முத்தலாக்(?) மசோதா: – முஸ்லிம்களை தண்டிக்கும் மத்திய அரசு: – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்!

முத்தலாக்(?) மசோதா:
– முஸ்லிம்களை தண்டிக்கும் மத்திய அரசு:
– தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்!

முத்தலாக் மூலம் விவாகரத்து செய்வோருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.

முஸ்லிம்களை சீண்டிப் பார்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பா.ஜ.க. அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது.

மனைவியை விவாகரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்ட கணவன்மார்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் இரண்டு வாய்ப்புக்களை பயன்படுத்திய பின்புகூட கணவன் மனைவி இருவரும் விரும்பினால் சேர்ந்து வாழலாம். மூன்றாவது வாய்ப்பையும் பயன்படுத்தி விட்டால் மட்டுமே தம்பதியருக்கு இடையில் நிரந்தர விவாகரத்து ஏற்பட்டு இருவரும் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்படும். இதுதான் பெண்களை விவாகரத்து செய்ய இஸ்லாம் காட்டும் நெறியாகும்.

இஸ்லாம் காட்டிய இந்த நெறிக்கு மாற்றமாக ஒரே நேரத்தில் தலாக் தலாக் தலாக் என்று சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் சட்டம் இஸ்லாத்தில் இல்லாத ஒன்றாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் தலாக் தலாக் என்று எத்தனை முறை சொன்னாலும் அது ஒரே தடவை சொன்னதாகத்தான் கருதப்பட்டது.

இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை நீக்கும் முடிவு வரவேற்கத்தக்கது என்றாலும் இதற்காக இயற்றப்பட்டவுள்ள சட்டம் அறிவீனமானதும் சட்ட விதிகளுக்கு முரணானதுமாகும்.

முத்தலாக் என்று ஒருவர் சொன்னால் அது ஒரு தலாக் என்றே கருதப்படும் என்று சட்டம் இயற்றுவதுதான் சரியான நடைமுறையாகும்.

முத்தலாக் செல்லாது என்று சட்டம் இயற்றுவதற்குப் பதிலாக, முத்தலாக் சொன்னால் சிறைத் தண்டனை – அபராதம் என்றெல்லாம் சட்டம் இயற்றுவதை ஏற்க முடியாது.

கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டால் என்னை முத்தலாக் சொன்னார் எனக் கூறி கணவன்மார்கள் பழிவாங்கப்பட மட்டுமே இச்சட்டம் உதவும்.

முத்தலாக் கூடாது என்ற போர்வையில் முஸ்லிம் சமுதாயத்தின் குடும்பத்துக்குள் குழப்பம் விளைவிப்பதையும், பொய் புகாரில் சிறையில் தள்ள வழிவகுக்க சதி செய்வதையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது.

இது சட்டமாக்கப்பட்டால் வரலாறு காணாத சமுதாயத்தின் எதிர்ப்பை சந்திக்க நேரும் என்றும் மத்திய அரசை தவ்ஹீத் ஜமாஅத் எச்சரிக்கிறது.

இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக,
பொதுச் செயலாளர்
எம்.எஸ்.சையது இப்ராஹீம்