போராட்டத்தில் குதித்த எகிப்திய மக்கள் – அரபு நாடுகளில் பரபரப்பு

துனிசிய மக்களின் துணிச்சலான போராட்டத்தின் பலனாக அந்த நாட்டு அதிபர், பிரான்சின் தளபதி என்று செல்லமாக அழைக்கப்பட்டவரும், மேற்கத்திய நாடுகளின் கைப்பிள்ளையாக விளங்கிய பின் அலி நாடு துரத்தப்பட்டு, கடைசியாக சவுதியில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்த பின் அலிக்கு தற்போது இன்டர்போல் கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த துனிசிய மக்களின் துணிவின் எதிரொலி, எகிப்திய மக்களுக்கு நம்பிக்கை ஒளி ஊட்டியது. கடந்த செவ்வாய்க்கிழமை, 25/1/2011, காவலர் நாளாகும், அன்று அரசு விடுமுறை. துனிசிய மக்களின் துணிச்சலுக்குப் பின், எகிப்திய மக்களுக்கு நம்பிக்கை துளிர் ஒட்டியதன் விளைவால், 25/1/2011, அன்று போராட்டம் என மக்களாகவே அறிவித்தனர், பெரும்பாலானவர்கள் இளைஞர்களே.

முதல் நாள் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி போராட்டத்தில் பங்கேற்றது, மற்றவர்களையும் ஊக்கப்படுத்தியது. அது நாளுக்கு நாள் கூட, வெள்ளிக்கிழமையான இன்று (28-1-11) ஏறக்குறைய ஒரு லட்சம் மக்கள் வீதியில் இறங்கி போராடி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இரவு பகல் என்றில்லாமல் போராடி வருவதாக செய்திகள் அறிவிக்கின்றன. (படங்கள் இங்கே)  இதுவரை 18 பேர் (இதை எழுதி முடிப்பதற்குள் 26) அரசின் காட்டுமிராண்டிதனத்தால் இறந்துள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

மேலும் செய்திகளுக்கு செல்வதற்கு முன், இதன் முக்கிய காரணத்தை அறிந்து கொள்வது அவசியம். எகிப்தில், வறுமை தலை விரித்து ஆடுகிறது, லஞ்ச லாவநியங்களுக்கு பஞ்சமில்லை, காட்டுமிராண்டித்தனமான அரசு. எகிப்திய அதிபரான (இவரை மன்னர் என்று சொல்வதே சரியானது) ஹுஸ்னி முபாரக், கடந்த 30  வருடங்களாக மன்னராகவுள்ளார் (அதாவது, அதிபராகவுள்ளார்). இவரைப்பற்றி சொல்ல வேண்டுமானால் எகிப்து மக்களிடையே உள்ள ஒரு எகிப்தைய நகைச்சுவை ஒன்றை கேட்டால் தெரிந்து கொள்ளலாம்.

ஹுஸ்னி முபாரக் தனது ஆலோசகர் ஒருவரிடம் ஒரு கேள்வியைக்கேட்டார்:

முபாரக்: “நான் சிறந்தவனா அல்லது முன்னாள் அதிபர் நாசர் சிறந்தவரா?

ஆலோசகர்: “நீங்கள் தான் சிறந்தவர்”

முபாரக்: “காரணம் என்னவோ?”

ஆலோசகர்: அதிபர் நாசர், சோவியத் யுனியனைக் கண்டு பயப்பட்டார், நீங்கள் பயப்படுவது இல்லை.

முபாரக்: “நான் சிறந்தவனா அல்லது முன்னாள் அதிபர் அன்வர் சாதத் சிறந்தவரா?

ஆலோசகர்: “நீங்கள் தான் சிறந்தவர்”

முபாரக்: “காரணம் என்னவோ?”

ஆலோசகர்: அதிபர் நாசர், அமெரிக்காவை கண்டு பயப்பட்டார், நீங்கள் பயப்படுவது இல்லை.

முபாரக்: “நான் சிறந்தவனா அல்லது கலிபா உமர (ரலி) சிறந்தவரா?

