மதங்களைக் கடந்த மனிதநேயம்

கடவுளை மற மனிதனை நினை என்றொரு கோஷம் கடந்த சில வருடங்களுக்கு முன் வீரியமாக எடுத்து வைக்கப்பட்டது. கடவுள் பக்தியும் அதை வலியுறுத்தும் மதங்களும் கண்ணுக்கு முன் கஷ்டப்படும் மனிதர்களைக் கண்டு கொள்ளாமல் கண் காணா இறைவனைக் குறித்தே கவலை கொள்கின்றன என்பதும் மனிதனை மனிதன் அடிமைப் படுத்தவும் அடக்குமுறை செய்யவும் இந்த மதங்களே காரணமாக இருக்கின்றன என்பதும் அதற்கான முக்கிய காரணங்களாக சொல்லப்பட்டன.

இந்தக் காரணங்கள் இஸ்லாத்திற்குப் பொருந்தாது. ஏனெனில் இஸ்லாமிய சட்டங்கள் அனைத்தும் அதன் அடி முதல் நுனி வரை மனித நேயத்தையே மறைபொருளாக கொண்டு இயங்குகிறது.

வழிபாடுகள் என்பது எந்த வரம்பிற்குள்ளும் வராது என்று கூறுவார்கள். அத்தகைய வழிபாட்டில் கூட மனித குல நன்மையை மறைத்து வைத்துள்ளது இஸ்லாம்.

ஆண்டான் அடிமை, மேலோன் கீழான் என்ற ஏற்றத் தாழ்வுகளையும் அதனால் உலகம் அனுபவித்து வரும் கொடுமைகளை தொழுகை எனும் வழிபாட்டின் மூலமே தொலைத்துக் கட்டியது இஸ்லாம்.

கடவுளுக்கு செய்யும் பாவமே கடுமையான பாவம் என்ற எண்ணங்களுக்கிடையில் மனிதனுக்கு செய்த பாவத்தை அந்த மனிதன் மன்னிக்காத வரை இறைவன் மன்னிக்க மாட்டான் என்கிறது இஸ்லாம்.

இத்தகைய மனிதநேய சமுத்திரத்தின் துளிகளில் சில.

பகைவனின் வழக்கில் பழி தீர்க்க எண்ணாதே.

ஒரு சாரார் மீது உங்களுக்குள்ள பகை அநீதிக்கு ஆதரவாய் உங்களை ஆக்கி விட வேண்டாம். நீதியாக நடங்கள் அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது.

இடர்களை நீக்குவதும் இறைப் பணியே

பாதையில் கிடக்கும் தீங்கு தருவதை நீக்குவது(ம்) இறை நம்பிக்கையில் உள்ளதாகும்.

ஏழ்மைக்கு இரங்குவது ஏற்றமிகு செயலாகும்.

ஒரு நாள் காலை முளர் என்ற கூட்டத்தார் நபிகளாரை சந்திக்க வந்தார்கள். அவர்களைப் பார்த்தால் பார்ப்போரின் உள்ளத்தில் பரிதாபம் வந்து தொற்றிக் கொள்ளும்.அப்படியொரு தோற்றம்.கால்களில் செருப்பில்லை,உடலை மறைக்க போதிய ஆடையில்லை, முக்கிய பகுதிகளை மறைக்கின்ற குறைந்த பட்ச ஆடைகூட ஆங்காங்கே கிழிந்து தொங்கும் கனத்துப் போன கம்பளித் துணி.

வறுமையே வாழ்வாக வந்து நிற்கும் முளர்களைக் கண்டதும் நபியவர்களின் முகமே வாடிப் போனது. இவர்களின் ஏழ்மையைப் போக்க என்ன வழி என்ற யோசனையில் மூழ்கியது அவர்களின் உள்ளம்.

இதற்கிடையில் தொழுகையின் நேரம் வந்தது தொழுகையாளிகளின் வருகையால் பள்ளி நிறைந்தது தொழுகையும் முடிந்தது. கூடியிருந்த மக்களின் முன்னால் எழுந்து நின்று கருணையும் கடுமையும் நிறைந்த உரையொன்றை நிகழ்த்தினார்கள்.

