சுல்லுஹா தலைமை வகித்து, சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது:

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தமிழகமெங்கும் பல்வேறு சமூக நலப் பணிகளைச் செய்து வருகின்றது. பல்வேறு மருத்துவ முகாம்கள், இரத்த தானச் சேவைகள், ஆம்புலன்ஸ் சேவைகள், ஏழைகளுக்கான மருத்துவ உதவிகள், கல்வி உதவிகள் போன்றவற்றைச் செய்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக மேலப்பாளைத்தில் வாரந்தோறும் குழந்தைகள் நல மருத்துவ முகாம் நடத்தி வருகின்றது. இது தவிர தாய் சேய் நல மருத்துவ முகாம், பொதுநல மருத்துவ முகாம், நீரிழிவு நோய் மருத்துவ முகாம், காது மூக்கு தொண்டை மருத்துவ முகாம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து கண் சிகிச்சை முகாம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறோம்.

ஹஜ் பெருநாள் தினத்தில் முஸ்லிம்களால் அறுத்துப் பலியிடப்படும் ஆடு மாடுகளின் தோல்களைப் பெற்று, அவற்றின் மூலம் கிடைக்கும் வருவாயினால் இந்த சேவைகளைச் செய்து வருகிறோம்.

நெல்லை மாவட்டத்தின் பிரபல மருத்துவர்கள் பலரும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு சிகிச்சையளிக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் தங்கள் குடும்பத்தினருடன் பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதைத் தியாகம் செய்து விட்டு இது போன்ற சேவைகளைச் செய்து வரும் மருத்துவ நிபுணர்களின் பணி மிகவும் பாராட்டுக்குறியதாகும். மருத்துவர்களின் இந்தச் சேவைகளைக் கவுரவிக்கும் விதமாக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது.

இவ்வாறு அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு விழா சந்திப்பு நிகழ்ச்சியில், மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் நாகராஜன், மருத்துவ நிபுணர்கள் முஹம்மது தம்பி, நம்பியப்பன், வைகுண்டராமன், மனகாவலம் பெருமாள், சீதாலட்சுமி, ஹஸன் இப்ராஹீம், சவுந்தர்ராஜன், ஜவஹர் ராஜ்குமார், திருமலைக் கொழுந்து, ராஜேஷ், பால்ராஜ், சுரேஷ் குமார் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மருத்துவ நிபுணர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.