முஸாபர் நகர் வன்முறை அரசியல் சதிக்குப் பலியான முஸ்லிம்கள்

Muzaffarnagar 01

Muzaffarnagar 02

Muzaffarnagar 03உத்தரபிரதேச மாநிலம், முஸாபர் நகர் என்ற மாவட்டத்தில் கவால் என்ற கிராமம் இருக்கிறது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஷானவாஸ் என்ற முஸ்லிம் பெயர் தாங்கி ஒருவன் முஸ்லிமல்லாத ஒரு பெண்ணை ஆகஸ்டு மாதம் 27-ம் தேதி கேலி செய்தானாம்.

சம்மந்தப்பட்ட பெண்ணோ பெண்ணின் குடும்பத்தினரோ காவல் நிலையத்தில் புகார் கொடுத்து அவனைக் கைது செய்தால் அத்தோடு முடிந்திருக்க வேண்டிய பிரச்சனை.

ஆனால் கேலி செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்களான சச்சின், சவுரவ் இன்னும் பலர் சேர்ந்து கொண்டு ஷானவாஸை அடித்தே கொன்று விட்டனர்.

இந்தக் கொலை விவரம் தெரிந்தவுடன் உ.பி.காவல்துறை சச்சின், சவுரவ் ஆகியோரைக் கைது செய்து, சிறையில் தள்ளி இருந்தால் முஸாபர் நகரில் மதக் கலவரமே நடந்திருக்காது. ஆனால் உ.பி மாநில போலிசார் இவ்வாறு நடந்து கொள்ளவில்லை. இதனால் ஷானவாஸின் உறவினர்கள் கொந்தளித்து இந்தக் கொலைக்கு பழிக்கு பழி வாங்க வேண்டும் என்று கருதி சச்சின், சவுரவ் ஆகியோரை ஷானவாஸின் உறவினர்கள் சுட்டுக் கொன்றுவிட்டனர்.

இதற்குப் பிறகு விழித்துக் கொண்ட காவல்துறை இந்த 3 கொலைகள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்த பிரச்சினை முழுக்க முழுக்க இரண்டு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. இந்த பிரச்சினையில் பி.ஜே.பி உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் தலையிடாமல் இருந்திருந்தால் பிரச்சினை இந்த அளவுக்கு முற்றியிருக்காது.

சங்பரிவார் அமைப்புகள் இதில் தலையிட்டு பிரச்சினையைப் பெரிதாக்குவதற்காக நக்லா மண்டர் என்ற பகுதியில் ஒரு கூட்டம் கூட்டினர். கொலைகள் நடந்து 10 நாட்களுக்குப் பிறகு கூட்டப்பட்ட இந்தக் கூட்டத்தில் கவால் கிராமத்தில் உள்ள இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்படாத முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும். முஸ்லிம்களின் வீடுகளைத் தாக்க வேண்டும் என்று முடிவு செய்து பயங்கர ஆயுதங்களோடு தங்கள் தாக்குதல் படலத்தை ஆரம்பித்தார்கள்.

இதனால் அலறிப் போன முஸ்லிம்கள் கவால் கிராமத்தை விட்டு தப்பித்தோம். பிழைத்தோம் என்று ஒடினார்கள். இவ்வாறு தப்பி ஒடிய முஸ்லிம்கள் முஸாபர் நகர் மற்றும் அருகில் உள்ள பக்பட் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல ஊர்களில் போய் தஞ்சம் அடைய-இந்த இரு மாவட்டங்களிலும் கலவரத்தை விரிவுபடுத்திய சங்பரிவார் நர வேட்டை நடத்த ஆரம்பித்தது.

சங்பரிவார்-கட்டியமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். மதக்கலவரத்தை எப்படி ஆரம்பிக்க வேண்டும், லத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களை கலவரத்தின் போது எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அவர்களுக்கு ஷாகா பயிற்சி மூலம் கற்றுத் தரப்படுகிறது. அந்தப் பயிற்சியை முஸாபர் நகர் கலவரத்தில் அவர்கள் கனகச்சிதமாக பயன்படுத்தினார்கள்.

இதனால் கலவரத்தின் போது சுமார் 40 முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் படுகாயமடைந்தனர். உத்தரபிரதேசத்தில் 47 பி.ஜே.பி, எம்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் ஹீகும் சிங், சங்கீத் சிங் சோம், சுரேஷ்ரானா, கன்வர் பாரதேண்டு ஆகிய 4 எம்.எல்.ஏக்கள் பயங்கர கிரிமினல் பின்னணி உள்ளவர்கள். இந்த நான்கு பி.ஜே.பி. எம்.எல்.ஏக்கள் இந்த மதக் கலவரத்தை முன்னின்று நடத்தினர்.

