முதல் கட்ட மருத்துவ கவுன்சிலிங் முடிந்த்தது, முஸ்லீம்களுக்கு இன்னும் இடம் உள்ளது

doctorமூன்று நாள் மருத்துவக் கவுன்சிலிங்கின் முடிவில், 594 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில், ஓ.சி., பிரிவில் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. தமிழகத்தில் 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ்., இடங்கள், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ்., இடங்கள், நான்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 283 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 17 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 900 பி.டி.எஸ்., இடங்களை நிரப்புவதற்கான கவுன்சிலிங் 6ம் தேதி முதல் நடந்து வருகிறது.

முதல் நாளான 6ம் தேதி, தரவரிசையில் முதல் 10 இடங்களை பெற்றவர்களுக்கு, சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டது. மேலும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் மூன்று பேர், உடல் ஊனமுற்றோர் பிரிவில் 13 பேர், விளையாட்டு வீரர்கள் பிரிவில் மூன்று பேருக்கும் 6ம் தேதி இடங்கள் ஒதுக்கப்பட்டன.

நேற்று முன்தினம் நடந்த கவுன்சிலிங்கில் தரவரிசைப் பட்டியலில் 11 முதல் 300 வரை “ரேங்க்’ பெற்ற 290 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. நேற்று தரவரிசைப் பட்டியலில் 301 முதல் 600 வரை “ரேங்க்’ பெற்றவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டனர். நேற்றைய கவுன்சிலிங்கில், மொத்தம் 275 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் சிலர் தனியார் மருத்துவக் கல்லூரிகளை தேர்ந்தெடுத்துள்ளனர். தரவரிசைப் பட்டியலில் 547வது “ரேங்க்’ பெற்ற பூர்ணிமா ஆண்டாள், 600வது “ரேங்க்’ பெற்ற நமச்சிவாயம் ஆகிய இருவர் சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ்., படிப்பை தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்கள் இருவரும் ஓ.சி., பிரிவை சேர்ந்தவர்கள்.

நேற்றைய கவுன்சிலிங்கின் முடிவில், 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில், ஓ.சி., பிரிவில் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. தற்போது 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பி.சி., – பி.சி.எம்(முஸ்லீம்கள்), உள்ளிட்ட இதர பிரிவுகளில் 817 இடங்கள் காலியாக உள்ளன.
சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் மூன்று இடங்கள் நிரம்பியுள்ளன; 83 இடங்கள் காலியாக உள்ளன. நான்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 273 இடங்களும், 17 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 900 இடங்களும் காலியாக உள்ளன. இன்று தரவரிசைப் பட்டியலில், 601 முதல் 900 வரை “ரேங்க்’ பெற்றவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

– TNTJ மாணவர் அணி