மதரஸாக்களுக்கு ரமலான் விடுமுறையை இரத்து செய்த உ.பி அரசிற்குத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்!

மதரஸாக்களுக்கு ரமலான் விடுமுறையை இரத்து செய்த உ.பி அரசிற்குத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்!

உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க அரசு, இந்தியாவின் இறையான்மைக்கும்,அரசியல் சாசனச் சட்டத்திற்கும் எதிரான நடவடிக்கைகளில் நாளுக்கு நாள் ஈடுபட்டு வருகிறது. மாட்டிறைச்சிக்குத் தடை, வந்தேமாதரம் கட்டாயம் என,இந்துத்துவச் சிந்தனையுடன் அம்மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யாநாத் சட்டமியற்றி வருகிறார். அந்த மத வெறிச்சிந்தனையுடன் தற்போது இயற்றியுள்ள சட்டம் முஸ்லீம்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பியில் இயங்கிவரும் மதரஸாக்களுக்கு இந்த ஆண்டுமுதல் ரமலான் பண்டிகைக்கு விடப்படும் அரசு விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.அதற்குப் பதிலாக இந்துக்களின் பண்டிகைக்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.இந்தியாவின் மதச்சார்பின்மைக்குக் குந்தகம் விளைவிக்கும், உ.பியில் ஆளும் பா.ஜ.க அரசின் இந்தப் பாசிச நடவடிக்கையைத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளிப்பது போல் மதரஸாக்களுக்கும் தனியாக ஆண்டிற்கு 92 விடுமுறைகள் அளிக்கப்படும்.ஆனால் இந்த ஆண்டு இந்த நாட்கள் 86 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.மேலும் இதில் ரமலான் விடுமுறை நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக தீபாவளி,தசரா,மாஹா நவமி,ரக்‌ஷா பந்தன்,புத்த பூர்ணிமா போன்ற பண்டிகைகளில் விடுமுறை எடுத்துக் கொள்ள மதரஸாவில் படிக்கும் முஸ்லிம் மாணவர்களுக்கு யோகி ஆதித்யநாத் உத்தவிட்டுள்ளர்.

முஸ்லிம்களின் முக்கியப் பெருநாளான ரமலான் திருநாளிற்கு, முஸ்லிம்களுக்கே விடுமுறை அளிக்காதது இஸ்லாமியர்களிடையே,பெரும் அதிர்ச்சியையும்,கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.பா.ஜ.கவின் இந்தச் செயலை நியாயவான்களும், நடுநிலையான இந்து மக்களும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.

உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவைப் பார்த்துப் பெருமை கொள்வதற்குக் காரணம் இங்குக் காணப்படும் மதச்சார்பின்மையும் சகிப்புத்தன்மையும் ஆகும்.ஆனால் பா.ஜ.க அரசின் இந்த நடவடிக்கை, அந்த நாடுகள் அனைத்தும் நம்மைப் பார்த்துக் காரி உமிழ்வது போல் உள்ளது.

உ.பி யில், ஆளும் பா.ஜ.க. அரசு இந்தச் சட்டத்தை உடனடியாகத் திரும்பப்பெற்று,மீண்டும் ரமலானிற்கு விடுமுறை அளிக்க வேண்டுமென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.இல்லை எனில் வெள்ளையரை எதிர்த்து நின்று போராடி அவர்களை விரட்டிய முஸ்லிம் சமுதாயம்,காவிகளின் கொட்டத்தை அடக்க வீறுகொண்டு எழும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக
பொதுச்செயலாளர்
எம்.எஸ். சையது இப்ராஹீம்