போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது

போராட்டக்காரர்கள் மீது  தடியடி நடத்திய காவல்துறையை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக
கடந்த ஆறு நாட்களாக நடந்து வந்த போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அறவழியில் போராடி வந்தனர்.

போராட்டகாரர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டதாக அரசு தெரிவித்த போதும், நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் போராட்டக்காரர்களை கலைக்கிறோம் என்ற பெயரில் கண்மூடித்தனமாக காவல்துறை நடத்தியுள்ள தடியடி, கண்ணீர்புகை மற்றும் கல்லெறி சம்பவத்தினை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது.

காவல் துறையினரின் நடவடிக்கையை பார்க்கிற போது, திறமையற்ற நிர்வாகத்தின் வெளிப்பாடாகவே இது தெரிகிறது.

போராட்டக்காரர்களை வெளியேற்றித் தான் ஆக வேண்டும் என்ற முடிவை எடுத்தால், மாணவர்கள் மீது கை வைக்காமல் லாவகமாக வெளியேற்றி இருக்க முடியும்.

மேலும் போராட்டக்களத்தில் உள்ள யாரும் வன்முறையைக் கையாளவில்லை. நடந்த சில வன்முறைகளும் போராட்டக் களத்துக்கு வெளியே தான் நடந்துள்ளது.

சங்பரிவாரம் சொல்வது போல் போராட்டக் காரர்களில் எந்த விசமிகளும் ஊடுருவவில்லை என்பதை அழுத்தமாக சொல்லி விட்டன. ஊடுருவி இருந்த விசமிகள் பொய்க் காரணம் கூறி முதல் நாளே வெளியேற்றி விட்டனர் என்பது தான் உண்மை.

மாணவர்கள் சூதுவாது தெரியாத
பால்மனம் கொண்டவர்கள். தக்க முறையில் புரியவைத்தால் ஏற்கக் கூடியவர்கள்.

அவர்களை சர்வதேச தீவிரவாதிகளைப் போல் கையாள்வதை உடனே நிறுத்தி அவர்களின் உள்ளங்களை வென்றெடுக்க வேண்டும்.

இப்படிக்கு

மு.முஹம்மது யூசுஃப்
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்