மனிதர்களால் கொல்ல முடியாத ஒரே தலைவர் நபிகளார்!

மனிதர்களால் கொல்ல முடியாத ஒரே தலைவர் நபிகளார் :

இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புக்கள்!

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வெள்ளை மாளிகைக்கு தினமும் ஏராளமான கடிதங்கள் வருகின்றன. அவற்றை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்திய பிறகே அதிபரின் பார்வைக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஒபாமாவிற்கு வந்த கடிதத்தில் ‘ரிசின்’ என்ற கொடிய விஷம் தடவப்பட்டிருப்பதை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதேபோல் நியூயார்க் மேயர் மிச்சல் புளூம்பெர்க் அலுவலகத்துக்கு வந்த கடிதத்திலும் விஷம் தடவப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதை அங்கு வேலை பார்த்த ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.

இதனால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க மக்களிடத்தில் இந்தச் சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவு (எஃப்.பி.ஐ) அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அமெரிக்க அதிபருக்கும், மேயருக்கும் விஷம் தடவிய கடிதம் அனுப்பியது, டெக்சாஸ் மாகாணம் நியூ பாஸ்டனில் வசிக்கும் நடிகை ஷான் ரிச்சர்ட்சன் (35) என்ற பெண்மணி என்பது தெரிய வந்தது. கடந்த மே 20ஆம் தேதி அதிபர் ஒபாமாவுக்கு விஷம் தடவிய மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார். இதற்கு அவரது கணவர் உதவியாக இருந்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் எஃப்.பி.ஐ போலீசார் நடிகை ஷான் ரிச்சர்ட்சனை கைது செய்தனர் என்ற சம்பவம் கடந்த வாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒபாமாவிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் விஷம் தடவப்பட்டிருந்தது என்பதுதான் விஷயம். இந்த விஷயத்தை பெரும் பரபரப்பாக்கியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஒபாமா கடிதங்களை சாப்பிடுவதில்லை. நாள்தோறும் வெள்ளை மாளிகைக்கு வரக்கூடிய கடிதங்களில் 20 கடிதங்கள்தான் இவருக்கு காலை நேர சாப்பாடு என்று இருந்தால் இவர்கள் பீதியடைவதில் அர்த்தம் இருக்கும். அல்லது அவரது உணவில் விஷம் கலக்கப்பட்டு, அவ்வாறு அவரது உணவில் விஷம் கலந்த விஷயம் அவர் உணவு உண்ணப்போவதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டிருந்தால்கூட அதை பரபரப்புக்குரிய விஷயம் என்று சொல்லலாம். ஆனால் அவருக்கு வந்த கடிதத்தில் விஷம் தடவியதால் அவரது உயிருக்கு ஆபத்து என்ற ரீதியில் செய்திகள் பரப்பப்படுகின்றன.

வல்லரசின் அதிபர் என்று சொல்லக்கூடியவர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை எண்ணிப்பார்க்கின்றோம். அவருக்கு வரக்கூடிய கடிதத்தைக்கூட பரிசோதித்த பிறகுதான் திறந்து பார்க்கும் அவல நிலை உள்ளது.

இந்தக் காலத்து ஆட்சியாளர்களின் பாதுகாப்புக்கு மட்டுமே பலகோடி ரூபாய்கள் அரசாங்க கஜானாவிலிருந்து செலவிடப்படுகின்றது.

விஷம் தடவிய கடிதத்தைக் கண்டு மட்டும் உயிருக்குப் பயந்து வாழவில்லை. அவரது பாதுகாப்புக்கு மட்டும் ஒவ்வொரு நாளும் பலகோடி ரூபாய்கள் அமெரிக்கா செலவிடுகின்றது.

சில வருடங்களுக்கு முன்பு இந்தியா வந்த ஒபாமாவிற்கு மும்பையில் பாதுகாப்பு அளிக்க ஒரு நாளைக்கு ரூ 900 கோடி ரூபாய் செலவிடப்பட்டது நினைவிருக்கலாம்.

