மக்களை வதைக்கும் மத்திய அரசு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.

மக்களை வதைக்கும் மத்திய அரசு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.

ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் இந்தியாவே செயலிழந்து கிடக்கின்றது.

மூட்டைப் பூச்சியை ஒழிக்க வீட்டைக் கொளுத்திய மூடனைப் போல கறுப்புப் பணத்தை ஒழிக்க கண் மூடித்தனமாகச் செயல்பட்டிருக்கிறார் பிரதமர் மோடி.

கணக்கில் வராத கருப்பு பணம் என்பது தங்கம், ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கட், ஸ்விஸ் வங்கி முதலீடு என பல ரூபங்களாக உருமாறியுள்ள நிலையில் பேப்பர் ரூபாய் நோட்டுக்களைத் தடை செய்வதால் கருப்பு பணம் எப்படி ஒழியும்? இந்த சாதாரன அறிவு கூடவா நாட்டை ஆள்பவர்களுக்கு இல்லை என அகிலமே காரி உமிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதை விடப் பெருங்கொடுமை வங்கியின் வாசலில் காத்துக் கிடக்கும் கோடிக் கணக்கான குடிமக்களுக்குப் பதுக்கல் பேர்வழிகள் என பட்டம் கொடுத்து கௌரவித்துள்ளார் இந்தியப் பிரதமர் மோடி. இந்த அகம்பாவப் பேச்சின் வழியாக தனது அரசியல் வாழ்வின் அஸ்தமனத்தை விரைவுபடுத்தியிருக்கிறார் மோடி.

கடந்த ஒரு வார காலமாக நாட்டின் அனைத்து தொழில்களும்,வியாபாரங்களும் முடங்கி கிடக்கின்றன. மக்களின் சகஜ வாழ்க்கை ஸ்தம்பித்து நிற்கிறது. வங்கிகளின் வாசலில் முதியவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். கையில் காசிருந்தும் கஞ்சிக்கு வழியில்லாத பஞ்சைப் பராரிகளாக பலரும் மாறிப் போயிருக்கின்றனர். சேர்த்து வைத்த செல்வமெல்லாம் செல்லா காசாகி விடுமோ என்ற பீதி மக்களின் மனங்களை ஆக்கிரமித்துள்ளது.

ஒரு திட்டத்தை அறிவிப்பதற்கு முன் அதை எதிர் கொள்ளத் தேவையான குறைந்த பட்ச ஏற்பாடுகளைக் கூட அரசு முறையாகச் செய்யவில்லை. பணியாளர்களை அதிகப்படுத்துவது, முண்டியடிக்கும் மக்களை முறைப்படுத்துவது,அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுப்பது, ஏடிஎம் மிஷின்களை அதற்கேற்ப வடிவமைப்பது,10,20,50,100 ஆகிய சில்லறை நோட்டுக்களைப் புழக்கத்தில் அதிகப்படுத்துவது என எந்த ஏற்பாடுமின்றி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அறிவித்திருக்கிறார்கள்.

நிமிடத்திற்கு நிமிடம் வெளியிடப்படும் புதிய புதிய அறிவிப்புகள் கொடுமையிலும் கொடுமை. அதில் கடைசியாக வந்திருப்பது கை விரல் மை. இதில் இன்னும் எத்தனைக் கோமாளித் தனங்களை அறிவிக்கப் போகிறார்களோ தெரியவில்லை.

பண முதலைகளைப் பத்திரமாகப் பாதுகாத்து விட்டு, சாமானிய மக்களை சாகடிக்கும் முயற்சியில் மோடி அரசு இறங்கியுள்ளது.

பாஜகவின் இந்த காட்டு தர்பாரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

தற்போது நாடு முழுவதும் பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சியை ஆதரிப்பவர்கள் கூட எதிர் கட்சிகளோடு இணைந்து கொண்டு பாராளுமன்றம் நோக்கி படையெடுக்கின்றனர். கொழுந்து விட்டெறியும் கோபக் கணல் ஆர்ப்பாட்டங்களாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

இன்று சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடந்துள்ளது, எதிர்வரும் 18 ஆம் தேதியன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

மக்களின் துயர் துடைக்கத் துணிந்து நிற்கும் இதுபோன்ற ஜனநாயக வழிப் போராட்டங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் வரவேற்கிறது. நியாயமான இப்போராட்டங்கள் வெற்றி பெறவும், இக்குரல்களின் மூலம் நீதி நிலைபெறவும் எல்லாம் வல்ல இறைவனை இருகரம் ஏந்திப் பிரார்த்திக்கிறது.

இப்படிக்கு

மு.முஹம்மது யூசுப்

மாநிலப் பொதுச் செயலாளர் (TNTJ)