பாரதீய கிஸான் யூனியன் என்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் விவசாய அமைப்பாகும். இந்த அமைப்பின் தலைவர்களான தியாகத் மற்றும் நரேஷ் தியாகத் ஆகியோர் தங்கள் படை, பாpவாரங்களைத் திரட்டி, சேதங்களை அதிகப்படுத்தினர்.

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏவான கரேந்திரா மாலிக் என்பவர் சங் பரிவாரத்தோடு சேர்ந்து கொண்டு கலவர நெருப்பில் பெட்ரோல் ஊற்றினார். சட்டம் ஒழுங்கு முழுக்க முழுக்க மாநில அரசைச் சார்ந்தது. மாநில அரசின் கீழ்தான் காவல்துறையும், உளவுத்துறை அமைப்புகளும் உள்ளன.

உ.பி.மாநில பா.ஜ.க பொறுப்பாளாராக மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த அமீத்ஷா இருக்கிறார். சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் குஜராத்திற்குள் இவரை நுழையக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடை போட்டுவிட்டது. அந்த அமித்ஷா தான் முஸாபர் நகர் கலவரத்திற்கு திட்டம் தீட்டித் தந்திருக்கிறார். இந்த உண்மை மாநில அரசுக்கு நன்கு தெரியும். ஆனால் கலவரத்திற்கு முன்பு கலவரத்தைத் தடுக்கும் வகையில் மாநில அரசு எந்த முன்னச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. கலவரம் ஆரம்பித்த பிறகும் அது சும்மா தான் இருந்தது. 48 பேர் செத்த பிறகுதான் அகிலேஷ் யாதவ் அரசு நடவடிக்கை எடுக்கவே ஆரம்பித்தது. அதன் பிறகு கலவர நெருப்பு அணைய ஆரம்பித்தது.

மாநில அரசு நினைத்திருந்தால் பிரச்சினையை முளையிலேயே கிள்ளி எறிந்து மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுத்து, கலவரம் நடக்காமல் தடுத்திருக்கலாம். அகிலேஷ் யாதவ் அதைச் செய்யவில்லை. கலவரம் நடந்து நிறைய முஸ்லிம்கள் சாக வேண்டும். பலர் படுகாயமடைய வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு அரசின் சார்பில் இழப்பீடு கொடுக்க வேண்டும். அப்படி இழப்பீடு கொடுக்கும் போது முஸ்லிம்களின் ஒட்டுகள் சென்ற தேர்தலின் போது விழுந்தது போல் வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போதும் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவாக விழும் என்பது அக்கட்சியின் கணிப்பு. சமாஜ்வாடியின் இந்த போக்கு முஸ்லிம்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.

குறிப்பாக சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான அசம்கானுக்குக் கூட அது பிடிக்கவில்லை. அதனால் சமாஜ்வாடி கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளமல் இவர் புறக்கணித்து விட்டார். கலவரத்தை ஆரம்பத்திலேயே தடுக்கத் தவறிய முதல்வர் அகிலேஷ் யாதவ் எல்லாம் முடிந்த பிறகு, மாவட்ட காவல்துறை அதிகாரிகளை மாற்றினர். கூடுதல் உள்துறைச் செயலாளரை மாற்றினார்.

இந்தக் கண்துடைப்பு நடவடிக்கையின் மூலம் போன உயிர் திரும்பி வருமா? என்பதே முஸ்லிம்களின் கேள்வி உ.பி.யில் 20 சதவீத முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இவர்களின் வாக்கு சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவாக விழ வேண்டும் என்பதற்காகவே காவல்துறை அதிகாரிகளை மாற்றுவது, இறந்து போன முஸ்லிம்களுக்கு இழப்பீடு தருவது போன்ற செயல்களை முதல்வர் அகிலேஷ் யாதவ் செய்துள்ளார்.

உ.பியில் இந்துத்வா ஒட்டு வங்கியை உருவாக்கி, ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக பா.ஜ.க இந்தக் கலவரத்தை திட்டமிட்டு நடத்தியது. ஆக மொத்ததில் முஸ்லிம்களின் உயிர்களை அரசியல்வாதிகள் அரசியல் லாபத்திற்காக பகடைக்காயாக ஆக்கியிருக்கிறார்கள். இந்தக் கழிசடை அரசியலை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.