நமது நாட்டில் பிரதமர், குடியரசுத்தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என முக்கிய பொறுப்பு வகிப்பவர்களது பாதுகாப்புக்கு மாதம் தோறும் ஆகும் செலவு, ரூபாய் 48 கோடி என்றும், இதில் குடியரசுத் தலைவருக்கு மட்டும், ரூபாய் 3 கோடி பாதுகாப்பிற்கு செலவாகின்றது என்றும், பிரதமர், குடியரசுத் தலைவர், போன்ற மிக முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் பாதுகாப்புக்காக ரூபாய் 28கோடி செலவிடப்பட்டு வருகிறது என்றும், அப்படிப் பார்த்தால், ஆண்டுக்கு 341 கோடி ரூபாய்க்கு மேல் பாதுகாப்பிற்காக செலவாகிறது என்றும் ஒரு வழக்கு தொடர்பாக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்திருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒபாமா மட்டுமல்ல, உலகத் தலைவர்கள் அனைவரும் தங்களது உயிர்காத்துக் கொள்ளக்கூடிய விஷயத்தில் தினம் தினம் செத்து செத்து பிழைக்கின்றார்கள் என்ற செய்தி சில மாதங்களுக்கு முன்பு ஆதாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உலகத் தலைவர்களுக்கு சமைக்கும் சமையல் கலைஞர்களின் மூன்று நாள் மாநாடு நடந்தது.

இதில் பங்கேற்ற ஒவ்வொரு சமையல் கலைஞரும் தங்களின் சுவராஸ்யமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அரசியலுக்கு வருவதற்கு முன் கே.ஜி.பி எனப்படும் ரஷ்ய புலனாய்வுத் துறை அதிகாரியாக இருந்தவர்.

எனவே அவர் சாப்பிடுவதற்கு முன், அனைத்து உணவுகளையும் விளாடிமிர் புடினே பரிசோதிப்பார் என அவரது முன்னாள் சமையல் கலைஞர் ஜில்லெஸ் பிரகார்டு தெரிவித்துள்ளார்.

பிரகார்டு மேலும் குறிப்பிடுகையில், அமெரிக்கா ஜனாதிபதியாக ஜார்ஜ் புஷ் இருந்தபோதும் அனைத்து உணவுகளும் பரிசோதிக்கப்பட்ட பிறகு சாப்பிடுவார். அவர் லண்டன் பயணம் மேற்கொண்டபோது, எஃப்.பி.ஐ அதிகாரிகள் அவரது உணவை பரிசோதித்த பின்தான் உணவுகள் அவருக்கு பரிமாறப்பட்டன என்றார்.

அதேபோல் அமெரிக்காவின் முன்னால் வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை பொறுத்தவரை, அமெரிக்க நாட்டு உணவைத் தவிர்த்து மற்ற நாட்டு உணவுகள் பரிமாறப்பட்டால் சந்தேகப்படுவார்.

எனவே மற்ற நாட்டு உணவுகள் கூடுதல் பரிசோதனைக்குப் பிறகே அவருக்கு பரிமாறப்படும் என வி.வி.ஐ.பி சமையல் கலைஞர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

அதுமட்டுமல்லாமல் தன்னை மாவீரனாகக் காட்டிக்கொண்ட ஹிட்லரது நிலையும் இப்படித்தான் இருந்துள்ளது.

ஹிட்லர் யூத இனத்தை அழிக்க கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டவர் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். எதிரிகள் யாரும் தனக்கு விஷம் வைத்துக் கொன்று விடுவார்களோ என்று பயந்து நடுங்கிய ஹிட்லர், தான் உணவு உண்ணப்போவதற்கு முன்பாக தனது உணவை உண்டு பரிசோதனை செய்ய 15 நபர்களைக் கொண்ட ஒரு குழுவினரை நியமித்து அந்த 15 நபர்களும் உணவு உண்டு அவர்கள் உயிரோடிருப்பதை பார்த்து உறுதி செய்த பிறகுதான் இவர் உணவு உண்பார் என்ற ரகசியத்தை சமீபத்தில் அவரது உணவு பரிசோதனைக்குழுவில் இருந்த ஒரு பெண்மணி வெளிப்படுத்தினார்.

