மாநகராட்சியை கண்டித்து மேலப்பாளையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

மேலப்பாளையத்தில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு, நகரில் பல பகுதிகளுக்கும் மாதக் கணக்கில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஆங்காங்கே காலிக் குடங்களுடன் மக்கள் திரண்டு போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

ஆனால் இதை மாநகராட்சி நிர்வாகம் கடுகளவு கூடக் கண்டு கொள்ளவில்லை. மக்களுக்குக் குடிநீர் வழங்காமல் வஞ்சித்து வரும் நெல்லை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மேலப்பாளையத்தில் சீரான குடிநீர் வினியோகம் செய்யக் கோரியும், பழுதடைந்த குழாய்களை மாற்றி, அவற்றில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்கக் கோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மேலப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 17.09.10 வெள்ளிக்கிழமையன்று மாலை 4 மணிக்கு மேலப்பாளையம் பஜார் திடலில் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் நெல்லை மாவட்டத் தலைவர் யூசுப் அலீ தலைமை தாங்கினார்.

மாவட்டச் செயலாளர் கே.ஏ. செய்யது அலீ, பொருளாளர் எஸ்.எம். ஷாகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மேலாண்மைக் குழுத் தலைவர் எம். ஷம்சுல்லுஹா கண்டன உரை நிகழ்த்தினார்.

ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர்.