மாநிலத் தலைமை நடத்திய ஒரு நாள் இரத்த தான பயிற்சி முகாம் – அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பொறுப்பாளர்கள் பங்கேற்பு

இறைவனின் மாபெரும் கிருபையால் கடந்த 6 ஆண்டுகளாக இரத்ததான சேவையில் முன்னிலை வகித்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடந்த வருடத்தில் தமிழகம் முழுவதும் 120 க்கும் அதிகமான இரத்ததான முகாம்களை நடத்தியது. அதிலே கலந்து கொண்டுகிட்டத்தட்ட ஒன்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் அதிலே இரத்தம் கொடுத்து தங்களின் பங்களிப்பைச் செய்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் இந்த வீரியமான சமுதாயப்பணிகளைக் கண்டு வியப்படைந்த தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்து அவர்களுக்கு தன்னார்வ இரத்ததான முகாம்கள் குறித்து ஒரு பயிற்சி முகாம் நடத்த விரும்புவதாகக் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இன்று ( 26/07/2011)  சென்னை எழும்பூர் பாண்டியன் ஹோட்டலில் ஒரு மாபெரும் பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அதன்படி அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஒரு மாவட்டத்திற்கு, ஒரு மாவட்ட நிர்வாகி மற்றும் அந்த மாவட்ட மருத்துவ அணி என இருவர் வீதம் அழைக்கப்பட்டிருந்தனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் மட்டும் அனைத்துக் கிளைகளில் இருந்தும் ஒவ்வொரு கிளையில் இருந்தும் ஒரு நிர்வாகி மற்றும் ஒரு மருத்துவரணி என இருவர் வீதம் அழைக்கப்பட்டிருந்தனர்.

சரியாக காலை 10.30 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. மாநிலப்பொதுச் செயலாளர் கோவை ரஹ்மத்துல்லா தலைமையேற்று நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் சகோ.சுப்புலட்சுமி அவர்கள் இரத்ததானம் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து இரத்ததானம் தொடர்பாக நம் சகோதரர்கள் எழுப்பிய அனைத்துக் கேள்விகளுக்கும் பொருமையாகவும் தெளிவாகவும் விளக்கமளித்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய சகோ.பீ.ஜைனுல் ஆபிதீன், இஸ்லாத்திற்கும் இரத்த தானத்திற்கும் அன்றைக்கு என்ன ஏன் தொடர்பு இல்லாமல் போனது, அதற்கான காரனம் என்ன? என்று தெளிவாக விளக்கினார்.

அதேநேரம் இன்றைக்கு நம் சமுதாயம் மற்ற மக்களை ஒப்பிடும் போது எண்ணிக்கை அளவில் சிறுபாண்மையினராக இருந்தாலும், இன்றைக்கு இரத்ததானத்தில் எல்லோரையும் விட அதிக பங்களிப்பு செய்வதை எடுத்துரைத்தார்.

அதுமட்டுமின்றி மார்க்க ரீதியாக பார்க்கும் போது இரத்த தானம் என்பது ஒரு நிர்பந்தமே என்பதைத் தெளிவாக விளக்கினார். வரக்கூடிய காலங்களில் இதில் நம் பங்களிப்பு மிக அதிகமாக வேண்டும் என்றும் தன்னுடைய உரையில் தெரிவித்தார்.

முதல் அமர்விற்கு பிறகு சரியாக 12.30 மணிக்கு இரண்டாவது அமர்வு துவங்கியது. இரண்டாவது அமர்வில்
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் ஆலோசகராக இருக்கும் சகோ.சம்பத் அவர்கள் புரொஜெக்டர் மூலம் இரத்ததானம் சம்பந்தமான பலவகையான நுனுக்கங்கள், ஆராய்வு விசயங்கள் தெளிவாக விளக்கப்பட்டது. 132 முறை இரத்ததானம் செய்த சமூக ஆர்வலர் தாமஸ் மனோகரன் அவர்களும் இந்த அமர்வில் கலந்து கொண்டு தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்தார்.

மூன்றாம் அமர்வு சரியாக 2.30 க்கு துவங்கியது. இந்த அமர்வில் பங்கேற்ற தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் ரத்தபாதுகாப்புத் துறை இணை இயக்குனர் டாக்டர் செல்வராஜ் அவர்கள் கலந்து கொண்டு நம் சகோதரர்களின் கேள்விகளுக்கு தெளிவான விளக்கமளித்தார்.

இரத்ததான முகாம்களின் நடைபெறும் நிர்வாகம் சம்பந்தமாக குறைகளுக்கு விளக்கமளித்த செல்வராஜ் அவர்கள் நம் சகோதரர்கள் தெரிவித்த பலவிதமான குறைபாடுகளைக் களைவதாக உறுதியளித்தார்.

சென்ற வருடம் நடத்தப்பட்ட இந்த 120 இரத்ததான முகாம்களை இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் 200க்கும் மேல் அதிகப்படுத்தி முகாம்களை நடத்த திட்டமிட்டுருப்பதாக நம் மாநில நிர்வாகிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து விருந்தினர்களுக்கும் திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாம் சம்பந்தமான நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இறைவனுக்கு நன்றி சொல்லி பயிற்சி முகாம் இனிதே நிறைவுற்றது.