இரண்டாம் உலகப் போரின் போது அடால்ப் ஹிட்லரின் உணவு பரிசோதகராக இருந்த பெண், அரை நூற்றாண்டை கடந்த நிலையில் தனது அனுபவத்தை சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு தனது 95வது பிறந்த நாளைக் கொண்டாடிய மார்கோட் வெல்க், இதுவரை தனது கணவரிடம் கூட பகிர்ந்து கொள்ளாத பல ரகசியங்களை தற்போது வெளி உலகுக்கு தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தபோது, ஜெர்மனின் சர்வாதிகாரியாக இருந்த அடால்ப் ஹிட்லரின் உணவுப் பரிசோதகராக 15 இளம் பெண்கள் பணியாற்றினர். அதில் தானும் ஒருவர் என்று கூறியுள்ளார் மார்கோட் வெல்க்.

தனக்கு அப்போது 20 வயது இருக்கும். இரண்டாம் உலகப் போரின்போது, தற்போது போலந்து என்று அழைக்கப்படும் பகுதியில் மிக அதிக பாதுகாலவர்களுக்கு மத்தியில்தான் நாசிப் படைகளின் தலைவர் ஹிட்லர் இருந்தார். அப்போது அவருக்கு அளிக்கப்படும் உணவுகளில் விஷம் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 15 இளம் பெண்களுக்கு அந்த உணவு கொடுக்கப்படும். அவர்கள் சாப்பிட்ட பிறகே ஹிட்லர் அந்த உணவை சாப்பிடுவார்.

ஹிட்லர் ஒரு சைவப் பிரியர். நான் அங்கு பணியாற்றிய இரண்டரை ஆண்டுகளில் அவர் ஒரு நாள் கூட அசைவ உணவுகளை சாப்பிட்டதில்லை. பிரிட்டிஷ் காரர்கள் தனக்கு உணவில் விஷம் கலந்து வைத்து விடுவார்கள் என்று ஹிட்லருக்கு அச்சம் இருந்தது. அதனால்தான் உணவுப் பரிசோதனை பணிக்கு 15 பெண்களை அமர்த்தியிருந்தார்.

எவ்வளவு சுவையான உணவாக இருந்தாலும், ஒரு நாள் கூட நாங்கள் அதை ருசித்து உண்டது கிடையாது. இதுதான் நமது கடைசி சாப்பாடாக இருக்குமோ என்ற அச்சத்திலேயே நாங்கள் அங்கு இருந்தோம் என்று கூறுகிறார் வோல்க்.

இரண்டாம் உலகப் போரின் போது நாசிப் படைகளுடன் பணியாற்றினோம் என்று கூறுவதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு, இதைப் பற்றி இதுவரை நான் யாரிடமும் கூறியது கிடையாது. எனது கணவரிடம்கூட இதுபற்றி சொன்னதில்லை என்கிறார் அவர்.

ஹிட்லர் மிகுந்த அச்ச உணர்வோடும், எப்போதும் எச்சரிக்கையாகவும் இருப்பார். அவரது அச்சத்தை அதிகரிக்கும் வகையில் 1944ஆம் ஆண்டு ஹிட்லர் தங்கியிருந்த வோல்ப்ஸ் லேயருக்குள் மிக சக்தி வாய்ந்த குண்டு வீசப்பட்டது. இதில் 5 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். ஆனால் ஹிட்லர் தப்பிவிட்டார். அதன் பிறகு நிலைமை வேறு விதமாக ஆனது.

எனது பழைய அருவருப்பான நினைவுகளை மறக்க நினைத்தாலும், அது என்னை மறக்காமல் துரத்திக் கொண்டே இருக்கிறது. அதிலும் இரவு நேரங்களில் என்னைத் தூங்க விடாமல் செய்கிறது என்கிறார் கண்ணீர் ததும்ப.

ஹிட்லருடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இப்படி உலகத்தின் வல்லரசுகள் என்று பீற்றிக்கொண்ட வல்லரசு அதிபர்களின் நிலைமை உயிருக்கு பயந்து வாழும் நிலைமையாகத்தான் இருந்துள்ளது. தங்களுக்கு யார் எந்த நேரத்தில் விஷம் வைத்துக் கொல்லப்போகின்றார்களோ என்ற பீதியிலேயே அவர்களது வாழ்வு ஓடிக்கொண்டிருந்ததும், அப்படித்தான் இன்றளவும் ஓடிக்கொண்டிருக்கின்றது என்பதும் தற்போது தெள்ளத்தெளிவாக விளங்குகின்றது.

இந்த செய்திகள் நமக்கு ஒரு முக்கியமான விஷயத்தை நினைவு கூற வைக்கின்றன.

