புதுவகை ரோபோ உருவாக்கி கோவை அரசு கல்லூரி மாணவர்கள் சாதனை

Kovai_Arasukalluriஅரசு கல்லூரிகள் என்றாலே மட்டமாக கருதும் பெற்றோர்கள் நிறைந்த இந்த காலத்தில் கோவை அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் புதுவகை ரோபோவை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

இந்த ரோபோ, புத்தகத்தில் உள்ள வரிகளை, கண்பார்வையற்றவர்களுக்கு படித்துக் காட்டும்

கோவையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் (ஜி.சி.டி.,) பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் இறுதியாண்டு படிக்கும் மாணவர் ஸ்ரீ ரங்கநாதன். சிறு வயது முதலே, அறிவியல் தொடர்பான ஆய்வுகளில் அதிக ஆர்வமுள்ள இவர், ஜி.சி.டி., கல்லூரியில் சேர்ந்த பின்னும், தன் ஆய்வு முயற்சிகளை கைவிடவில்லை. ரங்கநாதனின் திறமையைக் கண்டு வியந்த துறை தலைவர் லஷ்மி பிரபா, சமுதாயத்துக்கு உதவும் வகையில் அறிவியல் கண்டுபிடிப்புகளை வடிவமைக்குமாறு ஊக்கம் கொடுத்தார். நண்பர்கள் அனந்த கிருஷ்ணன், ராஜேஷ் கண்ணன் ஆகியோருடன் இணைந்து புதிய நவீன ரோபோ கருவியை அவர் வடிவமைத்துள்ளார். கம்ப்யூட்டர் உதவியுடன் செயல்படும் இந்த ரோபோ, பார்வையற்றவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வந்துள்ளது. சிறு கார் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள ரோபோவின் முன்புறம் சக்திவாய்ந்த கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்ட ஆணைகள் மூலம், மனிதன் செய்யும் பல பணிகளை செய்து முடிக்கிறது.

இது பற்றி மாணவர்கள் ஸ்ரீரங்கநாதன், அனந்த கிருஷ்ணன், ராஜேஷ் கண்ணன் கூறியதாவது: சமுதாயத்துக்கு உதவும் வகையில் ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ, ஓட்டுனர் இல்லாமலேயே காரை இயக்கும். ரோட்டில் எதிரே வரும் வாகனங்கள், பொருட்கள், மனிதர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தாமல் செல்ல முடியும். சாலை விதிமுறைகளை மீறும் வாகனங்களின் நம்பர் பிளேட், கார் கலர் ஆகியவற்றை அடையாளம் கண்டு பிடிக்க உதவிகரமாக இருக்கும். இதன் மெமரியில் காரின் எண், கலரை பதிவு செய்து விட்டால் விரட்டி பிடித்து, அதில் உள்ள கேமரா மூலம், போலீசாருக்கு அடையாளம் காட்டி விடும். வீட்டில் இருந்தபடியே இயக்கலாம். இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பயங்கரவாதிகளால் கடத்தி மறைத்து வைக்கப்பட்டு இருப்பவர்களை, தானாக சென்று கண்டுபிடிக்க உதவும். மனிதன் நுழைய முடியாத சுரங்கங்களுக்குள் நுழைய முடியும். ரோபோவிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்தால், பார்வையற்றவர்களுக்கு உரக்க படித்துக் காட்டி விடும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அரசுப் பள்ளியில் படித்த மாணவன் ஸ்ரீ ரங்கநாதனின் தந்தை, கோவை சாயிபாபா காலனி பகுதியில் சைக்கிளில் டீ விற்பவர். மாணவர்களின் பெற்றோரும், ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிதக்கது. (செய்தி தினமலர்-24-12-2009)

பணக்கார கல்லூரிகளில் பல லட்சம் கொடுத்து தங்கள் பிள்ளைகளை சேர்த்து விட்டால் நம் பிள்ளை பெரியாளாகிவிடுவான் என்ற எண்ணம் அநேக பெற்றோர்களிடத்தில் உள்ளது.

ஒரு மாணவன் படித்து சாதனை படைப்பது என்பதை அவன் படிக்கும் கல்லூரியை வைத்து நிர்ணயிப்பது முற்றிலும் தவறு என்பற்கு மேற்கண்ட நிகழ்வு சிறந்த உதாரணம்.

ஒரு மாணவன் படிப்பில் சிறந்து விளங்க அவனிடத்தில் ஆர்வமும் அக்கறையும் இருந்தாலே போதும். அவன் எந்த கல்லூரியில் படித்தாலும் சரியே..

இந்த ஆர்வத்தை பெற்றோர்கள் தான் தங்களுக்கு பிள்ளைகளுக்கு சிறுவயது முதற்கொண்டு ஏற்படுத்த வேண்டும். இந்த கடமையை பெற்றோர்கள் சரியாக செய்துவிட்டால் நமது பிள்கைளும் சாதனையாளர்களாக  ஆகலாம் இன்ஷா அல்லாஹ்! அதற்கு லட்சங்கள் பல தேவையில்லை….

செய்தி தொகுப்பு: அபு நபீலா