ஆலோசகர்: “நீங்கள் தான் சிறந்தவர்”

முபாரக்: “காரணம் என்னவோ?”

ஆலோசகர்: உமர்(ரலி), அல்லாஹ்வைப் பயப்பட்டார், நீங்கள் பயப்படுவது இல்லை.

என்றாராம் அந்த ஆலோசகர், இது நகைச்சுவையாக எகிப்து மக்கள் சொல்வது என்றாலும், இதன் சாரம்சத்தை புரிந்து கொள்ளலாம்.

அடுத்ததாக இன்றைய எகிப்திய மக்களின் நிலை குறித்தும் ஒரு நகைச்சுவை உண்டு.அது என்னவென்றால்:

ஒருவர், உணவு உண்டாராம், அப்போது ஷைத்தான், அவரை அடித்து, பிஸ்மில்லாஹ் சொல்ல சொன்னானாம். இவர் குழம்பிப் போய் நின்றபோது, நானும் பாக்கிறன் நீ எப்பப்பாரு இந்த சாப்பட்டதான் சாப்பிடுற, பிஸ்மில்லாஹ் சொல்ல மறந்துருற, அதுனால நான் சாப்ட வேண்டியதா இருக்கு. என்னால இத சாப்ட முடியாது, அதனாலதான் பிஸ்மில்லாஹ் சொன்ன சொன்னேன் என்றானாம் ஷைத்தான்.

இப்போது இன்றைக்கு வருவோம், இன்றைய நிலைப்படி, அங்கு இணையதளங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, கைபேசிகள் முடக்கப்பட்டுள்ளன. போராட்ட படங்கள், மனதை நெகிழ வைக்கின்றன. இந்தப்போராட்டத்தில், படித்தவர்கள், படிக்காதவர்கள், நடுத்தர மக்கள், ஏழைகள், பெண்கள் உட்பட, அனைத்து தரப்பினரும் பங்கு கொண்டுள்ளனர்.

எகிப்திய மக்களை ஆயுதம் கொண்டு தாக்கி வருகிறது ஹுஸ்னி முபாரக் அரசு. எகிப்திய கொடுங்கோல் அடக்குமுறைக்கு அத்தாட்சிக்கு கீழ்வரும் இன்றைய  கானோளியைப்பாருங்கள்:

http://www.youtube.com/watch?v=4XnhHzs91MY

அநியாயமாக ஒருவர் சுடப்படுகிறார்.

கீழே, காவலராக நிற்கும் தனது மகனை, போராளியாக நிற்கும் ஓர் பெண்மணி முத்தமிடுகிறார்.

http://media.sacbee.com/static/weblogs/photos/images/2011/jan11/egypt_protest_sm/egypt_protest_40.jpg

மேலும் படங்களுக்கு: http://blogs.sacbee.com/photos/2011/01/rioting-and-chaos-engulfs-egyp.html

இந்த போராட்டம், மற்ற அரபுலக மற்றும், வாடா ஆப்பிரிக்க நாடுகளையும் தொற்றிக்கொண்டுள்ளது. எமன், ஜோர்டன், அல்ஜீரிய போன்ற நாடுகளிலும் தற்போது போராட்டங்கள் வலுத்து வருவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தாவில் ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது.

அரேபிய நாடுகளின் மன்னர்கள் உறக்கமிலந்துள்ளதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த போராட்டம் தோற்க வேண்டும் என அரபுலக மன்னர்கள் விரும்புவதாகவும், வெற்றி பெற வேண்டுமென இளைஞர்கள் வேண்டுவதாகவும் செய்திகள் அறிவிக்கின்றன. எல்லாம் வல்ல அல்லாஹ், இந்த மக்களுக்ககும், நமக்கும், சிறந்த ஆட்சியையும் ஆட்சியாளரையும் தந்தருள இறைவனிடம் பிரார்த்திப்போமாக!

tntj.net  இணையதளத்திற்காக சிறப்பு செய்தி – எஸ். ஜாஃபர் அலி (USA)