நபிகளாரின் முன்னறிவிப்பு :

இறுதி இறைத்தூதர் அகிலத்தின் அருட்கொடையாம் அண்ணலம் பெருமானார் (ஸல்) அவர்கள் அனைத்து தீமைகளையும் ஒரு சேர தயவு தாட்சண்யமின்றி எதிர்த்தார்கள். அப்படி எதிர்த்த நபிகளாரது உயிருக்கு எதிரிகளால் கடும் ஆபத்து இருந்தது. நபிகளாரைக் கொல்ல வேண்டும்; அல்லது சிறைபிடிக்க வேண்டும் அல்லது நாடு கடத்த வேண்டும் என்று பல சதித்திட்டங்களில் அவரது எதிரிகள் இருந்தனர். யூதர்கள், கிறித்தவர்கள், நெருப்பு வணங்கிகள், மக்கத்து காஃபிர்கள், அண்டை நாட்டு அரசர்கள் என அனைவரையும் எதிர்த்து ஆட்சி நடத்தினார்கள் அண்ணலம் பெருமானார்.

இத்தனை எதிரிகள் இருந்தபோதும், அத்தனை எதிரிகளும் ஒன்று சேர்ந்து சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து நபிகளாருக்கு எதிராக ஓரணியில் திரண்டு நின்றபோதும் கூட நபிகளாரை யாராலும் கொல்ல முடியவில்லை.

எதிரிகளால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்த நிலையிலும் கூட அவர்கள் உயிருக்குப் பயந்து வாழ்வில்லை; யாரும் தன்னை கொலை செய்து விடுவார்களோ என்ற பயம் நபிகளாருக்கு ஒருபோதும் இருக்கவில்லை.

இன்றைய காலத்து ஆட்சியாளர்கள் தங்களது உயிரைக்காத்துக் கொள்ள பாதுகாப்பான கோட்டைகளுக்குள் இருந்து வருகின்றனர். அப்படி பாதுகாப்பான அறைகளுக்குள் அவர்கள் இருந்தாலும் குண்டு துளைக்காத ஆடைகளை அணிந்து கொண்டு நடமாடும் நிலை உள்ளது.

அவர்களுக்கு முன்னும் பின்னும் பராக் பராக் சொல்லி பாதுகாவலர்கள் யாரும் சென்றதில்லை. அவர்களது வீட்டின் முன் வாயிற்காப்பாளர்கள் இருக்கவில்லை.

போர்க்களங்களில் அவர்களே முன்வரிசையில் நின்று எதிரிகளை வீழ்த்தினார்கள். இப்படி ஒரு மனிதன் தனது உயிருக்கு பங்கம் ஏற்படும் என்று அஞ்சி ஓடக்கூடிய அனைத்து விஷயங்களையும் அவர்களே முன்னின்று செய்தார்கள்.

மற்ற தலைவர்கள் தாங்கள் உணவு உண்பதற்கு முன்பாக உணவில் விஷம் கலந்துள்ளதா என்று ஒவ்வொரு முறையும் சோதித்து சோதித்து உணவு உண்பதுபோல் நபிகளார் உணவை சோதித்து உண்ணவில்லை.

மாறாக அவர்கள் உணவு உண்டபோது ஒரு யூதப் பெண்மணி விஷம் கலந்து கொடுத்தாள். அதுவும் ஜிப்ரயீல் (அலை) மூலம் அடையாளம் காட்டப்பட்டு அண்ணலாரின் உயிர் காக்கப்பட்டது. அல்லாஹ் அவர்களை பாதுகாத்தான்.

தனது திருமறையில், “அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான்” என்று வாக்குறுதியளித்துள்ளான். அந்தத் திருமறையின் வசனம் உண்மைப்படுத்தப்பட்டது. நபிகளாரை யாராலும் கொல்ல முடியவில்லை. அவர்கள் இயற்கை மரணம் அடைந்தார்கள்.

இன்றைய ஆட்சியாளர்கள் தங்களது உயிருக்குப் பயந்து கொண்டு வாழ்வதும், நபிகளார் அல்லாஹ் அளித்த வாக்குறுதியின் காரணமாக மனிதர்களிடத்திலிருந்து காக்கப்பட்டதும் இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம் என்பதை உலகுக்கு பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்.

(அல்குர் ஆன் 5 : 67)