மேலப்பாளையத்தில் சமூகத் தீமைகள் ஒழிப்புப் பொதுக்கூட்டம்

15.05.2010 வெள்ளிக்கிழமை அன்று மேலப்பாளையம் பஜார் திடலில் சமூகத் தீமைகள் ஒழிப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஏ. செய்யது அலீ தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழு உறுப்பினர் எஸ். அப்பாஸ் அலீ  “வீண் விரையமும் இறை விசாரணையும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மாநில மேலாண்மைக் குழுத் தலைவர் எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி “இஸ்லாம் கூறும் எளிய திருமணம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில், திருமணத்தின் போது நடைபெறும் வரதட்சணைக் கொடுமை, பல்சுவை விருந்துகள், வாண வேடிக்கைகள், பந்தல் அலங்காரங்கள், வீண் விரையங்கள் ஆகியவற்றைக் கண்டித்துப் பேசினார்.

இஸ்லாம் திருமணத்தை மிக எளிமையாக ஆக்கி வைத்துள்ளது. திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம் என்று கூறுகின்றது. இதுபோன்ற எளிமையான திருமணத்தை இதுபோன்ற செலவுகள் மூலம் மிகச் சிரமமான ஒன்றாக ஆக்கி விட்டதாலும் வரதட்சணைக் கொடுமையினாலும் பெண்களுக்கு மணமகன் கிடைப்பது அரிதாகி விடுகின்றது.

இதனால் பெண் சிசுக் கொலைகள், கருவிலேயே பெண் குழந்தைகளை அழித்தல் போன்ற கொடூரமான காரியங்கள் நடைபெறுகின்றன. எனவே வரதட்சணை மற்றும் ஆடம்பரத் திருமணங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது. அதற்கு எதிராக 25 ஆண்டுகளாகப் போராடி வருகின்றது இதனால் வரதட்சணை வாங்காமல், திருக்குர்ஆன் கூறிய அடிப்படையில் பெண்ணுக்கு மஹர் எனும் மணக்கொடை கொடுத்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மணமுடித்துள்ளனர் என்று ஷம்சுல்லுஹா ரஹ்மானி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் எஸ்.ஒய். செய்யது மஸ்ஊது யூசுபி, மேலப்பாளையம் நகரத் தலைவர் ரோஷன், செயலாளர் கே.ஏ. அஷ்ரப், பொருளாளர் நிவாஸ் ஆகியோர் உட்பட ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.