முத்தலாக் தடை மசோதா – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

முத்தலாக் தடை மசோதா – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

இஸ்லாமியர்களைக் குறிவைத்து மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள விவகாரம் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும் போது அதுகுறித்தெல்லாம் நடவடிக்கை மேற்கொள்ளாமல்

நாட்டின் வளர்ச்சிக்கு எந்தப் பயனையும் தந்திடாத முத்தலாக் விஷயத்தைக் கையில் எடுத்துக் கொண்டு இஸ்லாமிய சமுதாயத்தை
பழிவாங்கும் வேலையைச் செய்துள்ளது மத்திய அரசு.

முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றத்திற்காக அவையைக் கூட்டி விவாதங்கள் நடத்தியதில் மக்கள் பணம் பல ஆயிரம் கோடி ரூபாய்களை இதன்மூலம் வீணடித்துள்ளார்கள்.

முத்தலாக், இஸ்லாமியப் பெண்களை பாதிக்கின்றது என்று சொல்லும் இவர்கள் முத்தலாக் கொடுக்கும் ஆண்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையையும் அறிவித்துள்ளார்கள்.

இவர்கள் கூறும் முத்தலாக் என்ற வழிமுறையை இவர்களால் திருக்குர்ஆனில் இருந்தோ ஹதீஸில் இருந்தோ காட்டி விட முடியுமா? முத்தலாக் என்ற முறை இஸ்லாத்தில் கிடையவே கிடையாது. ஒரு தவனையில் மூன்று முறை அல்ல! மூவாயிரம் முறை தலாக் சொன்னாலும் அது ஒரு தலாக்காகவே கணக்கில் கொள்ளப்பட்டும்.

இஸ்லாம் கூறும் மூன்று தவனை தலாக் நடைமுறையில் பெண்களுக்கு மீண்டும் வாழ்க்கை கிடைக்க அதிக வாய்ப்புகள் உண்டு, ஆனால் மத்திய அரசு கொண்டு வரும் முத்தலாக் தடைச் சட்டத்தில் ஆணின் வாழ்க்கையும் கெட்டு பெண்ணின் வாழ்க்கையும் நாசமாகிப் போய்விடும். முத்தலாக் கொடுத்தவனை 3 ஆண்டுகள் சிறைக்கு அனுப்பினால் அவர்களின் குடும்பமே நடுத்தெருவிற்கு வந்து விடும்.

இத்தனையும் தெரிந்தே இஸ்லாமிய சமுதாயத்தை குறிவைத்து முத்தலாக் தடை மசோதாவை நிறைவேற்றியுள்ளது மத்திய அரசு. மசோதாவை எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு நாடகத்தை நடத்தி அதிமுகவும் அதற்குத் துணை போயுள்ளது. அதிமுகவின் இதுபோன்ற செயல்பாடுகள் இஸ்லாமிய சமுதாயத்தில் கடுமையான வெறுப்பை உண்டாக்கும் என்பதை அதிமுக தலைமை உணர வேண்டும்.

இஸ்லாம் கூறும் தலாக் சட்டம் இஸ்லாமியப் பெண்களுக்கு மட்டுமல்ல! அனைத்துச் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் வாழ்வளிக்கும் அற்புதச் சட்டம் என்பதே உண்மை.

இஸ்லாமிய சமுதாயத்தை பழிவாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த முத்தலாக் தடைச் சட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.

ஊடக தொடர்புக்கு: 9789030302

இப்படிக்கு
இ.முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்