மக்களே! ஒரே மனிதரிலிருந்து உங்களைப் படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள் எனும் வசனத்தைக் கூறி (4:1)எச்சரித்தார்கள்.

விசுவாசிகளே! அல்லாஹ்விற்குப் பயந்து கொள்ளுங்கள்.ஒவ்வொரு மனிதனும் நாளைய (வாழ்வுக்காக) என்ன செய்திருக்கிறான் என்பதை சிந்தித்துக் கொள்ளட்டும் என்ற வசனத்தைக் கூறி (59:18) அறிவுரை கூறினார்கள்.

அதன்பின் தர்மம் செய்யுமாறு வலியுறுத்தினார்கள்.தங்கம்,வெள்ளி,துணிமணி, கோதுமை என உங்களிடம் இருப்பதைக் கொடுங்கள். பேரீத்தம் பழத்தின் ஒரேயொரு துண்டிருந்தாலும்(அதைக் கொடுப்பதற்காக வெட்கப்படாதீர்கள்.) என சொல்லி முடித்தார்கள்.

கூடியிருந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைய ஆரம்பித்தது. கலைந்து சென்றவர்கள் கொண்டு வந்த பொருட்களால் பள்ளிவாசல் நிறைய ஆரம்பித்தது.

நபியவர்கள் குறிப்பிட்ட அனைத்தும் வந்தது. தங்கக் காசுகள், வெள்ளி நாணயங்கள், ஆடை அணிமணிகள், தானிய வகைகள், பேரீத்தம் பழங்கள் என தோழர்களிடம் இருந்தவை யாவும் வந்தன. அவரவர்களின் தகுதிக்கேற்ப குறையவோ நிறையவோ கொண்டு வந்து கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள்.

இந்தச் செய்தியை அறிவிக்கின்ற நேரடி சாட்சியாளரும் நபிகளாரின் உற்ற தோழருமாகிய………….கூறுகிறார்.

அங்கே திரட்டப்பட்ட பொருட்கள் இரண்டு குவியல்களாக பிரிக்கப்பட்டிருந்தன. இரண்டும் இரண்டு மலைகளைப் போன்று காட்சியளித்தது. வாடிக்கிடந்த நாயகத்தின் திருமுகமோ தகதகக்கும் பொன்னைப் போல மின்னிக் கொண்டிருந்தது என்கிறார்.

எண்ணற்ற தர்மங்கள் எல்லையில்லா நன்மைகள்

மக்கள் நாள்தோறும் தமது உடல் மூட்டுகளின் எண்ணிக்கை அளவிற்கு தர்மம் செய்ய வேண்டும்.(பொருளாதார உதவிகள் மட்டுமல்ல.) இருவருக்கிடையில் நீதி செலுத்துங்கள் அது தர்மம்

வாகனத்தில் ஏறுபவருக்கு உதவி செய்யுங்கள் அது தர்மம்

சாமான்களை வாகனத்தில் ஏற்றி விடுங்கள் அது தர்மம்

நல்லதைப் பேசுங்கள் அது தர்மம்

தீங்கு தருபவற்றைப் பாதையை விட்டும் அகற்றுங்கள் அது தர்மம்

தொழுகைக்காக எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தர்மம் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

மன்னிக்கும் மனமும் மாநபியின் குணமும்

ஒருமுறை நபிகளாருக்கு சமைத்த ஆட்டிறைச்சியை சாப்பிடக் கொடுத்தாள் ஒரு யூதப் பெண். அவள் வாஞ்சையோடு தருகிறாள் என வாங்கிச் சாப்பிட்ட நபியவர்கள் இதிலே விஷம் கலந்திருக்கிறது சாப்பிடுவதை நிறுத்துங்கள் என தம் தோழர்களை உஷார்படுத்தினார்கள்.

விருந்து கொடுத்தவளை அழைத்து வந்து விசாரித்தார்கள். அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டாள். உங்களைக் கொல்வதற்குத் தான் விருந்தில் விஷம் வைத்தேன் என ஆணவம் தொனிக்க பதிலளித்தாள்.

