முஸ்லிம்களைச் சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவின் கொட்டம் அடக்கப்படும்: – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எச்சரிக்கை!

முஸ்லிம்களைச் சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவின் கொட்டம் அடக்கப்படும்:
– தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எச்சரிக்கை!

இந்து சகோதரர்கள் புனிதராக நினைக்கும் ஆண்டாள் குறித்து சர்ச்சையான கருத்தைப் பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்துப் பேசியுள்ள பா.ஜ.கவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா என்பவர் முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கக் கூடிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் இழிவுபடுத்தும் விதமாகப் பேசி முஸ்லிம்களை சீண்டியுள்ளார்.

எச்.ராஜாவின் கருத்திற்குத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனத்தைப் பதிவு செய்வதோடு, அவருக்கு கடும் எச்சரிக்கையும் விடுக்கின்றது.

தங்களால் புனிதமாக மதிக்கப்படுபவரை யாரேனும் விமர்சனம் செய்தால் அதைக் கண்டிக்க அவர்களுக்கு உரிமை உண்டு.

ஆனால் இதைக் கண்டிக்கும் சாக்கில் நபிகள் நாயகத்தை உன்னால் பேச முடியுமா?, நபிகள் நாயகத்தின் மனைவிமார்களை உன்னால் பேச முடியுமா? என்று இஸ்லாம் மார்க்கத்தை வம்புக்கு இழுத்துள்ளார்.

நபிகள் நாயகத்தையும் அவர்களின் குடும்பத்தினரையும் வம்புக்கிழுக்கும் வகையில் பேசிய எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், இனிமேல் எச். ராஜா இது போல் நாக்குத்தடித்து பேசுவாரேயானால் முஸ்லிம் சமுதாயம் கடுமையாக எதிர்வினையாற்ற வேண்டி வரும் என்று எச்சரிக்கும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வீரியமிக்க போராட்டங்களை நடத்த உள்ளது.

நபிகள் நாயகம் பற்றித் தவறாகப் பேசியதோடு மட்டுமல்லாமல், இந்துக்களின் தலையை முஸ்லிம்கள் வெட்டியிருப்பார்கள் என இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துக்களைத் தூண்டும் வகையிலும் நச்சுக் கருத்தை வெளியிட்டு அண்ணன் தம்பிகளாகவும், மாமன் மச்சான்களாகவும் பழகும் இந்து முஸ்லிம்கள் மத்தியில் கலவரத்தை உண்டாக்க சதி செய்யும் எச்.ராஜாவின் கொட்டம் அடக்கப்படும் என்று எச்சரிக்கிறோம்

இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக,
பொதுச்செயலாளர்
எம்.எஸ்.சையது இப்ராஹீம்