பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்!!

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்!!

பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்க வகை செய்யும் அரசியல் சாசன 124வது சட்டத்திருத்த மசோதாவை மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றியுள்ளது. பா.ஜ.க. அரசின் இந்த நடவடிக்கை நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும்.

சமூகம் மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கிய சமூகத்தினருக்குத்தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. இந்நிலையில் ஒரு சமூகத்தில் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு அதாவது பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது அப்பட்டமான சமூக அநீதியாகும்.

இது உயர்ஜாதியினரின் வாக்கு வங்கியை குறியாக கொண்டு வந்த தேர்தல் மசோதா என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

பொதுப் பிரிவிலுள்ள உயர் ஜாதியினர் கல்வியிலும் அரசு வேலைவாய்ப்பிலும் முன்னேறியவர்களாகவே உள்ளனர். கல்வி மற்றும் சமூக ரீதியில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்கு மாற்றமாக பொருளாதாரத்தை அளவுகோலாக வைத்து இடஒதுக்கீட்டை வழங்குவது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை திருப்திபடுத்துவது மட்டும்தான் அதன் நோக்கம் என்பதை அனைவரும் அறிவர்.

இட ஒதுக்கீட்டின் அளவு 50 சதவிதத்திற்கு மேல் இருக்க கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி பா.ஜ.க. அரசு செயல்பட்டுள்ளது என்றால் இவர்களின் நோக்கத்தை நாட்டு மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்நேரத்தில் இஸ்லாமிய சமூகத்தின் குமுறலையும் வெளிப்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இந்திய அளவில் கல்வி மற்றும் சமூக ரீதியில் பின்தங்கிய ஒரு சமூகம் இருக்குமென்றால் அது இஸ்லாமிய சமூகம்தான்.

தேசிய அளவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் அதிகமாக உள்ள சமூகம் இஸ்லாமிய சமூகமாகும்.
அடிப்படைக் கல்வி, வேலைவாய்ப்பு, கழிவறை வசதி, சொந்த வீடு, வருமானம், உள்ளிட்ட அனைத்திலும் தேசிய அளவில் மிக மிக பின்தங்கிய சமூகம் இஸ்லாமிய சமூகமாகும்.

அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்களின் அறிக்கைகளும் இதையே தெரிவித்துள்ளன. முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் வழங்கப்பட வேண்டும் என்பதே இவ்விரு கமிஷன்களின் பரிந்துரைகளாகும்.

இந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி இஸ்லாமிய சமூகம் பல ஆண்டுகளாக போராடியும் வருகின்றது.

இப்படி அடிப்படை உரிமைக்காக போராடிவரும் இஸ்லாமிய சமூகத்தை புறக்கணித்துவிட்டு குறிப்பிட்ட சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது சமூக அநீதி என்றே முஸ்லிம்கள் கருதுகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் நலனில் அக்கறை கொண்டு அவர்களை திருப்திபடுத்தும் வகையில் செயல்படும் மத்திய அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

இதை உணர்ந்து மத்திய அரசு பாரபட்சமின்றி நாட்டிலுள்ள அனைத்து சமூக மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இல்லையென்றால் மக்கள் விரோத பா.ஜ.க. அரசிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இப்படிக்கு
இ.முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்