இவளது காரியத்தை முடிப்பது தான் இதற்கான நீதியென மக்களெல்லாம் எதிர்பார்த்தனர். ஆனால் நபியவர்களோ அவளுக்கு மன்னிப்பைக் கொடுத்து மகிழ்ச்சியோடு அனுப்பி வைத்தார்கள்.

ஏழைக்குச் செய்யும் உதவி இறைவனுக்கே செய்ததாகும்

மறுமையில் இறைவன் ஒரு மனிதனை அழைத்து நான் நோயுற்றிருந்த போது ஏன் எனக்கு ஆறுதல் கூறவில்லை? நான் உணவு கேட்ட போது எதற்காக நீ உணவு தரவில்லை? தண்ணீர் கேட்ட போது ஏன் எனக்கு நீர் கொடுக்கவில்லை? என்று கேட்பான்

இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் தனித்தனியாக அவன் பதிலளிப்பான். இறைவா! அகிலத்தின் அதிபதியான உனக்கு நான் எப்படி ஆறுதல் கூறமுடியும்? உனக்கு உணவளிக்கவும் நீர் புகட்டவும் என்னால் எப்படி முடியும்? என்பான்.

மனிதனின் ஒவ்வொரு பதிலுக்குப் பின்னரும் மனிதா! உனக்குத் தெரியாதா? நோயுற்றிருந்தானே இன்ன அடியான் அவனை நீ நலம் விசாரிக்கச் சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்.

உன்னிடம் உணவு கேட்ட இன்ன மனிதனுக்கு உணவளித்திருந்தால் அதன் பலனை என்னிடம் கண்டிருப்பாய்.

தாகத்தை முறையிட்ட இன்னானுக்கு தண்ணீர் கொடுத்திருந்தால் அதை இங்கே நீ அறுவடை செய்திருப்பாய் என இறைவன் கூறுவான்.

துரோகிக்கும் தோள் கொடு

நன்மையும் தீமையும் சமமல்ல. எனவே நன்மையைச் செய்து (பகைமையைத்) தடு. அப்படிச் செய்தால் அப்போதே உம் பகைவர் உற்ற தோழரைப் போன்றாகி விடுவார்

அசுத்தப்படுத்தியவர் மீதும் அக்கறைக் காட்டியவர்

கிராமவாசி ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார். அதைத் தடுக்க வந்தவர்களை இடையிலேயே நிறுத்தி இவருக்கு இடையூறு செய்து விடாதீர்கள் என நபிகள் நாயகம் அவர்கள் தடுத்து நிறுத்தி விட்டார்கள்.

அவர் தனது தேவையை முடித்துக் கொண்ட பிறகு தம் தோழர்களை வைத்து அந்த இடத்தில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தார்கள். .

மதம் கடந்த மனித நேயம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வேலை செய்து கொண்டிருந்த யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். அவனது வீட்டிற்கு வந்த நபியவர்கள் அவனது தலைமாட்டில் அமர்ந்து அவனை நலம் விசாரித்தார்கள்.

நபிகள் நாயகத்தைக் கடந்து ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டது. அதற்காக எழுந்து நின்றார்கள். உடனே இது யூதரின் பிரேதம் என்று கூறப்பட்டது. அதற்கு நபியவர்கள் அவர் மனிதரில்லையா? என பதிலளித்தார்கள்.

போர்க்களத்திலும் புதுவிதி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட ஒரு போரில் கொல்லப்பட்ட பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அப்போது நபியவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லக் கூடாது என தடை விதித்தார்கள்

மனித உயிரின் மகத்துவம்

கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்கு பதிலாகவோ இல்லாமல் ஒருவர் இன்னொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொன்றவரைப் போலாவார். ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா உயிர்களையும் வாழ வைத்தவர் போலாவார்.

இறைவனின் நேசம் பெற மனிதர்களை நேசிப்போம்

மனிதர்கள் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்ட மாட்டான்.